Published:Updated:

பார்த்தால் மலை... பழகினால் மழலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பார்த்தால் மலை... பழகினால் மழலை!
பார்த்தால் மலை... பழகினால் மழலை!

பார்த்தால் மலை... பழகினால் மழலை!

பிரீமியம் ஸ்டோரி

பொதுவாக, பெரிய உருவங்களைப் பார்த்தால் பயம் வரும். ஆனால், யானை அதற்கு விதிவிலக்கு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே யானையைப் பிடிக்கும். அப்படி, மதுரையில் உள்ள சுட்டிகளுக்குப் பிடித்த யானைதான் சுமதி. பள்ளிகள், கோயில்கள் எனப் பல இடங்களுக்குச் சென்று குழந்தைகளோடு விளையாடும் சுமதியை, ஸ்டார் பக்கங்களுக்காகச் சந்தித்தோம்.

பார்த்தால் மலை... பழகினால் மழலை!
பார்த்தால் மலை... பழகினால் மழலை!

மதுரையின் வில்லாபுரத்தில் இருக்கிறது சுமதியின் வீடு. நாங்கள் சென்றபோது, புத்துணர்ச்சியோடு கரும்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. தலைமைப் பாகன் சந்திரமோகன், அவருக்கு உதவியாளர்கள் என்று நான்கைந்து பேரின் கவனிப்பில் ஒரு மகாராணியைப் போல வரவேற்றது சுமதி.

‘‘நம்ம சுமதிக்கு 48 வயசு ஆகுது. தினமும் காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்துடும். குளிப்பாட்டி விட்டுருவோம். பொதுவா, யானைகள் அசுத்தமான இடங்களில் இருக்க விரும்பாது. தன்னைச் சுற்றி சுத்தமாக இருக்கணும்னு நினைக்கும். அசுத்தமான உணவுகளையும் சாப்பிடாது. ஒரு வண்டி கரும்பு, வாழைப்பழம், தென்னை மட்டைகள் என்று தினமும் சாப்பிட கொடுப்போம். இதுக்காக ஒருநாளைக்கு சுமார் 3000 ரூபாய் வரை செலவாகுது. முறுக்கு, கடலைமிட்டாய் கொடுத்தால் அதையும் விரும்பிச் சாப்பிடும்’’ என்றார் தலைமைப் பாகன் சந்திரமோகன்.

பார்த்தால் மலை... பழகினால் மழலை!

நாங்கள் ஒரு தார் வாழைப்பழங்களுடன் சென்றிருந்தோம். அதை ஓரமாக வைத்திருக்க, அந்த இடத்தை நோக்கி தும்பிக்கையை நீட்டியது. ‘‘நீங்க வாழைப்பழம் கொண்டுவந்திருக்கிறது அதுக்குத் தெரிஞ்சுபோச்சு. அதுதான் தும்பிக்கையை நீட்டுது. பயப்படாமல் கிட்டவந்து கொடுங்க’’ என்றார்.

ஒவ்வொருவராக பழத்துடன் அருகில் சென்றோம். தும்பிக்கையை உயர்த்தி வாயைத் திறந்து காட்டியது. பழத்தைக் கொடுத்துவிட்டு சுமதியைத் தொட்டுப் பார்த்தோம்.

‘‘யானையோடு பேசுவீங்களா? நீங்க சொல்றதை செய்யுமா?’’ என்று கேட்டோம்.

பார்த்தால் மலை... பழகினால் மழலை!

‘‘பழகிய யானைகள் ஒரு குழந்தை மாதிரிதான். பாகன்களிடம் ரொம்ப அன்பாக இருக்கும். யானைகள் ரொம்ப புத்திசாலிகள். ஒரு விஷயத்தை ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே புரிஞ்சுக்கும். என்னை மாதிரி பாகன்கள் சொல்லும் விஷயத்தைப் புரிஞ்சுக்கிட்டு செய்யும்’’ என்றவர், ‘இந்தப் பக்கம் திரும்பு... தும்பிக்கையைத் தூக்கு’ என்று யானைகளுக்கான மொழியில் சொல்ல அதுபோலவே செய்தது.

உட்காரச் சொன்னதும் உட்கார்ந்தது. எங்களில் இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு எழுந்து நிற்க, எல்லோரும் உற்சாகமாகக் கூச்சலிட்டோம். சுமதியும் குஷியாகி, ஊஞ்சல் ஆடுவது போல அப்படியும் இப்படியுமா அசைந்தது.

‘‘சுமதிக்கு சந்தோஷம் வந்துட்டா இப்படித்தான் செய்யும். பல பள்ளிகளுக்குப் போய் குழந்தைகளைப் பார்த்து பழகியிருக்கு’’  என்றார் சந்திரமோகன்.

‘‘சுமதிக்குக் கோபம் வருமா? அதை எப்படித் தெரிஞ்சுப்பீங்க?’’

‘‘கோபமாக இருந்தால், வாலினால் தன் உடம்பில் பட் பட் என அடிச்சுக்கும். காதுகளையும் வேக வேகமாக அசைக்கும். அந்த மாதிரி சமயத்தில் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து, அன்போடு தடவி சமாதானம் செய்வோம்.’’

பார்த்தால் மலை... பழகினால் மழலை!

‘‘உடம்பு சரியில்லாமல் போனால் எப்படித் தெரிஞ்சுப்பீங்க?’’

‘‘சரியாகச் சாப்பிடாது, தண்ணீர் குடிக்காது,  சுறுசுறுப்பில்லாமல் சோர்வாகக் காணப்படும். அதுமாதிரி நேரத்தில் என்ன பிரச்னை என்று கவனிப்போம். என்னை மாதிரியான பாகன்கள், யானைகளின் அசைவு, பிளிறும் விதத்தை வைத்தே தெரிஞ்சுப்போம். கால்நடை மருத்துவர் மூலம் முறையான சிகிச்சையும் கொடுப்போம்.’’

‘‘யானையின் சாணத்தை மிதிச்சால் நல்லதுன்னு சொல்றாங்களே அது நிஜமா?’’

‘‘காட்டில் உள்ள யானைகள் நிறைய மூலிகைச் செடிகளைச் சாப்பிடும். அதனால், அதன் சாணத்தில் மருத்துவக் குணம் இருக்கும். அந்தச் சாணத்தை மிதித்தால், பாதவெடிப்பு போன்ற சில பிரச்னைகள் தீரும்னு சொல்வாங்க. ஆனால், நாட்டிலேயே வளரும் யானைகளின் சாணம் அப்படி இருக்காது. சில பேர் கடவுள் நம்பிக்கையில் செய்யறாங்க’’ என்றார்.

பார்த்தால் மலை... பழகினால் மழலை!

இந்த யானையின் உரிமையாளர் மதன்பாபு, ‘‘எங்கள் தாத்தா, அப்பா காலத்திலிருந்தே விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்த்து வருகிறோம். எனக்கும் சிறு வயதிலிருந்தே விலங்குகள் மற்றும் பறவைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. சுமதியை என் அப்பா வாங்கினார். எல்லா உயிர்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழத்தான் இந்தப் பூமி. ஆனால், மனிதர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகச் செய்யும் விஷயங்களால் நிறைய உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதையெல்லாம் உங்களைப் போன்ற மாணவர்களுக்கு உணர்த்த விரும்பினேன். அதற்காக, பள்ளிகள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளுக்கு சுமதியை அழைத்துச் சென்று பழகவிடுகிறேன். யானைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறேன்’’ என்றார்.

யானைகளுக்கு நடைப்பயிற்சி மிகவும் முக்கியமாம். எனவே, நகருக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு நடத்தியே கூட்டிச்செல்கின்றனர். தவிர, மாவுத்தன் பயிற்சியும் நடத்துகிறார்கள். யானை விரும்பிகள் இதில் கலந்துகொள்ளலாம். யானையைக் குளிப்பாட்டுவது, சாப்பாடு கொடுப்பது, மேலே அமர்ந்து கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பயிற்சிகளை வழங்குகின்றனர்.

‘‘இதற்கெல்லாம் அரசு மற்றும் வனத் துறையின் அனுமதி வாங்கியிருக்கோம். யானையைச் சரியாகப் பராமரித்து வருவதற்கான ஆவணங்களை முறையாகச் சமர்ப்பிக்கிறோம்.  பார்க்கத்தான் மலை மாதிரி உருவம். ஆனால், பழகிவிட்டால் யானையும் நாய்க்குட்டி மாதிரி செல்லப் பிராணிதான்’’ என்றார் மதன் பாபு.

அந்தச் செல்ல சுமதிக்கு டாட்டா சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

- சுட்டி டீம்,  படங்கள்: ஈ.ஜே.நந்தகுமார், வி.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு