Published:Updated:

‘துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை... தீப்பந்தம் கொளுத்தும் வனத்துறை!’ - விரட்டப்படும் சின்னதம்பி

‘துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை... தீப்பந்தம் கொளுத்தும் வனத்துறை!’ - விரட்டப்படும் சின்னதம்பி
‘துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை... தீப்பந்தம் கொளுத்தும் வனத்துறை!’ - விரட்டப்படும் சின்னதம்பி

தீப்பந்தம் கொளுத்தி, தென்னை மட்டைகளை வீசி சின்னதம்பி யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பி யானையைக் கடந்த வாரம், டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். இதையடுத்து, கடந்த நேற்று காலை சின்னதம்பி யானை பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் நுழைந்த சின்னதம்பி, தொடர்ந்து தனது வாழ்விடத்துக்குச் செல்ல முயற்சி செய்து வருகிறான்.

அவனை வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது உடுமலைப்பேட்டை அருகே இருக்கும் சின்னதம்பி, சுமார் 70 கி.மீ தொலைவுக்கு நடந்து சென்றான். அவன் சென்ற வழித்தடங்களில் பல்வேறு இடர்ப்பாடுகள் இருந்தாலும், சின்னதம்பி எந்தச் சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய அதிரடிப் படையினர், வனத்துறையினர், பொதுமக்கள் சூழ சின்னதம்பியை துரத்தி வருகின்றனர். இன்று மாலை தென்னந்தோப்புக்குள் நுழைந்த சின்னதம்பியை, தீப்பந்தம் கொளுத்தியும், கற்கள் மற்றும் தென்னை மட்டையை வைத்து அடித்தும் வனத்துறையினர் சிலர் ஈடுபட்டனர். இதில், ஆக்ரோஷமடைந்த சின்னதம்பி இரண்டு அடி முன்வைத்து தனது கோபத்தை வெளிப்படுத்தினான். இந்தச் செயல் முற்றிலும் தவறு, சின்னதம்பியைக் கோபப்படுத்தக் கூடாது என்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

``அதிரடிப் படையினர் அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? நக்சல் மாவோயிஸ்ட் தடுப்பு அதிரடிப் படையினர் வேடிக்கை பார்க்க சென்றிருந்தாலும் துப்பாக்கியுடன் சின்னதம்பி யானையை நெருங்குவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தீப்பந்தம் வைத்து யானையை விரட்டுவது என்பது மிகவும் தவறு. இது அமைதியாக இருக்கும் அதன் குணத்தை ஆக்ரோஷமாக மாற்றும். அது அந்த யானைக்கும் நல்லதல்ல, நமக்கும் நல்லதல்ல. எனவே, சின்னதம்பியைக் கையாள்வதில் கூடுதல் கவனம் தேவை. அவனைப் பற்றி நன்கு தெரிந்த கோவை வனத்துறையினரை வைத்து சின்னதம்பியைக் கண்காணிக்க வேண்டும்’’ என்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், சின்னதம்பியைக் கண்காணிப்பதற்காக கோவை வனத்துறையில் இருந்து ஓர் அணி சின்னதம்பி இருக்கும் இடத்துக்கு விரைந்துள்ளது.