Published:Updated:

பணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள்! - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்!

பணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள்! - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
பணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள்! - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்!

புதியதொடர்

பணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள்! - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்!

புதியதொடர்

Published:Updated:
பணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள்! - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
பணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள்! - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்!

யற்கைச்சீற்றம், விலையின்மை, ஆள் பற்றாக்குறை... எனப்பல காரணங்களால் விவசாயத்தில் வருமானம் குறைகிறபோது, அதை ஈடுகட்டுபவை விவசாயம் சார்ந்த உபதொழில்கள்தான். ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு... என ஏகப்பட்ட பண்ணைத்தொழில்கள் உள்ளன.

நமது பண்ணை அமைந்திருக்கும் சூழல், இடவசதி, தண்ணீர் வசதி... போன்ற முக்கியமான காரணிகளை வைத்துச் சரியான பண்ணைத்தொழிலைத் தேர்ந்தெடுத்து ஈடுபட்டால், கண்டிப்பாக நல்ல லாபம் ஈட்ட முடியும். சொல்லப்போனால் இதுபோன்ற விவசாய உபதொழில்கள் மூலம் விவசாயத்தில் எடுக்கும் வருமானத்தைவிட அதிகமாக வருமானம் ஈட்ட முடியும். அதுபோன்ற பண்ணைத் தொழில்களை வெற்றிகரமாகச் செய்து வரும் விவசாயிகளை அடையாளப்படுத்தி அவர்களின் வெற்றிச்சூத்திரத்தை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இத்தொடரின் நோக்கம். இந்த இதழில் நாட்டு மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்து, நேரடியாக விற்பனை செய்து நல்ல லாபம் எடுத்துவரும் மகேஷ்குமார் குறித்துப் பார்ப்போம்.


திண்டுக்கல்-நத்தம் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, சாணார்பட்டி. அங்கிருந்து வலதுபுறம் பிரிந்து செல்லும் கோணப்பட்டி சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்தால், சிங்கன்செட்டிபட்டி எனும் கிராமம் உள்ளது. இங்குதான் மகேஷ்குமாரின் ‘மல்லிகா நாட்டு மாட்டுப் பண்ணை’ அமைந்திருக்கிறது. ஒரு மாலை வேளையில் ஜல்லிக்கட்டு மாட்டுக்குப் புல் வைத்துக் கொண்டிருந்த மகேஷ்குமாரைச் சந்தித்தோம்.

பணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள்! - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்!

“எங்களுக்குச் சொந்த ஊர் மேலூர். இருபது வருஷத்துக்கு முன்னாடி திண்டுக்கல் வந்து செட்டில் ஆகிட்டோம். அப்பா ஜூவல்லரி வெச்சுருக்காங்க. மேலூர்ல விவசாய நிலங்கள் இருக்கு. எங்க பெரியப்பா நெல் சாகுபடி செஞ்சுட்டுருக்காங்க. எனக்குச் சின்ன வயசுல இருந்தே ஜல்லிக்கட்டுப் பார்க்கிறதுல ஆர்வம். ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்க்குறதுக்கும் ஆசை. நான், எம்.பி.ஏ முடிச்சுட்டு அப்பாகூடப் பிசினஸ் பார்த்துட்டுருக்கேன். எனக்குக் கலப்பின மாட்டுப் பால் குடிச்சா ஒத்துக்காது. உடனே தொண்டையில பிரச்னை வரும். அப்போதான் சொந்தக்காரர் ஒருத்தர், ‘நாட்டுமாட்டுப்பால் குடிச்சுப்பாருங்க’னு சொன்னார். ஒருமுறை குடும்பத்தோடு கோயம்புத்தூர் போய்த் தங்கியிருந்தோம். அப்போ நாட்டுமாட்டுப்பால் கிடைச்சது. குடிச்சுப் பார்ப்போம்னு குடும்பத்துல எல்லோரும் வாங்கிக் குடிச்சோம். எனக்கு ஒரு பிரச்னையும் வரலை. அங்க தங்கியிருந்த வரை அடிக்கடி குடிச்சும் ஒண்ணும் ஆகலை. நாட்டு மாட்டுப்பாலோட சுவையும் எங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. அதனால, வீட்டுத்தேவைக்காகவாவது நாட்டு மாடுகளை வாங்கி வளர்க்கணும்னு ஆசை வந்துச்சு.

மாடு வளர்க்குறதுக்காகவே இந்த நாலு ஏக்கர் நிலத்தை வாங்கினோம். அதுல இயற்கை முறையில மா, எலுமிச்சை ரெண்டையும் சாகுபடி பண்ணிட்டுருக்கோம். மாடுகளுக்குத் தேவையான தீவனப்பயிர்களையும் அப்பப்போ போட்டுக்குவோம். ஆரம்பத்துல ஒரு ஜல்லிக்கட்டு மாட்டை மட்டும் வாங்கினோம். அடுத்துக் காங்கேயம் மாடு ஒண்ணு வாங்கினோம். அப்புறம் வெளி மாநில நாட்டு மாடுகளைப் பத்திக் கேள்விப்பட்டு ரெண்டு கிர் மாடுகளை மட்டும் வாங்கிட்டு வந்தோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கி இப்போ கிர், காங்கிரஜ் வகைகள்ல கன்னுக்குட்டிகளோட சேர்த்து மொத்தம் 13 மாடுகள் இருக்கு. அதில்லாம ரெண்டு ஜல்லிக்கட்டு மாடுகளும் இருக்கு” என்ற மகேஷ்குமார், ஒவ்வொரு மாடாகக் காட்டியபடியே பேச்சைத் தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள்! - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்!

“இங்க எல்லா மாடுகளுக்கும் பெயர் வெச்சுருக்கோம். பெயர் சொல்லித்தான் கூப்பிடுவோம். இது பொன்னழகு. இதுதான் இருக்கறதுலேயே ரொம்பச் சாது. மீனாட்சி, நாச்சியார், சுந்தரி, மகாலட்சுமி, அபிராமி, கண்ணாத்தாள், பைரவா, செவளை, விஷ்ணு, சிவகாமி, பாப்பாத்தி இதெல்லாம் எங்க மாடுளோட பெயர்கள். ஜல்லிக்கட்டு மாடுகளுக்குக் கபாலி, மருதுனு பெயர் வெச்சுருக்கோம். எங்க பெரியப்பா நெல் சாகுபடி பண்றதால வைக்கோலுக்குப் பஞ்சமில்லை. அவருக்கு நாங்க இங்க இருந்து சாணத்தை அனுப்பிடுவோம்.

அடுத்தடுத்து மாடுகள் அதிகமாகவும் பாலும் அதிகமாகக் கிடைக்க ஆரம்பிச்சது. அதனால, நாட்டுமாட்டுப்பாலை விற்பனை செய்யலாம்னு முடிவெடுத்து, திண்டுக்கல்ல எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்குறவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல பணம் எதுவும் வாங்காம கொடுத்துக் குடிக்கச் சொன்னோம். அதுக்கப்புறம் கொஞ்ச பேர் தொடர்ந்து பால் கொடுக்கச் சொன்னாங்க. சிலர், ‘விலை அதிகமா இருக்குது’னு வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஆனா, உடல் ஆரோக்கியத்துல அக்கறை இருக்குறவங்க நாட்டுமாட்டுப் பாலைக் கேட்டு வாங்குறாங்க. அப்படிப்பட்டவங்க விலையைப் பத்திக் கவலைப்படுறதில்லை. தினமும், காலையிலயும், சாயங்காலமும் பாட்டில்ல நிரப்பி எங்க வாடிக்கையாளர்களுக்கு நேரடியா டெலிவரி செஞ்சுட்டுருக்கோம். பால் விற்பனையாகாமத் தேங்குனா, எங்க வீட்டுலயே பன்னீர் தயாரிச்சுடுவோம். இல்லாட்டி நெய் காய்ச்சிடுவோம். பன்னீர், நெய் ரெண்டையும் இப்போதைக்கு எங்க வீட்டுத்தேவைக்குதான் வெச்சுக்குறோம். அதுபத்தித் தெரிஞ்சுக் கேக்குறவங்களுக்கு மட்டும் விற்பனை செய்றோம்” என்ற மகேஷ்குமார் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

பணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள்! - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்!

“இப்போதைக்குத் தினமும் 50 லிட்டர் அளவுக்குக் குறையாமப் பால் கிடைக்குது. ஒரு லிட்டர் 85 ரூபாய்னு விற்பனை செய்றோம். அது மூலமா, தினமும் 4,250 ரூபாய் வருமானம் கிடைக்குது. அதுல மாடுகளுக்கான தீவனம், வேலையாள் சம்பளம், போக்குவரத்து எல்லாம் சேர்த்து தினமும் 2,500 ரூபாய் வரை செலவாகிடும். அதைக்கழிச்சா தினமும், 1,750 ரூபாய் லாபமா நிக்கும். இப்போதைக்கு ஒரு மாசத்துக்கு 52,500 ரூபாய் வரை லாபம் கிடைச்சுட்டுருக்கு. ஆனா, நாங்க போட்டிருக்குற முதலீட்டுக்கு இந்த லாபம் குறைவுதான். ஏன்னா, ஒரு மாட்டைக் குஜராத்துல வாங்கி இங்க கொண்டு வர்றதுக்குள்ள அந்த மாட்டோட அடக்க விலை 1,00,000 ரூபாய் ஆகிடுது. அதனால, முதலீடு செஞ்ச பணத்தை எடுக்குறதுக்கே சில வருஷங்கள் ஆகிடும்” என்ற மகேஷ்குமார் நிறைவாக,

“ஆரம்பத்துல பால் விற்பனைக்கு ரொம்பக் கஷ்டப்பட்டோம். ‘நமக்குத் தேவையில்லாத வேலையாயிடுச்சே’னு கூட வருத்தப் பட்டிருக்கோம். நாங்க அலைஞ்சு ஆர்டர் கேக்குறதைப் பார்த்து... ‘நகைக்கடை வெச்சுருக்கீங்க. ஏசி ரூமுக்குள்ள உக்காந்து நோகாம சம்பாதிக்கிறதை விட்டுட்டு பால் விற்பனை செய்றதுக்காக இப்படி அலைஞ்சுட்டு இருக்கீங்களே’னுகூடச் சிலர் கேட்டாங்க. ஆனா, நாங்க அதுக்கெல்லாம் அசரலை. இப்போ ஒரளவுக்கு விற்பனை பரவாயில்லை.

பணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள்! - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்!

இன்னமும் பண்ணையை விரிவுபடுத்துற யோசனையில இருக்குறோம். இப்போ நாலு சாஹிவால் மாடுகளையும், ஒரு காங்கிரஜ் காளையையும் வாங்கி இங்க கொண்டு வர்றதுக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம். அதெல்லாம் வந்து சேர்ந்தா வருமானம் அதிகமாகிடும். அதில்லாம விபூதி, அர்க் மாதிரியான பொருள்களைத் தயாரிக்கவும் முயற்சி செஞ்சுட்டுருக்கோம். அதெல்லாம் ரெடி ஆகிடுச்சுனா வருமானத்துக்குப் பிரச்னையே இருக்காது. நகைக்கடையில நாங்க செய்ற வேலை, அதுல கிடைக்கிற வருமானத்தை ஒப்பிடுறப்போ... மாட்டுப்பண்ணையில வேலை அதிகம், வருமானம் குறைவுதான். ஆனா, இங்க நாங்க செய்ற இயற்கை விவசாயத்துலயும் நாட்டு மாடு வளர்ப்புலயும் கிடைக்கிற ஆத்ம திருப்தி எங்கயும் கிடைக்காது. அடுத்த வருஷம் வந்து பாருங்க வேற லெவல்ல இருப்போம்” என்று மீசையை முறுக்கிக்கொண்டே விடைகொடுத்தார். 

தொடர்புக்கு,

மகேஷ்குமார்,
செல்போன்: 88700 76964

- ஜி.பிரபு படங்கள்: வீ.சிவக்குமார்

மருத்துவச் செலவு இல்லை!

மாடுகள் பராமரிப்பு பற்றிப் பேசிய மகேஷ்குமார், “நாட்டு மாடுகளுக்கு வெயில்னாலயோ, மழையாலயோ எந்தப்பிரச்னையும் வர்றதில்லை. நிழலுக்கு ஓய்வெடுக்கவும் ஒரு கொட்டகை இருந்தால் போதுமானது. அதனால, கொட்டகைக்கு அதிக மூதலீடு செய்யவேண்டிய அவசியம் கிடையாது. நாங்க, 50 அடி நீளம், 36 அடி அகலத்துல கொட்டகை அமைச்சுருக்கோம். கொசுக்கள், ஈக்கள் வராம இருக்க ஃபேன் மாட்டியிருக்கோம். காலையில கறவை முடிஞ்சதும் தீவனம் கொடுத்து தண்ணி காட்டி, தோட்டத்துக்குள்ள மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம்.

நாட்டு மாடுகளுக்குக் கட்டி வெச்சுத் தீவனம் போட்டா மாடுகள் விரும்புறதில்லை. மேய்ச்சலைத்தான் மாடுகளே விரும்புதுக. தினமும் காலாற நடந்தாத்தான் மாடுகளும் ஆரோக்கியமா இருக்கும். உச்சிவெயில் ஏற ஆரம்பிக்கிற சமயத்துல மேய்ச்சலுக்குப் போன மாடுகள கொட்டகைக்கு ஓட்டிட்டு வந்து தண்ணி காட்டிட்டு கட்டிடுவோம். மதியம் கொஞ்சம் தீவனம் கொடுப்போம். 3 மணிக்குக் கறவை முடிஞ்சதும் மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். சாயங்காலம் 6 மணி வரைக்கும் மாடுகள் மேய்ஞ்சுட்டு ஒவ்வொண்ணா கொட்டகைக்குத் திரும்பிடும். வந்ததும் தண்ணி காட்டிட்டுக் கட்டிடுவோம். ராத்திரி நேரத்துல வைக்கோல், வெள்ள சோளத்தட்டை ரெண்டையும் போட்டுட்டா சாப்பிட்டு அசைபோட ஆரம்பிச்சுடும்.

பணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள்! - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்!

மாடுகள் மேய்ச்சலுக்குப் போனதும் கொட்டகையில இருக்குற சாணத்தை அள்ளிட்டுக் கழுவி விட்டுடுவோம். மாடுகளையும் அப்பப்போ குளிப்பாட்டிடுவோம். சுகாதாரமா மாடுகளை வளர்த்தா ஒரு நோயும் வர்றதில்லை. பொதுவாவே நாட்டு மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நாம கொஞ்சம் கவனம் எடுத்துக்கிட்டா எந்த நோயும் அண்டாது. இதுவரை எங்க மாடுகளுக்கு வைத்தியத்துக்காகச் செலவு செஞ்சது கிடையாது.

இங்க பசுச் சினைக்கு வந்துட்டா கரூர்ல இருக்குற ஒரு நாட்டு மாட்டுப்பண்ணைக்குக் கொண்டு போய் இயற்கையான முறையில காளையோட இணை சேர்த்துடுவோம். எங்க மாடுகளுக்குச் செயற்கைக் கருவூட்டல் செய்றதில்லை. இயற்கை முறையில இணை சேர்த்து உண்டாகுற கரு மூலமாகப் பிறக்குற கன்னுக்கும் மாட்டுக்கும் ஒரு பிணைப்பு இருக்கும். சினை ஊசி போட்டு கன்னு பிறக்குறதுக்கு மாடுகள் ஒண்ணும் ‘மிஷின்’ கிடையாது. அது உயிருள்ள ஜீவன். அதுக்கும் உணர்ச்சிகள் உண்டு. அதே மாதிரி கன்னுகளுக்கு வயிறு நிறையுற அளவுக்குப் பால் கொடுத்துட்டா இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாயிடும். அதுலயும் நாங்க கவனமா இருக்கோம்” என்றார்.

தீவன மேலாண்மை

மாடுகளுக்கான தீவன மேலாண்மை குறித்துப் பேசிய மகேஷ்குமார், “எங்க மாடுகளுக்கு எள்ளுப்பிண்ணாக்கு, கடலைப்பிண்னாக்கு, பருத்தி விதை, தவிடு, மக்காச்சோளக்குருணைனு தினமும் மூணு வேளை தீவனம் கொடுக்குறோம். கம்பெனித்தீவனத்தை வாங்கிப்போடுறது கிடையாது.

ஒரு மாட்டுக்கு ஒரு வேளைக்குக் கால் கிலோ கடலைப்பிண்ணாக்கு, 150 கிராம் பருத்தி விதை, அரைக்கிலோ தவிடு, 100 கிராம் எள்ளுப்பிண்ணாக்கு, 150 கிராம் மக்காச்சோளக்குருணைனு கொடுக்குறோம். சினை பிடிச்சு எட்டு மாசம் ஆனதுல இருந்து கன்னு போட்டு நல்லாப் பால் கறக்குற வரைக்கும் இந்தத் தீவன அளவை அப்படியே ரெண்டு மடங்காக்கிக் கொடுப்போம். கறவை குறைய குறையத் தீவன அளவைக் குறைச்சுட்டு உளுந்தம்போட்டு, தவிடு ரெண்டையும் அதிகமாகக் கொடுப்போம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism