Published:Updated:

‘கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை!’- பீதியில் ஆம்பூர் மக்கள்

‘கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை!’- பீதியில் ஆம்பூர் மக்கள்
‘கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை!’- பீதியில் ஆம்பூர் மக்கள்

ஆம்பூர் அருகே ஒரு கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை, கன்றுக்குட்டியின் வயிற்றைக் கிழித்து கொடூரமாகக் கொன்றது. சிறுத்தையின் தொடர் தாக்குதலால், கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாகியிருக்கிறது. வனப்பகுதியிலிருந்து, கிராமத்திற்குள் வரும் சிறுத்தைகள், புதர்கள், விவசாயத் தோட்டங்களில் பதுங்கி இருந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுகிறது. சமீபத்தில், வாணியம்பாடியை அடுத்த நாகலேரி வட்டம் சிக்கனாங்குப்பம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தையை, வனத் துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது, கரும்புத் தோட்டத்திலிருந்து வெளியே பாய்ந்துவந்த சிறுத்தை, அங்கு சூழ்ந்திருந்த 300-க்கும் மேற்பட்டோரைத் துரத்தியது. ஒருவர், சிறுத்தையிடம் கடிபட்டார்.

இந்த நிலையில், ஆம்பூரை அடுத்த அரங்கல்துருகம் கிராமத்தில் நேற்றிரவு புகுந்த சிறுத்தை ஒன்று, பழனி என்ற விவசாயிக்குச் சொந்தமான கன்றுக்குட்டியை அடித்துக் கொன்றது. மரத்தில் கட்டிவைத்திருந்த கன்றுக்குட்டியின் வயிற்றைக் கிழித்த சிறுத்தை, கழுத்தைக் கடித்து குதறிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இன்று காலையில், கன்றுக்குட்டி இறந்துகிடந்ததைப் பார்த்த விவசாயி பழனி மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுத்தை எங்கு பதுங்கியிருக்கிறது என்பது தெரியாமல் பீதியில் உள்ளனர். இதுபற்றித் தகவலறிந்த வனத்துறையினர், அரங்கல்துருகம் கிராமத்தில் முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.