Published:Updated:

`இது காட்டுத்தீ காலம்..!' - குரங்கணியில் டிரெக்கிங் செல்ல மீண்டும் தடை

`இது காட்டுத்தீ காலம்..!' - குரங்கணியில் டிரெக்கிங் செல்ல மீண்டும் தடை
`இது காட்டுத்தீ காலம்..!' - குரங்கணியில் டிரெக்கிங் செல்ல மீண்டும் தடை

குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ பரவும் காலம் என்பதால் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி டிரெக்கிங் சென்ற 23 பேர் உடல் கருகி பரிதாபமாகப் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதனால் குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்ல தடை விதித்தது வனத்துறை. மேலும், அங்கீகரிக்கப்பட்ட டிரெக்கிங் பாதையான குரங்கணி-சென்ரல்ஸ்டேஷன் − டாப் ஸ்டேசன் ஆகிய பாதையிலும் தடைவிதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 8 மாதங்களுக்குப் பிறகு, கடந்த 30.11.2018 அன்று அங்கீகரிக்கப்பட்ட அப்பாதையில் டிரெக்கிங் செல்ல அனுமதி வழங்கப்பட்டு புதிதாகக் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் லெட்சுமிபுரம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாகக் காட்டுத் தீ எரிந்து வருகின்றது. இக்காலம் தீ பரவும் காலம் என்பதால் பாதுகாப்பு கருதி மாவட்ட வனத்துறை குரங்கணி - டாப்ஸ்டேஷன் பகுதியில் டிரெக்கிங் செல்ல இன்று முதல் தடை விதித்துள்ளது. மேலும், மலை ஏற்றத்துக்கான தடையை நீக்குவதற்குத் தொடர்பான அறிவிப்பு வரும்வரை குரங்கணியில் யாரும் டிரெக்கிங் செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.