Published:Updated:

'பணியறிஞ்ச ஆனைங்க இது!'... `ஒருநாள் மாவூத்துகளை' கவர்ந்த மதுரை சுமதி யானை

`உங்களுக்கு என்னைப் பிடிக்குமா? அப்போ, வாங்க பழகலாம்’ என்று அன்போடு அழைக்கின்றது, மதுரையின் செல்லப்பிள்ளையாய் வலம் வரும் சுமதி யானை. 

'பணியறிஞ்ச ஆனைங்க இது!'... `ஒருநாள் மாவூத்துகளை' கவர்ந்த மதுரை சுமதி யானை
'பணியறிஞ்ச ஆனைங்க இது!'... `ஒருநாள் மாவூத்துகளை' கவர்ந்த மதுரை சுமதி யானை

மூகத்தில் விலங்குகள் குறித்த அறியாமையும், அவை குறித்த மூடநம்பிக்கைகளும் அதிகம். பூனை, பாம்பு, யானை, குரங்கு என அந்தப் பட்டியல் மிகப்பெரியது. இதில் யானைகள் குறித்து மக்களிடம் நிலவும் பொய்யான நம்பிக்கைகளை உடைப்பதற்காகவும், யானைகள் குறித்து மக்களிடையே விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மக்களுக்குப் பயிற்சிமுகாம் ஒன்றை நடத்திவருகிறார் மதுரையைச் சேர்ந்த மதன்பாபு. இவரின் யானையான சுமதியும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது.

இந்தச் சந்திப்புக்கு `ஒருநாள் மாவுத்தன் பயிற்சி' எனப் பெயர் வைத்திருக்கிறார் மதன்பாபு. ``மலைகள் சூழ்ந்த கேரளம் மாதிரியான குளு குளுப் பகுதிகளில்தான் சுற்றுலாக்களில் ஒன்றாக யானை சவாரி, யானைகளைப் பழக்கும் பயிற்சி, யானைகளுடனான விளையாட்டு எனப் பொழுதுபோக்குகள் நிறைந்திருக்கும். ஆனால், நம் மதுரை மாநகரில் விழிப்புஉணர்வு நோக்கில் இதுபோன்ற ஒரு பயிற்சி அளிக்கப்பட்டால் எத்தனை சிறப்பாக இருக்கும்? அதைத்தான் செய்து வருகிறோம்” என்கிறார், இவர்

பணியறிஞ்ச ஆனை என்று கேரளாவில் சொல்வார்கள். சொன்னதை அடம்பிடிக்காமல் கேட்டு அதன்படி பணிசெய்யும் அறிவுமிக்க யானையைக் குறிக்கும் சொல், அது. ``இந்த சுமதி யானை அப்படி பணியறிஞ்ச ஆனைங்க!" என்கிறார் மதன்பாபு. தன்மீது அன்பும் அக்கறையும் ஆர்வமும் கொண்டு தன்னை நெருங்கும் எவருக்கும் இந்த யானை அடங்கிப்போகிறது. சிறுகுழந்தையின் கட்டளைகளுக்கும் செவி மடுக்கின்றது, இந்தப் பணியறிஞ்ச ஆனை.

யாரையும் எளிதில் கவர்ந்துவிடுவதாலும், யாரும் தயக்கமின்றி நெருங்கிப் பழக முடியும் என்பதாலும் இந்த யானையை ஏதேனும் நல்லதொரு நோக்கத்திற்காகப் பயன்படுத்தவேண்டும் என எண்ணிய மதன்பாபுவுக்கு எட்டியதுதான் இந்த யோசனை. யானை ஆக்ரோஷமான விலங்கு, மனிதனைத் துன்புறுத்தக் கூடியது என்றெல்லாம் தவறான நம்பிக்கைகள் நம்மிடையே பரவிக்கிடக்கின்றன. ``மனிதனின் தவறான அணுகுமுறையும், சுயநலமும்தான் யானை போன்ற சாதுவான விலங்குகளையும் கோபமுறச் செய்கிறது என்ற விழிப்பு உணர்வை இந்தப் பயிற்சியின் மூலம் அடைய முடியும் என்பது எனது திடமான நம்பிக்கை” என்கிறார், மதன்பாபு.

இந்த ஒருநாள் பயிற்சி, காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணிவரை. இதில் முதல் செஷனாக யானைகளுக்கான பாதுகாப்புகள் குறித்துப் பாகன்கள் நம்மிடம் விளக்குகிறார்கள். மேலும், யானையின் தன்மைகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து நிலவுகிற மூடநம்பிக்கைகளை நம்மிடம் விவரித்து அதன் உண்மை விவரங்களையும் நமக்கு எடுத்துச்சொல்கின்றனர். யானை பயம் உள்ளிட்ட வீண் எண்ணங்களைத் தொலையச்செய்வதால், யானையிடம் கொஞ்சம் கொஞ்சமாய் நம்மால் நெருங்க முடிகின்றது. அடுத்து மதியவேளை செஷனில் யானையைக் குளிப்பாட்டுதல், பின்பு அதற்கு உணவூட்டுதல் என முழுமையாய் அதனுடன் பழகிவிடலாம். தொடர்ந்து நமக்கும் சுடச்சுடச் சாப்பாடு வருகின்றது. கிராமத்து மண் மணத்தோடு ருசியான சமையல். அதைத் தொடர்ந்து, யானையை வழிநடத்துவதற்கான பயிற்சிகளைப் பாகன்கள் சொல்லிக் கொடுக்கின்றனர். குழந்தைகள் வந்திருந்தால், அவர்களோடு யானை விளையாடி மகிழும். குழந்தைகளின் மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும்?

அத்துடன், பல்லாண்டு காலமாய் யானைகளின் தன்மை அறிந்து முழுமையான அனுபவங்களைப் பெற்ற யானைப்பாகன்களோடு பேசி யானைகள் குறித்த நமது ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு பயிற்சிகள் முடிந்ததும் இந்த `யானையுடன் ஒருநாள்’ பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதோடு அன்றைய பகல் இனிதே நிறைவடையும். 

3 பேர் வரையிலும் எனில் ரூ.1,500 ரூபாயும், 5 பேரிலிருந்து 7 பேர் வரையெனில் ரூ.2,500 ரூபாயும் இந்தப் பயிற்சிக்குக் கட்டணமாம். பாகன்களுக்குச் சம்பளம், மதிய உணவு, யானைக்கான பராமரிப்புச் செலவுகள் எல்லாம் சேர்த்து இந்தத் தொகை என்கின்றனர். ``இந்தப் பயிற்சியைப் பற்றி ஃபேஸ்புக்ல தெரிஞ்சுக்கிட்டு நிறைய நண்பர்கள் தங்களோட ஆதரவையும் ஆர்வத்தையும் தெரிவிச்சிருக்காங்க. சென்னையில இருந்து டிவி தொகுப்பாளர்கள், நடிகர் நடிகைகள், ஆர்வலர்கள்ன்னு அதிகமானவங்க வர்றாங்க. பணம் சம்பாதிக்கிறது என்னோட நோக்கமில்ல. நம்மை எந்த உயிரும் தொந்தரவு செய்யிறதில்லை. நாமதான் அதுங்களை இம்சை பண்ணாம இருக்கணும்ங்கிறத நாம புரிஞ்சிக்கணும். அவ்ளோதான்” என்கிறார், இவர்.

யானைகள் குறித்து எப்போதும் நினைவில்கொள்ள வேண்டிய விஷயம் இது.