Published:Updated:

`கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை!’ -ஆம்பூரில் கேமராவில் பதிவான திகில் காட்சி

`கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை!’ -ஆம்பூரில் கேமராவில் பதிவான திகில் காட்சி
`கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை!’ -ஆம்பூரில் கேமராவில் பதிவான திகில் காட்சி

ஆம்பூர் அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடிக் கொல்லும் ‘திகில்’ சம்பவம், அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இந்தக் காட்சி கிராம மக்களை அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது. 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாகியிருக்கிறது. கடந்த 3-ம் தேதி நள்ளிரவில், ஆம்பூரை அடுத்த அரங்கல்துருகம் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, பழனி என்ற விவசாயிக்குச் சொந்தமான கன்றுக்குட்டியை அடித்துக் கொன்றது. மரத்தில் கட்டிவைத்திருந்த கன்றுக்குட்டியின் வயிற்றைக் கிழித்த சிறுத்தை, கழுத்தைக் கடித்து குதறிவிட்டுத் தப்பி ஓடிவிட்டது. சிறுத்தை எங்கு பதுங்கியிருக்கிறது என்பது தெரியாமல், அந்தப் பகுதி சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியில் உள்ளனர். 

வனத்துறையினரும், சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், கன்றுக்குட்டியை வேட்டையாடிய பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகளை வனத்துறையினர் ஆய்வுசெய்தனர். அதில், கன்றுக்குட்டியைச் சிறுத்தை கொடூரமாகக் கொல்லும் ‘திகில்’ காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்தப் படம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பகிரப்பட்டுவருகிறது. சிறுத்தையின் படத்தைப் பார்த்த ஆம்பூர் மக்கள், அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.