Published:Updated:

8 மணிநேரம் போராட்டம்! - வீட்டில் புகுந்த சிறுத்தை சிக்கியது; நிம்மதியில் பொதுமக்கள்

8 மணிநேரம் போராட்டம்! - வீட்டில் புகுந்த சிறுத்தை சிக்கியது; நிம்மதியில் பொதுமக்கள்
8 மணிநேரம் போராட்டம்! - வீட்டில் புகுந்த சிறுத்தை சிக்கியது; நிம்மதியில் பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம், பாட்டவயல் பகுதியில் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர்.

கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் வசிப்பவர் ராயன். இவர் நேற்று மதியம் ஒரு மணிக்கு தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பியபோது, வீட்டுக்குள் இருந்து உறுமல் சத்தம் கேட்டுள்ளது. சந்தேகத்தில் கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது, சிறுத்தை படுத்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறி கதவைப் பூட்டிவிட்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

பகல் நேரங்களில் வீட்டின் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் சிறுத்தை புகுந்தது அப்பகுதி மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்தனர். வனத்துறையில் கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால் சிறுத்தையைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், 8.30 மணி அளவில் கூண்டு வைத்து சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். 8 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சிறுத்தை சிக்கியதால் அந்தப் பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். சிறு காயங்களுடன் இருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிதிர்காடு வன அலுவலகத்துக்குக் கொண்டு சென்று கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் சிகிச்சையளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.