Published:Updated:

மினி பட்ஜெட்டில் ஃபேமிலி பிக்னிக் போகணுமா..? வேலூர் அமிர்தி நல்ல சாய்ஸ்!

அமிர்தி பூங்காவுக்குச் செல்லச் சிரமப்படத் தேவையில்லை. வேலூரிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரைமணி நேரத்தில் அங்கு சென்றுவிடலாம். இரண்டு வழித்தடங்கள் உள்ளன. வேலூரிலிருந்து, மத்திய பெண்கள் சிறை வழியாகச் சித்தேரி, பென்னாத்தூர், சோழவரம், நாகநதி வழியாக அமிர்திக்குச் செல்லலாம்.

மினி பட்ஜெட்டில் ஃபேமிலி பிக்னிக் போகணுமா..? வேலூர் அமிர்தி நல்ல சாய்ஸ்!
மினி பட்ஜெட்டில் ஃபேமிலி பிக்னிக் போகணுமா..? வேலூர் அமிர்தி நல்ல சாய்ஸ்!

கோடை விடுமுறை நெருங்கிவிட்டது. பல வீடுகளில் இப்போதே டூர் ப்ளானை அலச ஆரம்பித்துவிட்டார்கள். பட்ஜெட்டை நினைத்து குடும்பத் தலைவர்கள் கிறுகிறுத்துப் போயிருக்கிறார்கள். கவலைப்படாதீங்க... மினி பட்ஜெட்டில், குதூகலமாக ஃபேமிலி பிக்னிக் போக நம்ம ஊரிலேயே நிறைய இடங்கள் இருக்கின்றன. அமிர்தி அதில் ஒன்று. 

எழில் கொஞ்சும் அழகான நந்தவனத்துக்கு நடுவே அமைதியான சூழலுடன் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கிறது, வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமிர்தி வன உயிரியல் பூங்கா. ஜவ்வாதுமலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டுவரும் இந்தப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப் பாம்புகள் உள்ளன. அடர்ந்துவளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.

மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலையேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம். நீர்வீழ்ச்சியில் குளிக்க இப்போது அனுமதியில்லை. புதை மணல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால், சில விதிமுறைகளை வகுத்தபிறகு, நீர்வீழ்ச்சிக்குச் சென்று குளிக்க அனுமதி வழங்கப்படும் என்கிறார்கள் வனத்துறையினர். செவ்வாய்க்கிழமை மட்டும், அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. ஞாயிறு உட்பட மற்ற அனைத்து நாள்களும், பூங்காவில் பொழுதைக் கழிக்கலாம்.

பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில், விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமையன்றும் பூங்கா திறந்திருக்கும். தோகை விரித்தாடும் மயில்கள், துள்ளிக் குதித்தோடும் புள்ளிமான்களின் அழகை ரசிப்பதற்காகவே, தினமும் சுற்றுலாப் பயணிகள் அமிர்திக்கு வந்துசெல்கிறார்கள்.

வார விடுமுறை நாள்களில் குடும்பம், குடும்பமாக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். குழந்தைகள் விளையாடுவதற்குத் தேவையான, சாதனங்கள் நிறைய உள்ளன. மரத்தடி நிழலில் சிறிதுநேரம் உட்கார்ந்தால், சில்லென்று வீசும் காற்றில் சுட்டெரிக்கும் வெயில்கூட துயில் கொள்ளும். பருவமழைக் காலங்களில் அரியவகை பறவைகள் அமிர்திக்குப் படையெடுத்துவரும். பார்ப்பதற்கே கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, பறவைகள் கூடுகட்டி வாழும் இடப்பெயர்ச்சி அற்புதமாக இருக்கும். பல்வேறு வனவிலங்குகள் இங்கு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், போதிய வசதியின்மை மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் போன்ற காரணங்களால் பெரும்பாலான விலங்குகள் இங்கிருந்து வேறு சரணாலயங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன.

இந்த நிலையில், அமிர்தி வனப்பூங்காவை மேம்படுத்த மத்திய சுற்றுலா ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது. பணிகள் நிறைவடைந்தால், யானைகளுக்கான புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படும். 15 முதல் 20 முதலைகளை வளர்க்க ஒரு கோடி ரூபாயில், முதலைப் பண்ணை மற்றும் உணவகம் அமைக்கும் பணிகளும் நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமிர்தியில் வன உயிரினங்களுக்குத் தேவையான சீதோஷ்ண நிலையை உருவாக்குவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக வெளிர்மான், கடமான், நீர்வாழ் பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை படிப்படியாக கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படும் தட்பவெப்பநிலை மாற்றங்கள் குறித்து அறிக்கை தயாரிக்க, கோவையைச் சேர்ந்த முதுகெலும்பற்ற உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் டேனியல், அமிர்தியில் மூன்று கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

அமிர்தி பூங்காவுக்கு செல்லச் சிரமப்பட தேவையில்லை. வேலூரில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரைமணி நேரத்தில் அங்கு சென்றுவிடலாம். இரண்டு வழித்தடங்கள் உள்ளன. வேலூரிலிருந்து, மத்திய பெண்கள் சிறை வழியாகச் சித்தேரி, பென்னாத்தூர், சோழவரம், நாகநதி வழியாக அமிர்திக்குச் செல்லலாம். வேலூரிலிருந்து கணியம்பாடி, கீழ் அரசம்பட்டு, கல்பட்டு வழியாகவும் போகலாம். பேருந்தில் செல்பவர்கள் 15 ரூபாய் டிக்கெட் எடுத்தால் போதும். வெளியூர்களிலிருந்து வருபவர்கள் வேலூரில் உள்ள லாட்ஜிகளில் தங்கலாம். வசதிக்கேற்ப தங்கும் வசதிகள் உண்டு. ஏ.சி அல்லாத சாதாரண லாட்ஜிகளில் சிங்கிள் அறை 600 ரூபாய்க்குக் கிடைக்கும்.

போக்குவரத்து வசதிக்கும் பஞ்சமில்லை. ஆட்டோக்கள் ஈயாக மொய்க்கின்றன. கை நீட்டும் இடங்களில் ஆட்டோக்களில் ஏறி சவாரி செய்யலாம். ஆட்டோவில் நான்கு பேர் அமிர்திக்குப் பயணிப்பதற்கு 300 ரூபாய் வசூலிக்கிறார்கள். உணவுக்குக் குறையில்லை. திரும்பிய பக்கமெல்லாம் ஹோட்டல்கள். 50 ரூபாய்க்கு ருசியான பிரியாணி கிடைக்கும். திருப்தியான சைவ உணவும் கிடைக்கும். அமிர்தி வன உயிரியல் பூங்காவுக்குள் நுழைய சிறுவர்களுக்கு 1 ரூபாய், பெரியவர்களுக்கு 2 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மலைகளில் விளையும் தேன், தினை, சாமை போன்ற உணவுப்பொருள்களை விற்கும் கடைகளும் உள்ளன. வீட்டுக்குத் தேவையான வித்தியாசமான மரச்சாமான்களும் கிடைக்கின்றன. குடும்பத்தோடு செல்லுங்கள்... அமிர்தியில் கோடை விடுமுறையைக் கொண்டாடுங்கள்!