Published:Updated:

கஜா புயல் தாக்கம்... முட்டையிட வரவில்லையா ஆமைகள்!?

அழிந்துவரும் ஆமை இனங்களைப் பாதுகாத்து வளர்க்க வன உயிரினப் பாதுகாப்பு ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆமைகள் முட்டையிடும் கடலோரப் பகுதிகளில் குஞ்சு பொறிப்பகம் அமைத்துள்ளனர்.

கஜா புயல் தாக்கம்... முட்டையிட வரவில்லையா ஆமைகள்!?
கஜா புயல் தாக்கம்... முட்டையிட வரவில்லையா ஆமைகள்!?

ஜா புயலின் கோர தாண்டவம் கடலோர மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல...  கடலின் தூய்மைக் காவலனாக விளங்கும் ஆமைகள் முட்டையிடும் செயலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரந்து விரிந்துகிடக்கும் கடற்பரப்பின் தூய்மைக் காவலனாக விளங்குவன ஆமைகள் ஆகும். இந்தியக் கடல் பரப்புகளில் 5 வகையான ஆமைகள் உள்ளன. சமீபகாலங்களாக மாறிவரும் தட்பவெட்பச் சூழலாலும், சுற்றுச்சூழல் மாசினாலும், மனிதர்களின் இரக்கமற்ற செயலாலும் இந்த ஆமை இனங்கள் அருகி வருகின்றன. ஆமை இனங்கள் கடலில் வாழ்ந்தாலும் அவை முட்டையிட்டு, குஞ்சு பொறிப்பதற்குக் கடற்கரையோர மணல் பரப்புகளையே நாடிவருகின்றன. ஆமைகள் உருவாகும் கடலோரப் பகுதிகள் சமீபகாலமாகக் கட்டுமானம், சாலைகள், கடல் அரிப்பு தடுப்புச் சுவர்கள் போன்றவையாக மாறி வருகின்றன. இவற்றுடன் இயற்கைச் சீற்றங்களும் ஆமைகளின் இனப்பெருக்கத்துக்கு இடையூறாக இருந்துவருகின்றன. இதனால் தங்களின் வாழ்விடச் சூழலை இழந்து தவிக்கின்றன ஆமைகள். மேலும், அருகி வரும் உயிரினங்கள் பட்டியலில் கடல் ஆமையும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகளவிலான சித்தாமைகள் வாழ்ந்துவருகின்றன. அழிந்துவரும் ஆமை இனங்களைப் பாதுகாத்து வளர்க்க வன உயிரினப் பாதுகாப்பு ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆமைகள் முட்டையிடும் கடலோரப் பகுதிகளில் குஞ்சு பொறிப்பகம் அமைத்துள்ளனர்.

பொதுவாக ஆமைகள் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை முட்டையிடத் தொடங்குகின்றன. தனுஷ்கோடியின் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல்பரப்பில் தனுஷ்கோடி அரிச்சல்முனை தொடங்கி, தூத்துக்குடி வரை ஆமைகள் முட்டையிடும் பகுதியாகும். தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த ஆண்டு அரிச்சல்முனை தொடங்கி தூத்துக்குடி இடையிலான கடலோரப் பகுதிகளில் சுமார் 27 ஆயிரம் முட்டைகளைக் குஞ்சு பொறிப்பதற்காக ஆமைகள் விட்டுச் சென்றன. இதில் மண்டபம் வனச்சரகத்துக்குட்பட்ட மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் மட்டும் சித்தாமை வகையினைச் சேர்ந்த 20,500 முட்டைகள் சேகரிக்கப்பட்டன. இவற்றைச் சேகரித்த மண்டபம் வன உயிரினக் காப்பகத்தின் அலுவலர்கள் பாதுகாப்புடன் குஞ்சு பொறிக்கச் செய்து கடலில் விட்டனர். ஆனால், சென்ற டிசம்பர் மாதம் தொடங்கி இன்றுவரை முட்டையிட ஆமைகள் ஏதும் கடலோரப் பகுதிக்கு வராத நிலையில் ஒரு முட்டைகூடக் கிடைக்கப்பெறவில்லை.

கடந்த நவம்பர் மாதம் தமிழக கடலோரப் பகுதிகளைத் தாக்கிய கஜா புயலின் தாக்கமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.  பொதுவாக டிசம்பர் மாதங்களில், மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பார்வையில் ஏராளமான ஆமைகள் தென்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஆமைகளின் புழக்கத்தினைக் காண முடியவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கஜா புயலின் தாக்கம் தொடர்ந்ததால், வழக்கமாக முட்டையிட வரும் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியினை ஆமைகள் புறக்கணித்து இலங்கை கடலோரப் பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மண்டபம் வன உயிரினப் பாதுகாப்பகத்தின் வனச்சரகர் சதீஷ், ``இந்திய அளவில் ஒடியா கடலோரப் பகுதிகளில் அதிகளவிலான ஆமைகள் முட்டையிட்டுச் செல்கின்றன. இவற்றின் மூலம் அங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் அதிக அளவிலான ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொறிக்கவைக்கப்பட்டன. இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாத தொடக்கத்திலேயே ஆமை முட்டை சேகரிப்புப் பணிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். ஆனால் இதுவரை ஓர் ஆமைகூட, முட்டையிடக் கடலோரப் பகுதிக்கு வரவில்லை. மேலும், மீனவர்களின் பார்வையிலும் அவை படவில்லை. நவம்பரில் ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட பருவ நிலை மாற்றமே இதற்குக் காரணமாகத் தெரிகிறது. இந்த மாற்றத்தினால் இலங்கைக் கடலோரப் பகுதிக்கு ஆமைகள் சென்றிருக்கலாம் எனக் கூற முடியாது. ஏனெனில், ஓர் ஆமையானது எந்த இடத்தில் குஞ்சாக உருவாகிறதோ... அதே இடத்தைத்தான் தான் முட்டையிடும் இடமாகவும் தேர்வு செய்கிறது. எனவே, இம்மாதம் 15-ம் தேதிக்கு மேல் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளுக்குக் கடல் ஆமைகள் முட்டையிட வரும் வாய்ப்பு உள்ளது. அவற்றைச் சேகரித்து குஞ்சுபொறிக்கத் தேவையான நடவடிக்கைகளும் தயாராக உள்ளது'' என்றார்.

கடலோர நிலப்பரப்புகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிச் சென்ற கஜா புயல், கடல் ஆமைகளின் வாழ்விலும் விளையாடிச் சென்றுள்ளது.