Published:Updated:

பாசம் காட்டி வளர்த்தவருக்கே எமனாகிய மாடு... பரிதவிப்பில் குடும்பம்!

பாசம் காட்டி வளர்த்தவருக்கே எமனாகிய மாடு... பரிதவிப்பில் குடும்பம்!
பாசம் காட்டி வளர்த்தவருக்கே எமனாகிய மாடு... பரிதவிப்பில் குடும்பம்!

"இந்த மாடுகள்தான் இப்பவும் எனக்கு ஆதரவு. அதுங்களுக்கு நானும், எனக்கும் அதுங்களுமா இருந்து, சொச்ச காலத்த இங்கேயே வாழ்ந்திட வேண்டியதுதான். ஆனா, `இப்பவும் இப்படி மாடுகளைக் கட்டிக்கிட்டு அழுவுறியே'னு ஊர்சனம் ஏசுது."

`வளர்த்த கிடா மார்பில் பாயும்' என்கிற சொலவடை ஒன்றைக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல், கரூர் மாவட்டத்தில், பிள்ளையாக பாவித்து வளர்த்த காளைக் கன்று ஒன்று முட்டி, குடும்பத்தலைவர் இறக்க, இப்போது அந்தக் குடும்பமே சின்னாபின்னமாகி இருக்கிறது.  கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது லிங்கமநாயக்கன்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர்தான் காளைக்கன்று முட்டி இறந்தவர். கணவர் தன்னைவிட்டுப் பிரிய காளை ஒன்று காரணமாக இருந்தாலும், மாடுகள்மீது வெறுப்புக்கொள்ளாமல் இன்னமும் அன்பு பாராட்டி வருகிறார், மணியின் மனைவி எல்லம்மாள். ஆறேழு மாடுகளை வளர்த்து வரும் அவர், ஒவ்வொரு மாட்டுக்கும் சின்னக்கண்ணு, செவலை, வெள்ளையம்மாள் என்று பெயர்வைத்து அழைக்கிறார். கணவரை நினைத்து மறுகிக்கொண்டிருந்த எல்லம்மாளைத் தேற்றிப் பேசவைத்தோம்.

``இன்னமும் நம்ப முடியலைங்க... என் கணவரைக் கொன்றது, நாங்க பாசமா வளர்த்த ராஜாங்கிற காளைக்கன்றுதான்னு. சம்பவம் நடந்து 20 நாளு ஓடிருச்சு. அவரை, அந்த ராஜா முட்டிக்கொன்ற இடத்துல, என் கணவரோட ரத்தம் இன்னமும் திப்பிதிப்பியா உறைஞ்சு கிடக்கு. துக்கம் விசாரிக்க வந்த சொந்தபந்தமெல்லாம் கிளம்பிட்டாங்க. என்னோட ரெண்டு மகன்களும், அவங்கங்க குடும்பத்தைப் பார்க்கப் போயிட்டாங்க. ஆனா சோறு தண்ணியில்லாம, வயல் வேலைய பார்க்க முடியாம, மனசொடிஞ்சு, திக்பிரமை பிடிச்சாப்புல மூலையில உட்கார்ந்திருக்கிறேன்" என்றபோதே, அவர் கண்களில் பெருகிவந்த கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டு, அழுகையை நிறுத்தி, ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார். பின்பு அவரே தொடர்ந்து பேசினார்.

பாசம் காட்டி வளர்த்தவருக்கே எமனாகிய மாடு... பரிதவிப்பில் குடும்பம்!

``எங்களுக்குப் பூர்வீகம், திண்டுக்கல் மாவட்டத்துல உள்ள பெரியமஞ்சூளி. 40 வருஷத்துக்கு முன்னாடி, குடும்பத்தோடு இங்க வந்துட்டோம். நிலத்தைக் குத்தகை எடுத்து, வெள்ளாமை பண்றதுதான் தொழில். சொந்தமா எங்களுக்குக் காகாணி நிலமில்லை. ஒண்ட சொந்தமா குடிசைகூட இல்லை. இங்க பலபேர் நிலங்களைக் குத்தகை புடிச்சு வெள்ளாமை போட்டோம். எங்களுக்கு ரெண்டு பையன்ங்க. மூத்தவன் சிவானந்தன், இளையவன் பாஸ்கர். ரெண்டு பேருக்கும் திருமணம் ஆன கையோடு, பத்து வருஷத்துக்கு முன்னாடி எங்களை விட்டுட்டு, தனியா போய்ட்டாங்க. பெரியவன் குடும்பம் சேலத்துலயும், சின்னவன் குடும்பம் தலையாரிப்பட்டியிலும் செட்டிலாயிட்டு. நாலு வருஷத்துக்கு முன்னாடி, மணிங்கிறவருக்குச் சொந்தமான இந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை நானும், என் கணவரும் வருஷத்துக்கு 15,000 ரூபாய்க்குக் குத்தகை பேசி, வெள்ளாமை செய்துவந்தோம். அதோட, ஆறேழு மாடுங்க, ஆடுங்கனு வளர்த்தோம்.  

பாசம் காட்டி வளர்த்தவருக்கே எமனாகிய மாடு... பரிதவிப்பில் குடும்பம்!

அதுல ஒரு மாடு, மூணு வருஷத்துக்கு முன்னாடி காளைக்கன்றை ஈந்துட்டுச் செத்துப்போச்சு. அந்தக் காளைக்கன்றுக்கு ராஜானு பேர் வச்சு, பாசமா வளர்த்தோம். அதுக்குப் பால் ஊட்டி மட்டும் வளர்த்தோம். அதுக்காக ஒரு மாட்டுப் பாலை தனியா எடுத்து வச்சுருவோம். இந்த மூணு வயசுலயும் பால் குடிச்சுதான் வளர்ந்துச்சு. என்னையும், என் கணவரையும் எப்பவும் சுத்திச் சுத்தியே வரும். ஒரு சிலுப்பல், ஒரு முட்டல்னு இருக்காது. பதவிசா இருக்கும். `ராசா'னு கூப்பிட்டா, குனாரிக்கம் போட்டுக்கிட்டு, எங்க இருந்தாலும் ஓடோடி வந்துரும். இப்படி எங்களைப் பெத்த மகன்கள் கண்டுக்காமவிட்டதால, இந்தக் காளைக்கன்றைத்தான் மகனா நினைச்சு வளர்த்தோம். அதுவும் எங்ககிட்ட அப்படித்தான் நடந்துக்கும். ஆனா, இப்படி என் கணவரைக் கொன்னுபோடும்னு கனவுலயும் நினைக்கலையே.

சம்பவத்தன்னைக்கு, சாயந்தரம் அஞ்சரை மணி இருக்கும். நான் வெளியில் மேயப்போன ஆட்டை ஓட்டப் போயிருந்தேன். கால் மணிநேரம் ஆகி இருக்கும். பக்கத்து வீட்டுப் பையன்தான் மூச்சிரைக்க ஓடிவந்து, `ஆத்தா, உங்க கணவரை ராஜா குத்திக் கொன்னுட்டு. ரத்த வெள்ளத்துல கிடக்குறாரு'னு பதறிச் சொன்னான். என் கழுத்துல யாரோ கருக்கரிவாளால் ஓர் இழுப்பு இழுத்தாபுல ஆயிட்டு. ஈரக்கொலை நடுங்க ஓடிப்போய்ப் பார்த்தேன். என் கணவர் ரத்தக்குளமா செத்துக்கிடக்கார். பக்கத்துல ராஜா படுத்துக்கிட்டு, தன்னோட கொம்பால முட்டிமுட்டி, என் கணவரை எழுப்பியது. தூரமா நின்னுக்கிட்டுப் பலரும் பக்கத்துல போகப் பயப்படுறாங்க. நான் காளைக்கன்றைப் பிடிக்கப் போனேன். 'போகாதீங்க. உங்களையும் ஏதாச்சும் பண்ணிரும்'னு தடுத்தாங்க. ஆனா, நான் போய் ராஜாவைக் கயித்தைப் புடிச்சு இழுத்தேன். ஒரு சிலுப்பல் இல்லை. தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு, என்னோட வந்துச்சு. அதுக்குப் பிறகுதான், என் கணவரைப் போய்த் தூக்கினாங்க. ஆனா, உடம்புல உசிரு இல்லை. குரல்வளையில கொம்பால குத்தினதுல, அந்த இடத்திலேயே இறந்துட்டார் என் கணவர். எல்லோரும் மாட்டைக் கண்டமேனிக்குப் பேசுனாங்க. 'பெத்த புள்ளைமாதிரி வளர்த்தீங்களே. இப்படி எமனா மாறிட்டே'னு சொன்னாங்க. ஆனா, எனக்கு அதுமேல கோபமே வரலை. ஆனா, ராஜா எங்ககிட்ட அவ்வளவு பாசமா நடந்துக்கும். 

பாசம் காட்டி வளர்த்தவருக்கே எமனாகிய மாடு... பரிதவிப்பில் குடும்பம்!

`எப்படி இப்படி நடந்திருக்கும்'னு நினைச்சு குமுறினேன். துக்கத்துக்கு வந்த மகனுங்க ரெண்டுபேரும் பத்து நாள்லயே ஊருக்குக் கிளம்பிட்டாங்க. `வாம்மா..'னு என்னைய ஒருத்தனும் கூப்பிடலை. `இந்தக் காளைய வச்சுக்கக் கூடாது'னு அன்னைக்கே விலைபேசி, 32,000 ரூபாய்க்கு வித்துட்டாங்க. 20 நாளா நடைப்பிணமா வாழுறேன். ஒருவாய் சோறு இல்லை; கண்ணுல பொட்டுத் தூக்கம் இல்லை. நிராயுதபாணியா நிக்கிறேன். அவர் இருந்த காலத்திலேயே நிலத்துல பெருசா லாபம் வராது. இவ்வளவு நாள் உழைப்புல, நாங்க வாங்குனது இந்த ஆறேழு மாடுகளும், அஞ்சாறு ஆடுகளும்தான். அதைத்தான் ஆதரவா நினச்சோம். ஆனா, அந்தக் காளையே என் கணவரைக் கொன்னு போட்டுட்டு. இனி, அவர் இல்லாம தனியா எப்படி விவசாயம் செய்வேன்? இந்த மாடுகள்தான் இப்பவும் எனக்கு ஆதரவு. அதுங்களுக்கு நானும், எனக்கும் அதுங்களுமா இருந்து சொச்சகாலத்த இங்கேயே வாழ்ந்திட வேண்டியதுதான். ஆனா, `இப்பவும் இப்படி மாடுகளைக் கட்டிக்கிட்டு அழுவுறியே'னு ஊர்சனம் ஏசுது. ஆனா, அதுங்க அஞ்சறிவு ஜீவனுங்க. அதுகளுக்கு என்ன தெரியும்? பாசம் காட்டுனா, பெத்த புள்ளைங்களைவிட அதிகம் பாசம் காட்டுதுங்க. ஏதோ, என் கணவருக்கு விதி அவ்வளவுதான். வேறென்னத்த சொல்ல?" என்று இறுக்கமான குரலில் சொல்லி முடிக்கிறார்.

அப்போது, தூரமாகப் படப்புக்குள் மேய்ந்துக்கொண்டிருக்கின்றன, மாடுகளும், கன்றுகளும். அவற்றை, `சின்னக்கண்ணு, வெள்ளைய்யம்மா, பொழுதுபோச்சு வாங்க' என்று பெயர்சொல்லி பெருங்குரலில் அழைக்கிறார். எல்லம்மாளின் குரலைக் கேட்டதும், மேய்ச்சலை விட்டுவிட்டு, எல்லம்மாளிடம் வந்து, குழைவாக அன்னியோன்னியம் காட்டுகின்றன. எல்லம்மாளின் இந்த அன்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு