Published:Updated:

விரட்ட வந்த கும்கிகளை மிரட்டிய சின்னத்தம்பி!- தலைதெறிக்க ஓடிய கலீம், மாரியப்பன்

விரட்ட வந்த கும்கிகளை மிரட்டிய சின்னத்தம்பி!- தலைதெறிக்க ஓடிய கலீம், மாரியப்பன்
விரட்ட வந்த கும்கிகளை மிரட்டிய சின்னத்தம்பி!- தலைதெறிக்க ஓடிய கலீம், மாரியப்பன்

உடுமலை அருகே, சின்னத்தம்பி யானை விரட்டியதில் கும்கிகள் கலீம் மற்றும் மாரியப்பன் தலைதெறிக்க ஓடின.

கோவையிலிருந்து டாப்ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பி என்ற காட்டு யானை, தனது வாழ்விடத்தைத் தேடி பல கிராமங்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறான். கடந்த வாரமே சின்னத்தம்பியை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி, அவனை கும்கியாக மாற்ற வனத்துறை திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சமூக வலைதளங்களில் #SaveChinnathambi, #BringBackChinnathambi ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின. சின்னத்தம்பியைப் பிடிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக, விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சின்னத்தம்பி தொடர்பாக மேலும் சிலர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், சின்னத்தம்பி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க, சின்னத்தம்பி யானை கும்கி கலீமுடன் விளையாடுவது, கார்களுக்கு இடையே சேதம் ஏற்படுத்தாமல் நடப்பது என்று சமத்துப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்தான். ஆனால், கும்கி மாரியப்பனை வைத்து சின்னத்தம்பியை அவ்வப்போது விரட்டி வந்தனர். இந்நிலையில், சின்னத்தம்பி யானை கடந்த இரண்டு நாள்களாக கண்ணாடிப்புதூர் என்ற பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் மையம் கொண்டுள்ளான். அங்கு அவனை அடையாளம் கண்டுபிடிக்கவே வனத்துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, இன்று காலை முதல் கும்கிகளை வைத்து சின்னத்தம்பி யானையை விரட்டுவதற்கு வனத்துறையினர் முயற்சி செய்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சின்னத்தம்பி யானை கும்கிகளை துரத்தியுள்ளான். இதனால், கலீம் மற்றும் மாரியப்பன் யானைகள் தலைதெறிக்க ஓடின. ``சின்னத்தம்பி யானை அமைதியானவன்தான். ஆனால், தொடர்ந்து மன அழுத்தம் கொடுத்தால் அது ஆக்ரோஷமடைய வாய்ப்புள்ளது. எனவே, சின்னத்தம்பிக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது" என்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.