அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

நாய்கள் ஜாக்கிரதை! - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்

நாய்கள் ஜாக்கிரதை! - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்
பிரீமியம் ஸ்டோரி
News
நாய்கள் ஜாக்கிரதை! - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்

படங்கள்: பா.பிரசன்னா

நாய்கள் வளர்க்கும் வீடுகளில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று எச்சரிக்கைப் பலகை வைப்பார்கள். அப்படி ஒரு மிகப்பெரிய அறிவிப்புப் பலகையை காரைக்கால் நகரில் ஆங்காங்கே வைக்க வேண்டும் போலிருக்கிறது. அந்தளவுக்கு நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது.

சமீபத்தில் காரைக்கால் நேரு நகர், கொத்தலம்பேட்டை ஆகிய பகுதிகளில் நாய்கள் கடித்ததால், ஒரே நாளில் ஏழு பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் இரண்டு பேர் குழந்தைகள்.

நாய்கள் ஜாக்கிரதை! - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்

மருத்துவமனையில் இருந்த குழந்தைகளின் தாயார் ஜெனிபரிடம் பேசினோம். ‘‘வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த என் மகன் ஹாரிஸ்டன், மகள் அனுஷ்கா இருவரையும் தெருநாய் கடித்துக் குதறியது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, சூசைமேரி என்பவர் ஓடிவந்தார். அவரையும் நாய்கள் கடித்துவிட்டன. மூவரையும் அரசு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிவந்தபோது, அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை நகல்களை அளித்ததும், நாங்கள் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே அனுமதித்தார்கள். அரசு மருத்துவமனையில் இப்படி எல்லாம் செய்யலாமா?” என்றார் கோபமாக.

தியாகராஜன் என்பவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் டூவீலரில் வந்துள்ளார். அப்போது, தெருநாய்கள் சண்டையிட்டபடியே குறுக்கே வந்து டூவீலர் மீது விழுந்தன. இதில் தியாகராஜன் உட்பட அனைவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். தியாகராஜனிடம் பேசியபோது, “என் மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிரச் சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். என் இரு குழந்தைகளுக்கும் பலத்த காயம்” என்றார் வேதனையுடன்.

நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்படாத அவலம் நிலவுவதாக ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது.

நாய்கள் ஜாக்கிரதை! - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்

பா.ம.க-வின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணி, “கடிக்கிற நாய்க்கு காரைக்கால்காரன்... வெளியூர்க்காரன்னு தெரியுமா? சிகிச்சைக்கு யார் வந்தாலும், அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்யவேண்டியது அரசு மருத்துவமனையின் கடமை. அப்படிச் செய்யாவிட்டால், பெரும் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சித்ராவிடம் கேட்டபோது, “நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊசி போடப்பட்டுள்ளது. நோயாளிகள் அனுமதிக்கு ரேஷன் கார்டு, ஆதார் நகல்கள் கேட்கப்படுவதில்லை. தவறுகள் நடந்திருந்தால் உடனே சரிசெய்கிறேன்” என்றார்.

கால்நடை மருத்துவ மண்டல இணை இயக்குநர் லதா மங்கேஷ்கரிடம் பேசினோம். “பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தைக் காரணம் காட்டி, நாய்களைப் பிடிக்கக் கூடாது என்ற நிலைப்பாடு வந்த பின்பு, நாய்களைப் பிடிக்கும் இடத்திலேயே கருத்தடை செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. அதற்கென நகராட்சியில் ஒரு கால்நடை மருத்துவர் நியமிக்கப்படவேண்டும். சில ஆண்டுகளாக நிதி ஒதுக்காததால் மருத்துவர் நியமிக்கப்படவில்லை” என்றார்.

- மு.இராகவன்