Published:Updated:

அம்மன் சிலைமீது அமர்ந்த 'கோபக்கார' கிளி! -பாசப் போராட்டம் நடத்தும் உரிமையாளர்

அம்மன் சிலைமீது அமர்ந்த 'கோபக்கார' கிளி! -பாசப் போராட்டம் நடத்தும் உரிமையாளர்
அம்மன் சிலைமீது அமர்ந்த 'கோபக்கார' கிளி! -பாசப் போராட்டம் நடத்தும் உரிமையாளர்

கோவையில், உரிமையாளர் திட்டியதால் கோபித்துக்கொண்ட பச்சைக்கிளி, அம்மன் கோயிலில்  தஞ்சம் அடைந்துள்ளது.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, முருகேசன். இவர், கடந்த ஓராண்டாக ஒரு பச்சைக்கிளியை வீட்டில் வளர்த்துவந்தார். நேற்று, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டை வெள்ளை அடிக்கும் பணியை முருகேசன் செய்துள்ளார். இதற்கு இடையூறாகச் சுற்றிவந்த கிளியை, முருகேசனின் மகன் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த கிளி, வீட்டிலிருந்து பறந்துசென்றுவிட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் தேடியும் கிளி கிடைக்கவில்லை.

இதனிடையே, கோபித்துக் கொண்ட கிளி, அருகே உள்ள பிளேக் மாரியம்மன் கோயிலில் தஞ்சம் அடைந்தது. அங்குள்ள மாரியம்மன் சிலைமீது ஏறி அமர்ந்த கிளி, அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்துள்ளது. கோயில் பூசாரி அம்மன் சிலையை அலங்கரித்தபோது, கோயில் மண்டபத்துக்குள் சென்ற கிளி, மீண்டும் அம்மன் சிலையின் வலது தோள்பட்டை  மீது வந்து அமர்ந்தது.

இதுகுறித்து அறிந்த முருகேசன் குடும்பத்தினர் வந்து அழைத்தபோதும் செல்லாமல், கிளி சிலைமீதே அமர்ந்திருந்தது. இந்நிலையில், கோயில் பூசாரி ஹரிபிரசாத், அம்மன் சிலைக்கு மீனாட்சி அலங்காரம் செய்தும், கிளிக்குத் தேவையான மிளகாய்,கொய்யா உள்ளிட்ட உணவுகளைக் கொடுத்தும்வருகிறார். ஒரு நாளுக்கு மேலாகியும் அம்மன் சிலையைவிட்டு நகர மறுக்கும் கிளியை சுற்றுவட்டார பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் வந்து பார்த்துவருகின்றனர்.