Published:Updated:

ஏற்காட்டில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ - மக்கள் வெளியேற்றம்!

ஏற்காட்டில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ - மக்கள் வெளியேற்றம்!
ஏற்காட்டில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ - மக்கள் வெளியேற்றம்!

நேற்று நள்ளிரவிலிருந்து ஏற்காடு மலைப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து மளமளவெனப் பரவி வருவதால் ஏற்காட்டில் உள்ள  மலைக்கிராம மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றி வருகிறார்கள். அதையடுத்து இன்று சேலம் டு ஏற்காட்டுக்குச் செல்லும் போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

ஏற்காடு மலை அடிவாரக் கிராமமான கருங்காலி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், வெயிலின் காரணமாக கருங்காலி மலைக்கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் காய்ந்த மூங்கிலில் நேற்று மாலை திடீரென காட்டுத் தீ பற்றியது. தீ மளமளவென வேகமாக மலைக்காடுகள் முழுவதும் பரவியது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்கள்.

இதையடுத்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் காவல்துறை வஜ்ரா வாகனம் மூலம் தீயை அணைக்க முயன்று வருகிறார்கள். ஆனால், மலைப்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் காட்டுக்குள் செல்ல முடியாததால் தீ பரவுவதைத் தடுக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதனிடையே, காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீயானது மளமளவெனப் குடியிருப்புப் பகுதியில் பரவத் தொடங்கியதால் கருங்காலி பகுதியில் வசித்து வந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அருகே உள்ள விநாயகம்பட்டி பகுதியில் பள்ளியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தை அறிந்த கலெக்டர் ரோகிணி நேரில் சென்று பார்வையிட்டார். காட்டுத் தீ ஏற்காடு மலைப்பாதை பகுதியிலும் பரவி வருவதால் இன்று மாலையிலிருந்து ஏற்காட்டுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். தீயை விரைந்து அணைப்பதற்கும், தீ பிடித்ததற்கான காரணத்தையும் மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. சிகரெட் பிடித்து காட்டுக்குள் போட்டதாக 3 பேர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.