Published:Updated:

`2400 சதுர அடி, 3 அடி ஆழத்தில் குளம்!'-பறவைகளின் தாகத்தை தீர்க்கும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

`2400 சதுர அடி, 3 அடி ஆழத்தில் குளம்!'-பறவைகளின் தாகத்தை தீர்க்கும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
`2400 சதுர அடி, 3 அடி ஆழத்தில் குளம்!'-பறவைகளின் தாகத்தை தீர்க்கும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் தண்ணீர் இன்றி தவித்த பறவைகள் மற்றும் விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக குளம் அமைத்து தண்ணீர் தேக்கி வைத்த பல்கலைக்கழக துணை வேந்தரை சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் பாலசுப்பிரமணியன். இவர் காலை மாலை நேரங்களில் பல்கலைக்கழக பகுதிகளில் வாக்கிங் செல்வது வழக்கம். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பறவைகள் குடிநீர் குழாய் மற்றும் பைப்புகளில் சொட்டுகின்ற நீரை குடித்து வந்தன. ஒரு சொட்டு நீர் அருந்த சிரமப்பட்டு பறவைகள் செத்துப் பிழைத்தன. இதைக் கவனித்த பாலசுப்ரமணியன் உடனே பறவைகள் குடிப்பதற்காக குளம் ஒன்று அமைத்து அதில் தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்ததோடு உடனே இதற்கான பணிகளைத் தொடங்கினார்.

கரிகாலசோழன் அரங்கம் அருகே 2,400 சதுர அடியில் மூன்று அடி ஆழத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி குளம் அமைத்தனர். பின்னர் அந்தக் குளத்தில் எப்போதும் நீர் நிரப்புகின்ற வகையில் தண்ணீர் டேங்கில் இருந்து  நேரடியாக குளத்துக்கு தண்ணீர் வரும் வகையில் குழாய் அமைத்தனர். அவை செம்மண் பகுதி என்பதால்  நிலத்தடி  தண்ணீர் உறிஞ்சாமல் இருக்க களிமண்ணை கொண்டு  பரப்பினர். பின்னர் தினமும் குளத்தில் தண்ணீரை நிரப்பி வைக்க பறவைகள் மற்றும் விலங்குகள் எந்த விதமான தடையுமின்றி தண்ணீரை குடித்து வருகின்றன.

இது குறித்து பல்கலைக்கழக வளாகத்தில் விசாரித்தோம். ``தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு என தற்போது 825 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு 358 வகையான செடி, கொடி, மரங்கள் உள்ளதால் அடர்ந்த சோலைவனம்போல் காட்சியளிக்கும். 79 வகையான மரங்கள் உள்ளன. 39 வகையான வண்ணத்துப் பூச்சிகளும், 94 வகைகளிலான பறவை வகைகள் உள்ளன. சுமாராக 10,000-க்கும் மேற்பட்ட பறவைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மயில்களும் இங்கு உள்ளன. நவம்பர் தொடங்கி மார்ச் வரை பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்தும் இங்கு பறவைகள் வரும். மேலும் மான், நட்சத்திர ஆமை, காட்டு முயல், குள்ள நரி உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன. பரந்து விரிந்த பகுதியில் மூலிகைச் செடிகள், மரங்கள், கொடிகளால் சுகாதாரமான காற்று வீசுவதால் இந்தப் பகுதியை தஞ்சாவூரின் நுரையீரல் என்று அழைக்கப்படுவது வழக்கம். இதனால் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த பகுதியாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், 40 அடியில் இருந்த நிலத்தடி நீர் தற்போது நானூறு அடி ஆழத்துக்குச் சென்றுவிட்டது. முன்பு 80 அடி அகலத்தில் 100 அடி ஆழத்தில் வளாகம் முழுவதும் ஆறு கிணறுகள் இருந்தன. அவற்றில் நீர் நிறைந்து வழிந்தோடும். ஆனால், அவை கடந்த பல ஆண்டுகளாக வறண்டு காணப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் பறவைகள் போன்ற உயிரினங்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வந்தன. அவற்றின் தாகத்தைப் போக்கவும், உயிரினங்களைக் காக்கவுமே இங்கு குளம் அமைத்து தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகிறது'' என்றனர்.

துணைவேந்தர் பாலசுப்ரமணியனிடம் பேசினோம். ``இங்கு எப்போதும் பறவைகள் சத்தம் தாலாட்டைப் போல கேட்டுக்கொண்டே இருக்கும். காலை, மாலை வேளைகளில் அவை அங்கும் இங்கும் பறந்து ஓரிடத்தில் குழுமி சத்தமிடுகிறபோது நம்மையும் அறியாமல் ஒரு உற்சாகம் நமக்குள் கரை புரளும்.

அதே நேரத்தில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தண்ணீர் வராத குடிநீர் குழாய்களில் அவை தன் அலகை வைத்து தண்ணீர் குடிப்பதற்கு படாதபாடுபடும். இதைக் கவனித்த  நான் பறவைகள், விலங்குகள் குடிப்பதற்கு உடனே குளம் அமைத்து தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என நினைத்து இதைச் செயல்படுத்தினேன். சுமார் ஒரு லட்சம் செலவில் இந்தக் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் அனைத்து உயிரினங்களும் தண்ணீர் அருந்துவதைப் பார்த்து அனைவரது மனமும் குளிர்கின்றன. முதற்கட்டமாக இந்த முயற்சியை செய்துள்ளோம் அடுத்ததாக மனித நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்குள்ளேயே இதேபோன்று குளங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதுபோன்று அமைத்தால் பாம்பு, நரி உள்ளிட்டவைகளுக்கும் எந்த தங்குதடையுமின்றி தண்ணீர் குடிக்கும். இதனால் அனைத்து வகையான உயிரினங்களும் பாதுகாக்கப்படுவதோடு அவை பெருகுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பது நம் தமிழர் மரபு. அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம்'' என பெருமிதத்துடன் தெரிவித்தார்.