Published:Updated:

நாட்டுக்கோழிகளில் தினமும் வருமானம்!

நாட்டுக்கோழிகளில் தினமும் வருமானம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டுக்கோழிகளில் தினமும் வருமானம்!

பட்டதாரி இளைஞரின் பன்முக விவசாயம்!மகசூல்

காலநிலை மாறுபாடு, வறட்சி, இயற்கைச் சீற்றங்கள்... என விவசாயம் பொய்த்துப்போவதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், விவசாயத்தோடு சேர்ந்து கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டால், பயிர் கைவிட்டாலும், கால்நடைகள்மூலம் வருமானம் பார்த்துவிடலாம். அந்த வகையில், விவசாயத்தோடு கோழி வளர்ப்பையும் மேற்கொண்டு நல்ல வருமானம் ஈட்டி வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் பரத்.

உத்திரமேரூரை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தில்தான் பரத்தின் பண்ணை இருக்கிறது. ஒரு காலைவேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பரத்தைச் சந்தித்தோம்.

நாட்டுக்கோழிகளில் தினமும் வருமானம்!

“எம்.எஸ்ஸி உயிரியல் படிச்சுட்டுருந்த சமயத்துல, ஒரு பேராசிரியர் பஞ்சகவ்யா பத்தி சொன்னார். அப்போதே பஞ்சகவ்யாவைப் பத்தி முழுசாகத் தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் வந்து, அது சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தேட ஆரம்பிச்சேன். படிப்பு முடிஞ்சதும், தமிழ்நாடு அரசின் பசுமையாக்கல் திட்டத்துல உதவி ஆராய்ச்சியாளரா தற்காலிகப் பணியில் சேர்ந்தேன். வண்டலூர் வன ஆராய்ச்சி நிலையத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம் பகுதியில மரங்களை ஆய்வு செஞ்சு அறிக்கை கொடுக்கிறதுதான் என்னோட வேலை. அங்கதான், தாவரங்களைத் தாக்குற பலவிதமான பூச்சிகளைப் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். அப்போ தேக்கு மரங்கள்ல இலைப்புள்ளி, இலைக்கருகல் பாதிப்புகள் இருந்துச்சு. அந்த மரங்களுக்குப் பஞ்சகவ்யாவைக் கொடுத்தப்போ சரியாயிடுச்சு. மரக்கன்றுகளுக்குப் பஞ்சகவ்யா கொடுத்தப்போ, வளர்ச்சி அபரிமிதமா இருந்தது. அதைப் பார்த்த பிறகுதான், நாம ஏன் இதைப் பயன்படுத்தி விவசாயம் செய்யக்கூடாதுனு தோணுச்சு. அந்த யோசனைதான் இன்னிக்கு என்னை ஒரு விவசாயியா மாத்தியிருக்கு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாட்டுக்கோழிகளில் தினமும் வருமானம்!

எட்டு வருஷமா அப்பாகூடச் சேர்ந்து விவசாயம் பார்த்துட்டிருக்கேன். என்னோட தம்பி பாஸ்கரன், இன்ஜீனியரிங் முடிச்சுட்டு, வேலை பார்த்துட்டு இருக்கான். அவனும் விடுமுறை நாள்கள்ல எங்களோட சேர்ந்துக்குவான். ஒரே பயிரைப் பயிரிடும்  போதுதான் பூச்சிகள், நோய்கள் தாக்கும். சிலசமயங்கள்ல விலையும் கிடைக்காது. அதனால, கீரை, காய்கறிகள், நிலக்கடலை, நெல்னு கலந்து சாகுபடி செய்றோம். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் இரண்டையுமே இடுபொருள்களாகப் பயன்படுத்துறோம். பூச்சிகளைக் கட்டுப்படுத்த பொறிகளைப் பயன்படுத்துறோம். ஆரம்பத்துல சீரகச் சம்பாவை 20 சென்ட்ல விதைச்சு, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் இரண்டையும் கொடுத்தோம். பயிர் நல்லா வளர்ந்ததைப் பார்த்து ஊர்க்காரங்க எல்லாரும் பஞ்சகவ்யா பத்தி என்கிட்ட கேக்க ஆரம்பிச்சுட்டாங்க” என்று முன்கதை சொன்ன பரத், தொடர்ந்தார்.

நாட்டுக்கோழிகளில் தினமும் வருமானம்!

“வீட்டுக்குப் பக்கத்துல ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கு. தனியா ஏரிப்பாசனத்துல ஒரு ஏக்கர் நிலமும் இருக்கு. அந்த ஒரு ஏக்கர் தண்ணியில்லாததால சும்மாதான் இருக்கு. இந்த ஒன்றரை ஏக்கர் நிலத்துல 1 ஏக்கர் நிலத்துல நிலக்கடலை போட்டு அறுவடை முடிஞ்சுருச்சு. 20 சென்ட் நிலத்துல அறுபதாம் குறுவை நெல், 20 சென்ட் நிலத்துல வெண்டை, 5 சென்ட் நிலத்துல கீரையும், மிளகாயும் இருக்கு. வயலுக்கு நடுவுல இருக்குற கொஞ்சம் காலி இடத்துல 140 நாட்டுக்கோழிகள் வளர்க்கிறேன். கோழிகளுக்கு அசோலாவைத் தீவனமாகக் கொடுத்துட்டிருக்கேன்.

நிலத்துல ஒரு கிணறு இருக்கு. தூர் வாராததால் அதுல தண்ணி இல்லாம இருந்துச்சு. ‘பசுமை விகடன்’ மூலமா என்னைத் தேர்ந்தெடுத்த நடிகர் விஷால் 50,000 ரூபாய் நிதி உதவி செஞ்சார். அதோட கைக்காசையும் கொஞ்சம் போட்டுக் கிணற்றைத் தூர்வாரி 6 அடி ஆழப்படுத்தினேன். இப்போ ஓரளவுக்குத் தண்ணீர் கிடைச்சிட்டுருக்கு. அதனால, கோடையிலும் விவசாயம் செய்ய முடியுது” என்ற பரத் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

நாட்டுக்கோழிகளில் தினமும் வருமானம்!

“ஒரு ஏக்கர் நிலத்துல 15 மூட்டை (80 கிலோ) நிலக்கடலை அறுவடை முடிஞ்சது. ஒரு மூட்டை நிலக்கடலை 2,400 ரூபாய்க்கு விற்பனையாகுது. 15 மூட்டை மூலமா 36,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். வெண்டை நடவு செஞ்சு 95 நாள் ஆகுது. இதுவரை 26 பறிப்புகள் முடிஞ்சுருக்கு. இன்னும் 14 பறிப்புகள் இருக்கும். இதுவரை 2,080 கிலோ வெண்டை கிடைச்சுருக்கு. ஒரு கிலோ 15 ரூபாய்னு கொடுத்துக்கிட்டு இருக்கேன். அது மூலமா 31,200 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இன்னும் கிட்டத்தட்ட 800 கிலோ அளவுக்கு வெண்டை கிடைக்கும். அது மூலமா, 12,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

140 கோழிகள்ல 100 பெட்டைக் கோழிகள் இருக்கு. தினமும் 25 முட்டைகள் கிடைக்கிது. ஒரு முட்டை 10 ரூபாய்னு கொடுத்துட்டிருக்கேன். இப்போதைக்கு முட்டைமூலம் மட்டும்தான் வருமானம். தினமும் 25 முட்டைகள் மூலமா 250 ரூபாய் வருமானம் கிடைக்கிது.

நாட்டுக்கோழிகளில் தினமும் வருமானம்!

ஒன்றரை ஏக்கர் நிலத்துல நிலக்கடலை, வெண்டை, கீரை, மிளகாய், நெல் எல்லாத்துலயும் சேர்த்து ஒரு போகத்துக்கு 1,00,000 ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைச்சிடும். அதுல 25,000 ரூபாய் செலவு போக 75,000 ரூபாய் லாபமா நிற்கும். மழை கைக்கொடுத்தா இரண்டு போகம் சாகுபடி செஞ்சு, இதுமாதிரி இரண்டு மடங்கு சம்பாதிச்சுடலாம்” என்றார்.

நிறைவாகப் பேசிய பரத், “பலவிதப் பயிர்களைக் கலந்து சாகுபடி செய்றதால, எனக்கு விலை பிரச்னை கிடையாது. நிறைய பேர் என்கிட்ட ‘நல்ல படிப்பு படிச்சுட்டு விவசாயத்துக்கு ஏன் வந்த’னு கேக்குறாங்க. அதுக்காக நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. மனநிறைவோட எனக்குப் பிடிச்ச வேலையைச் சந்தோஷமா செஞ்சுட்டு இருக்கேன்’’ என்று புன்னகையோடு விடைகொடுத்தார்.

- துரை.நாகராஜன், படங்கள்: பெ.ராக்கேஷ்

கோழிகளுக்கு அடர்தீவனம்

கோழி வளர்ப்பு பற்றிப் பேசிய பரத், “நாட்டுக்கோழிகளை மேய்ச்சல் முறையில் வளர்க்கிறப்போ, தீவனச் செலவு வெகுவாகக் குறையும். 120 நாள்கள்ல நாட்டுக்கோழி ஒன்றரை கிலோ எடை வரும். அதனால, இதுக்கேத்த மாதிரி தேவையான அளவு தீவனம் கொடுத்து வரவேண்டும். நாட்டுக்கோழிகளுக்கான தீவனத்தைக் குறைந்த செலவில் நாமே தயாரிச்சுக்கலாம்.

மக்காச்சோளம், தவிடு, பிண்ணாக்கு, கருவாடு, உப்பு எல்லாத்தையும் கலந்து தீவனம் தயாரிச்சுக்கலாம். குறைவான விலையில் கிடைக்கிற உடைந்த தானியங்களை வாங்கினாலே போதுமானது. ஒரு கிலோ தீவனத்தோட விலை, பத்து ரூபாயைத் தாண்டக் கூடாது.

100 கோழிகளுக்குத் தினமும் 10 கிலோ அளவு அடர்தீவனம் கொடுக்கணும். கீரைகள், முருங்கை இலை, அகத்தி, கோ-3 புல்னு பசுந்தீவனங்களை அதிகமாகக் கொடுக்கலாம். காய்கறிக் கடைகள்ல கிடைக்கிற காய்கறிக் கழிவுகளையும் கோழிகளுக்குக் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு மூணுவேளை தீவனம் கொடுக்கணும். அசோலாவையும் தீவனத்தோடு கலந்து கொடுத்தாத் தீவனச்செலவு கணிசமாகக் குறையும்” என்றார்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பொறிகள்!

பூச்சி மேலாண்மை குறித்துப் பேசிய பரத், “பெண் பூச்சிகளுடைய வாசனைதான் ஆண் பூச்சிகளை இனப்பெருக்கத்துக்காகக் கவர்ந்து இழுக்கும். அந்த அடிப்படையிலதான் இனக்கவர்ச்சிப்பொறி செயல்படுது. பெண் பூச்சிகளுடைய வாசனை வரக்கூடிய பெரோமோன் (Pheromone) என்கிற மருந்து குப்பியை, இனக்கவர்ச்சிப் பொறியில் வெச்சு மூடிடணும். மூடியில் இருக்குற சிறிய துளை வழியா, ஆண் பூச்சிகள் பொறியில விழுந்து மாட்டிக்கும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 8 இடங்கள்ல இனக்கவர்ச்சிப் பொறிகளை வைக்கணும்.

இது மட்டுமில்லாம மஞ்சள் நிற ஒட்டுப் பொறி இருக்கு. மஞ்சள் நிறம் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும். மஞ்சள் நிற அட்டையில் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு 8 இடங்கள்ல வெச்சுட்டா அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, இலைப்பேன் மாதிரியான பூச்சிகள் அட்டைகள்ல ஒட்டிக்கும்” என்று அனுபவங்களைச் சொன்னார்.

தொடர்புக்கு: பரத், செல்போன்: 99766 92219