Published:Updated:

பொங்கல் பண்டிகை -எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் களை கட்டிய ஆடு விற்பனை!

பொங்கல் பண்டிகை -எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் களை கட்டிய ஆடு விற்பனை!
பொங்கல் பண்டிகை -எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் களை கட்டிய ஆடு விற்பனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியுள்ளது. இந்த ஆண்டு ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால்  ஆடு விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் உள்ள ஆட்டுச்சந்தைகளில் மிகவும் சிறப்பு பெற்றது தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச்சந்தை. இங்கு விரும்பும் இன ஆடுகள் திரட்சியான உடல் அமைப்புகளுடன் கிடைப்பது மட்டுமில்லாமல் விற்பனையிலும், நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் ஆட்டு வியாபாரிகள் இங்கு கூடுவார்கள்.  எட்டயபுரத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இங்கு சந்தை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தார், விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்களில் முழுமையாக மழையை நம்பி நடைபெறும் மானாவாரி விவசாயம் மட்டுமே நடைபெற்று வருகிறது. இதனால், இந்த தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் ஆடு வளர்ப்பினை  முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

இப்பகுதிகளைச் சேர்ந்த ஆடு வளர்ப்பவர்களுக்கு எட்டயபுரத்தில் உள்ள ஆட்டுச்சந்தைதான் முக்கியமான விற்பனை மையம். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமில்லாமல் நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன. வழக்கமான சந்தை நாட்களில் ரூ.1 கோடி முதல் 2 கோடி வரையிலும் ஆடுகள் விற்பனையாகும். பண்டிகை நாட்கள், திருவிழாக் காலங்களில் ரூ.5 கோடி முதல் 6 கோடி வரையிலும் விற்பனையாகும். தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளை விடவும் பொங்கல் பண்டிகைக்குதான் இந்த ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விறபனை அதிமாக நடைபெறும்.

இந்நிலையில், வரும் செவ்வாய்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விற்பனை களைகட்டியது. கடந்த ஆண்டு ஓரளவு மழைப்பொழிவு, மானாவாரி விவசாயம் ஆகியவை சீராக இருந்ததால் சந்தைக்கு ஆடுகளின் வரத்தும் அதிகமாகக் காணப்பட்டது. சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை இன்று விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. குறைந்த பட்சம் ரூ.4 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.18 ஆயிரம் வரையில் ஆடுகள் எடைக்கு ஏற்ப விற்பனையாகியது. இந்த ஆண்டு சுமார் ரூ.7 கோடி வரை விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆடுகள் வாங்குவதற்காக சந்தைக்கு வந்திருந்த நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த கோமதிசங்கர் கூறுகையில், “மேலப்பாளையம், அருப்புக்கோட்டை, திருமங்கலம் ஆகிய ஆட்டுச்சந்தைகளில் கிடைக்காத ஆடுகளை இந்த சந்தையில பார்க்க முடிஞ்சுது. நாட்டு இனங்களான கன்னி ஆடுகள், கொடி ஆடுகளில் கரும்போர், சிவலைப்போர் ஆகிய வகை ஆடுகள் அதிகமாக உள்ளது. செம்மறி ஆட்டு  இனங்களில் செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, கீழக்கரிசல், மேலக்கரிசல், வெம்பூர் பொட்டுப்போர், கச்சகட்டி ஆடு, வெம்பூர் வெள்ளை, ராமநாதபுரம் வெள்ளை ஆகிய ஆடுகளின் வரத்தும் அதிகமா இருந்துச்சு.

இது தவிர, மேச்சேரி, ஜமுனாபாரி, திருச்சி கருப்பு, கோயமுத்தூர் குரும்பை ஆகிய இன ஆடுகளுடன் புதுவரவாக விற்பனைக்கு வந்திருக்கு. அதே நேரத்தில் ஆடுகளின் வரத்து அதிகமானதால் விலையும் மலிவாக இருக்கு.” என்றார் சந்தோஷம் பொங்க. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முந்தைய ஆட்டுச்சந்தையில் ஆடுகளின் விற்பனை ரூ.6 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக ஒரு கோடி என, ரூ.7 கோடிக்கு விற்பனையானதால் விவசாயிகள், ஆடு விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.