Published:Updated:

`தூக்கத்தைத் தொலைத்த வேலூர் மக்கள்!’- ஊருக்குள் சிறுத்தை நுழைந்ததற்கு யார் காரணம்?

`தூக்கத்தைத் தொலைத்த வேலூர் மக்கள்!’- ஊருக்குள் சிறுத்தை நுழைந்ததற்கு யார் காரணம்?
`தூக்கத்தைத் தொலைத்த வேலூர் மக்கள்!’- ஊருக்குள் சிறுத்தை நுழைந்ததற்கு யார் காரணம்?

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் ஏரிக்கரையில் நேற்று பதுங்கியிருந்த சிறுத்தை, பெண் உட்பட 3 பேரை தாக்கியது. கரும்புத் தோட்டத்தில் பதுங்கிய அந்தச் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் முயன்றனர். அப்போது, கரும்புத் தோட்டத்திலிருந்து வெளியே பாய்ந்து வந்த சிறுத்தை, அங்கு சூழ்ந்திருந்த 300-க்கும் மேற்பட்டோரை விரட்டியது. சிறுத்தைக்கு பயந்து அங்கு திரண்டிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினரிடம் சிக்காமல் சிறுத்தை தப்பி ஓடிவிட்டது. சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரவு, பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சூழலியல் ஆர்வலர் `ஓசை’ காளிதாசன், ``புலி , சிறுத்தை போன்றவை தங்களுக்கென வாழ்விட எல்லை (territory) வகுத்துக்கொண்டு பெரும்பாலும் தனித்தே வாழும் இயல்புடையவை. தாயிடமிருந்து பிரியும் ஒவ்வொரு புலிக்குட்டியும் இன்னொரு புலி இல்லாத ஒரு வாழ்விடத்தைத் தேட வேண்டியிருக்கும். வாழ்விடத்துக்கான போட்டியில் ஏற்படும் சண்டையில் தோல்வியுற்ற விலங்கும் வேறு வாழ்விடம் தேட வேண்டி வரும். புதிதாகக் குடிபுகும் இடத்தில் அதற்கான இரை விலங்குகள் இருக்க வேண்டும். அவ்வாறு இடம் பெயரும் சில பெரும் பூனைகள் காட்டின் விளிம்புகளில் வாழும். அவை  சில நேரங்களில் நமது நாய், ஆடு, மாடு போன்றவற்றைத் தேடி வரும். பெரும்பாலும் இரவில்தான் தேடுதல் இருக்கும். விடிவதற்குள் திரும்பிவிடும். 

மனித நடமாட்டம் இருந்தால் மறைந்து மறைந்து நகரும். எப்போதும் மனிதர்களிடம் அவற்றுக்கு அச்ச உணர்வே இருக்கும். அரிதாக சில நேரங்களில் வழிதவறி விடுவதாலும் அச்சத்தில் எங்காவது மறைந்திருப்பதாலும் காட்டுக்குத் திரும்ப முடியாமல் மனிதக் குடியிருப்புப் பகுதியிலேயே இருந்து விடுகின்றன. அவற்றைக் காணும் நாம் கூட்டமாகத் திரண்டு விரட்டும்போது அவை பீதியடையும். தன்னைக் காத்துக்கொள்ளும் முனைப்பில் நம் மீது பாய்ந்து விடும். அப்படித்தான் நேற்றைய சம்பவம் நடந்துள்ளது. 

புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் மூர்க்க குணம் உடையவைதாம். தன்னைவிட வலிமையான விலங்குகளையும் வேட்டையாடி வீழ்த்தும் திறன் கொண்டவை. ஆனால், அவற்றின் உணவுப் பட்டியலில் மனிதர்கள் இருப்பதில்லை. மனிதர்களை கண்டு அவை ஒதுங்கவே செய்யும். எனவே நேற்றைய சம்பவத்தை அரிதான நிகழ்வாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்

 நீலகிரி, வால்பாறை போன்ற இடங்களில் மனிதக் குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது ஒப்பீட்டளவில் அதிகம். அங்கு குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பது பல இடங்களில் தானியங்கி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இரவில் வரும் விலங்குகள் விடிவதற்குள் காட்டுக்குத் திரும்பிவிடும். 


சிறுத்தைகள் ஊர்ப் பகுதிக்குள் வருவது அரிதாகவே நடந்தாலும் இத்தகைய நிகழ்வுகளின்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே முக்கியம். மனிதக் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தையைக் கண்டால் கூட்டம் கூடி விரட்டுவதை தவிர்த்துவிட்டு உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தர வேண்டும். அவை பதுங்கியுள்ள இடம் அருகே செல்லாமல் அதன் நடமாட்டத்தைக் கவனிக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் அவை பெரும்பாலும் அங்கேயே பதுங்கி இருக்க வாய்ப்புகள் அதிகம். அதற்குள் வனத்துறையினர் வந்து விடுவர். மாறாக நாமாக துரத்தத் தொடங்கினால் அவையும் எதிர்த் தாக்குதல் நடத்தக்கூடும். அத்தகைய விலங்குகளைப் பிடிக்கும் முயற்சி நடக்கும் போதும் பொதுமக்கள் ஒரு பாதுகாப்பான தொலைவில் இருக்கவேண்டும். நாலாபக்கமும் கூடி இருக்கக் கூடாது. வனத்துறையினரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல்துறை உதவவேண்டும்.  

சிறுத்தைகளிடம் ``சீற்றப் படாதே " என்று வகுப்பு எடுக்க முடியாது. மக்களிடம்தான் கூற முடியும். விலங்குகள் காட்டை விட்டு வெளி வருவதை முற்றிலும் தடுக்க இயலாது. ஆனால், இத்தகு நிகழ்வுகள் அரிதாக நடப்பவையே காட்டில் மான்கள் வேட்டையாடப்படுவதை அறிந்தால் அதை உடனடியாக நாம் தடுக்க வேண்டும். மான்தானே என்று விட்டுவிட்டால் இரை விலங்குகள் குறைந்து உணவு கிடைக்காதபோது பெரிய ஊனுண்ணிகள் காட்டைவிட்டு வெளியே வரத் தொடங்கும். 

வால்பாறை போன்று நாலாபக்கமும் காடுகள் உள்ள பகுதிகளில் குடியிருப்புகள் அருகே போதிய வீதி விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். முறையான கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். பிரதான சாலைக்கும் குடியிருப்புக்கும் இடையே உள்ள குறுகிய பாதைகளை அகலப்படுத்தி போதிய அளவு சாலை விளக்குகள் அமைத்திட வேண்டும். எங்காவது கால்நடைகள் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றால் அத்தகைய விலங்குகளைப் பிடித்து வேறு காட்டில் விடுவதே சிறந்த வழி. 

சிறுத்தைகள் நடமாட்டம் இருந்தாலே அச்சப்படத் தேவையில்லை. ஆனால் எச்சரிக்கை அவசியம். எல்லா சிறுத்தைகளையும் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தவறானது. சில நேரம் ``காட்டுப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம்" எனச் செய்தி வருகிறது. காட்டுப் பாதையில் மனிதர்கள் நடமாட்டம் தானே செய்தியாக வேண்டும்.

சிறுத்தைகள் எத்தகைய சூழலிலும் வாழ பழகிக்கொள்ளும். புலியைப்போல் சிறுத்தைகள் எப்போதும் பெரிய விலங்குகளையே உணவாகக் உட்கொள்ளும் என்பதல்ல. சில நேரங்களில் எலி, நண்டு போன்ற சிறு உயிர்களை உண்டுகூட சிறுத்தைகள் வாழ்ந்து விடும். (ஊனமுற்று வேட்டையாட முடியாத நிலையில் புலியும் அப்படித்தான் வாழும்.) அதனால் சில இடங்களில் தேயிலைத் தோட்டம், கரும்புத் தோட்டம் போன்றவற்றில் தங்கிவிடுகின்றன.

மகாராஷ்டிராவில் கரும்புத் தோட்டத்தில் சிறுத்தைகள் தங்கிவிடுவதால் மனித - சிறுத்தை பிணக்கு அங்கு அதிகம். அத்தகைய சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு வேறு இடத்தில் விடப்படுகின்றன. அதனால் அந்தப் பிரச்னை தீர்ந்து விடுவதில்லை என்பதே ஆய்வுகளில் அறிய முடிகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப வேறு சிறுத்தை அங்கு வந்து விடும் வாய்ப்புகள் அதிகம். எல்லாப் பக்கமும் காடு சூழவுள்ள பகுதிகளில் பழங்குடிகள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒருபோதும்  தங்களைச் சுற்றி புலிகள், சிறுத்தைகள் இருப்பதாகக் குறை கூறுவதில்லை. அதேபோல் காட்டின் ஓரம் வாழும் மக்களும் `நாமும் வாழ்வோம் புலிகளும் வாழட்டும்' என்ற மனநிலைக்கு மாற வேண்டும். இவற்றில் ஆட்கொல்லிகளைப் பற்றிய விவரம் வேறுவிதமானது'' என்று முடித்துக்கொண்டார்.