Published:Updated:

``விளம்பரம் பார்த்து டிரெக்கிங் செல்வோர் கவனத்துக்கு..?!" - எச்சரிக்கும் வனத்துறை

"வன விலங்குகளுக்கு இது தனிநபர் இடம் என்றெல்லாம் தெரியுமா என்ன? வனத்துக்குள் இருக்கும் பட்டா நிலத்தில் விவசாயம் மட்டுமே பார்க்க முடியும். அந்த விவசாய நோக்கத்துக்காகச் சிறு கட்டடம் கட்டிக்கொள்ளலாம். அந்தக் கட்டடத்தையும் லாப நோக்கத்தோடு டூரிசத்துக்குப் பயன்படுத்தக் கூடாது."

``விளம்பரம் பார்த்து டிரெக்கிங் செல்வோர் கவனத்துக்கு..?!" - எச்சரிக்கும் வனத்துறை
``விளம்பரம் பார்த்து டிரெக்கிங் செல்வோர் கவனத்துக்கு..?!" - எச்சரிக்கும் வனத்துறை

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற 36 பேரில் 23 பேர் காட்டுத்தீயில் சிக்கி பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து வனப்பகுதியில் டிரெக்கிங் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது, வனத்துறை. இருந்தபோதும் சட்டவிரோதமாக வனத்துக்குள் டிரெக்கிங் அழைத்துச் செல்லப்படுவதும், அதன் மூலமாகத் தனிநபர்முதல் பெரும் நிறுவனங்கள்வரை பல ஆயிரங்கள் வரை லாபம் பார்ப்பதும் இன்றுவரை தொடர்கிறது.

சட்ட விரோத டிரெக்கிங் என்றால் என்ன?

மலைப்பகுதியில் வனத்துறையால் அனுமதிக்கப்பட்ட டிரெக்கிங் பாதை எனச் சில உண்டு. அப்பாதையில் மட்டுமே டிரெக்கிங் செல்ல அனுமதி உண்டு. பெரும்பாலும் அவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதால், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் உயர் வன அதிகாரியிடம் முன் அனுமதி பெறுவது அவசியம். பல இடங்களில், டிரெக்கிங் செல்ல வனத்துறை கட்டணம் வசூல் செய்து, வழிகாட்டியை உடன் அனுப்பிவருகிறது. குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தை எடுத்துக்கொண்டால், சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இரு பகுதிகளிலிருந்து வந்திருந்த 36 பேர் அனுமதிக்கப்படாத டிரெக்கிங் பாதையான குரங்கணி முதல் கொழுக்குமலைக்குச் சென்றதால்தான் காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவத்தை அடுத்து, அனுமதிக்கப்படாத வனப்பகுதியில் டிரெக்கிங் என்ற பெயரில் சென்றால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது வனத்துறை. அதைத்தொடர்ந்து டிரெக்கிங் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் டிரெக்கிங் அழைத்துச் செல்லும் நிறுவனங்களின் அங்கீகாரம்.

யார் வேண்டுமானாலும் வனத்துக்குள் செல்லலாம்!

``டிரெக்கிங் அழைத்துச் செல்லும் நிறுவனங்கள் வனத்துறையின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இன்று யார் வேண்டுமானாலும் வனத்துக்குள் செல்லலாம் என்ற நிலைதான் இருக்கிறது. குரங்கணிச் சம்பவத்துக்குப் பிறகு இதுவரை எத்தனை நிறுவனங்கள், தங்களை அங்கீகரிக்க வனத்துறையிடம் விண்ணப்பித்திருக்கிறது என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. டிரெக்கிங் அழைத்துச் செல்ல, தமிழகம் முழுவதும் சில தனி நபர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே சில ஏஜென்ட்களும் செயல்படுகிறார்கள். இந்தத் தனிநபர்களின் வேலை, பெரும் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களைக் குறிவைப்பதுதான். குறிப்பாக ஐ.டி. ஊழியர்களைக் குறிவைத்து அவர்களிடம் கட்டணம் வசூல்செய்து வனத்துக்குள் டிரெக்கிங் அழைத்துச் செல்கிறார்கள். இதற்காகச் சமூக வலைதளத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்தத் தனிநபர்களுக்கு ஆள்பிடித்துக்கொடுக்கும் ஏஜென்ட்களுக்கு ஒரு பங்கு போய்விடும். வனத்துறையில் இருக்கும் சிலருக்கும் அதில் தனியாகப் பங்கு சென்றுவிடும்.

குரங்கணி தீ விபத்தில் சிக்கிய ஈரோட்டிலிருந்து வந்த குழு, தனிநபர் ஒருவர் ஏற்பாட்டின் மூலமாக குரங்கணி ரேஞ்சர் ஜெய்சிங் உதவியுடன் வந்தவர்கள். இந்த விவகாரம் வெளியில் வர ஜெய்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனி நபர்கள், ஏஜென்டுகள் எனப் பெரிய வலை, வனத்துறையின் மேல் இருந்தாலும், பெரும் நிறுவனங்கள், இணையம் மூலமாக டிரெக்கிங் அழைத்துச்செல்ல விளம்பரம் செய்து பல ஆயிரங்களைக் கட்டணமாக வசூல் செய்து, வனத்துறையில் சிலரைக் கையில் வைத்துக்கொண்டு, அனுமதிக்கப்படாத வனத்துக்குள் அழைத்துச் செல்கிறார்கள். அந்தப் பெரும் நிறுவனங்களுக்கு டிரெக்கிங் அழைத்துச்செல்ல வனத்துறை அங்கீகாரம் கொடுத்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்றே பதில் கிடைக்கும். ஆனால், தங்களது இணைய முகவரியில், டிரெக்கிங் அழைத்துச் செல்லப்படுவதைப் பெரிய அளவில் விளம்பரம் செய்திருக்கும். இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி மேகமலையில் அனுமதி இல்லாமல் டென்ட் அமைத்த 11 பேர் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள், பிரபல நிறுவனத்தின் மூலமாகச் சட்டவிரோத டிரெக்கிங் வந்தவர்கள் எனத் தகவல். இப்படியான நிலை மாற வேண்டும். சட்ட விரோத டிரெக்கிங் கட்டுப்படுத்தப்பட்டு, தனிநபர்களானாலும், பெரிய நிறுவனங்கள் ஆனாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் போடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன்.

பிரபல நிறுவனம் ஏற்பாடு செய்த டிரெக்கிங்:

மேகமலையில் அனுமதிக்கப்படாத வனப்பகுதிக்குள் சிலர் செல்வதாக வனத்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி, ரோந்துப் பணியில் ஈடுபட்ட மேகமலை ரேஞ்சர் முருகன் தலைமையிலான வனத்துறையினர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக டென்ட் அமைத்து, ஃபயர் கேம்ப் போட்டிருந்த 5 குழந்தைகள் உட்பட 11 பேரைப் பிடித்தனர். பிரபல விளையாட்டுப் பொருள்கள் விற்பனை நிறுவனமான டெகத்லான் ஸ்போர்ட்ஸ் (decathalon sports) நிறுவனத்தின் மூலமாக இவர்கள் டிரெக்கிங் வந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்நிறுவனத்தில் பணிபுரியும் சுதர்சன் என்பவரும் அவர்களுடன் இருக்கவே, விசாரணையைத் துரிதப்படுத்திய வனத்துறை, முன் அனுமதியும் இல்லாமல், வனத்துக்குள் நுழைந்து டென்ட் அமைத்து ஃபயர் கேம்ப் போட்டதை உறுதிசெய்து அவர்களை ரேஞ்சர் அலுவலகத்துக்கு அழைத்துவந்தது.11 பேரையும் அழைத்துவந்த அந்தக்குழுவின் மேனேஜர் ராகவேந்திரன், ஆகாஸ் நாஸ் ஜோசப் ஆகியோரை அழைத்து விசாரணை செய்தது மாவட்ட வனத்துறை. இறுதியில், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 28 (D)ன்படி, சட்ட விரோத டூரிசம் ஏற்பாடு செய்து, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற குற்றத்துக்காக 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இது போன்ற சம்பவத்தில் அடுத்த முறை ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பியது.

கண்காணிப்பின்கீழ் டிரெக்கிங் நிறுவனங்கள் :

``வனத்துக்குள் செல்ல வேண்டும். அதன் அழகை ரசிக்க வேண்டும் என ஆசை இல்லாதவர்களே இல்லை எனலாம். வனம் எவ்வளவு அழகானதோ, அதே அளவு ஆபத்தானதும்கூட. எங்களிடம் அனுமதி பெறுங்கள், நாங்கள் வழிகாட்டியை அனுப்புகிறோம் என்று அதற்காகத்தான் சொல்கிறோம். யார் உங்களை அழைத்துச் செல்கிறார்கள் என்று பார்ப்பது மிகவும் அவசியம். எந்த வனப்பகுதிக்குள் செல்கிறோம். அது எந்த மாவட்டத்தின்கீழ் உள்ளது. அதற்கு யார் உயர் அதிகாரி என்றெல்லாம் இணையத்திலேயே தகவலைத் திரட்ட முடியும். அனைத்தையும் தெரிந்துவைத்துக்கொண்டு, உங்களை அழைத்துச் செல்லும் தனி நபரோ, பெரும் நிறுவனமோ, அவர்களிடம் முன் அனுமதி பெற்றிருக்கிறீர்களா என்று கேட்க வேண்டும். 

ஆனால், அவர்கள் வனத்துறையிடம் எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை. வனத்துக்குள் இருக்கும் சில தனிநபர்களின் பட்டா நிலங்களைக் குறிவைக்கும் இதுபோன்ற பெரும் நிறுவனங்கள், வனத்துக்குள் டென்ட் அமைத்தால்தான் அனுமதி வாங்க வேண்டும், பட்டா நிலத்தில் டென்ட் அமைக்க யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை என நினைக்கிறார்கள். அப்படி இல்லை. வனத்துக்குள் பட்டா நிலம் இருக்கிறது. எங்கே அதில் ஒரு கட்டடம் கட்டுங்கள் பார்க்கலாம். நிலம் தனிநபருடையதாக இருக்கலாம். ஆனால், அது வனத்துக்குள்தான் இருக்கிறது. மேலும், வன விலங்குகளுக்கு இது தனிநபர் இடம் என்றெல்லாம் தெரியுமா என்ன? வனத்துக்குள் இருக்கும் பட்டா நிலத்தில் விவசாயம் மட்டுமே பார்க்க முடியும். அந்த விவசாய நோக்கத்துக்காகச் சிறு கட்டடம் கட்டிக்கொள்ளலாம். அந்தக் கட்டடத்தையும் லாப நோக்கத்தோடு டூரிசத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. இந்த விவரம் யாருக்குமே தெரிவதில்லை.

விவசாய நோக்கத்தோடு, பாரம்பர்யமாக வனத்துக்குள் பட்டா நிலம் வைத்திருக்கும் யாரும் இப்படியான காரியத்தில் ஈடுபடுவதில்லை. அப்படியானவர்களை இந்தப் பெரும் நிறுவனங்கள் அணுகுவதில்லை. பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மற்றும் தங்களுடைய இணைய முகவரியில் டிரெக்கிங் குறித்து விளம்பரம் செய்யும் இவர்களைக் கண்காணிக்க விரைவில் உத்தரவு வர இருக்கிறது. அதன் அடிப்படையில், எந்தெந்த பகுதிக்கு இவர்கள் சட்ட விரோத டிரெக்கிங் செல்கிறார்கள். அதற்கு யார் யார் உதவுகிறார்கள் என்றெல்லாம் ரகசிய விசாரணை செய்ய இருக்கிறோம். சமூக வலைதளங்களில் டிரெக்கிங் குறித்த விளம்பரம் இருந்தால், அதற்கு நீங்கள் பணம் கட்டுவதற்கு முன்பாக, எங்களது இணைய முகவரிக்குச் சென்று, சம்பந்தப்பட்ட மாவட்ட உயர் அதிகாரியின் மின்னஞ்சல் முகவரிக்கு அந்த விளம்பரத்தை அனுப்பி, இவர்கள் டிரெக்கிங் செல்ல அனுமதி பெற்றிருக்கிறார்களா எனக் கேட்கலாம். அதற்கு உடனே பதில் கிடைக்கும். விளம்பரத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தாலும், எங்களிடம் உடனே தெரியப்படுத்துங்கள். மேகமலையில் பிடிபட்டவர்களில் குழந்தைகள் இருந்ததால், மனிதாபிமான அடிப்படையில் ரூபாய் 7  லட்சம் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. இல்லையென்றால், சிறைக்குத்தான் செல்ல வேண்டும்” என்றார், வனத்துறை அதிகாரி ஒருவர்.

சமைப்பதற்கு எண்ணெய் வாங்குவதாக இருந்தாலும், அதன் பின்புலத்தைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகே வாங்கும்போது, ஆபத்தாக வன விலங்குகள் இருக்கும் வனத்துக்குள் அழைத்துச் செல்லும் தனி நபர்களோ, பெரும் நிறுவனங்களோ பற்றிய விசாரணையில் இறங்காதது நம் தவறே. இனியாவது விழித்துக்கொண்டால், வனத்தின் அழகு நாம் எப்போதும் பார்த்து ரசிப்பதாகவே இருக்கும்.