Published:Updated:

மாரடைப்பால் உயிருக்குப் போராடிய யானை துரோணா... அலட்சியத்தால் பரிதாப பலி

எம்.குமரேசன்
மாரடைப்பால் உயிருக்குப் போராடிய யானை துரோணா...  அலட்சியத்தால் பரிதாப பலி
மாரடைப்பால் உயிருக்குப் போராடிய யானை துரோணா... அலட்சியத்தால் பரிதாப பலி

மைசூரு தசரா விழாவில் தங்க பல்லக்கு தூக்கி நடக்கும் யானை துரோணா அதிகாரிகள், பாகன்கள் அலட்சியம் காரணமாக பரிதாபமாக இறந்து போனது.

மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் யானைகள் நாகர்ஹோலே வனச்சரணாலயத்தைச் சேர்ந்தவை.  கடந்த இரு வருடங்களாக மைசூரு தசரா விழாவில் தங்கப் பல்லக்கு தூக்கி வந்த துரோணாவுக்கு (வயது 37) கடந்த வெள்ளிக்கிழமை முதல் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாகன்களும் மருத்துவர்களும் அதற்குத் தேவையான சிகிச்சையை முறையாக அளிக்கவில்லை. இந்நிலையில்,  தண்ணீர் குடிக்கச் சென்ற துரோணாவை அருகில் உள்ள மரத்தில் சங்கிலியால் கட்டிப் போட்டுள்ளனர்.

அப்போது, துரோணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மரணத்துடன்  அது போராடியது. அப்போதும், அருகிலிருந்த பாகன்களும் காவடிகளும் துரோணாவை சங்கிலியில் இருந்து விடுவிக்கவில்லை. துரோணா நெஞ்சுவலியால் துடித்துக்கொண்டிருந்தது. சங்கிலியில் இருந்து தன்னை விடுவிக்கவும் முயன்றது. அதனால், சங்கிலியை அறுக்க முடியாத நிலையில், இடது பக்கமாக சரிந்து அதே இடத்தில்  உயிரை விட்டது. கடைசிக்கட்டத்தில் துரோணா உயிருக்குப் போராடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவிவருகிறது. உயிருக்கு யானை நடத்திய போராட்டம் வன விலங்கு ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது. 

துரோணா யானை 2.69 மீட்டர் உயரமும் 4 டன் எடையும் கொண்டது. பாகன்கள், வனத்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே துரோணா யானை இறந்து போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வனத்துறை சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.  துரோணா யானை விவசாய நிலங்களில் பயிர்களைச் சாப்பிட்டு வந்தது. இதனால், 2014-ம் ஆண்டு வனத்துறை இந்த யானையைப் பிடித்து பழக்கப்படுத்தியது. பின்னர்,  நாகர்ஹோலேவில் உள்ள மத்திக்கோடு முகாமில் துரோணா பராமரிக்கப்பட்டு வந்தது.