Published:Updated:

`132 நாள்கள் கூண்டுவாசம்!' - வெளியேவந்த சின்னத்தம்பி யானை

`132 நாள்கள் கூண்டுவாசம்!' - வெளியேவந்த சின்னத்தம்பி யானை
`132 நாள்கள் கூண்டுவாசம்!' - வெளியேவந்த சின்னத்தம்பி யானை

பயிற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், வரகளியாறு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சின்னதம்பி யானை நேற்று கூண்டிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டது.

`132 நாள்கள் கூண்டுவாசம்!' - வெளியேவந்த சின்னத்தம்பி யானை

விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, கோவை தடாகம் ஆனைக்கட்டி பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பி யானையை,  வனத்துறையினர் கடந்த ஜனவரி மாதம் பிடித்தனர். பிடிக்கும்போதே, தந்தம் உடைந்து, உடல் முழுவதும் காயங்கள் அடைந்து, உறவுகளை விட்டுப் பிரித்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, டாப்ஸிலிப் அருகே உள்ள வரகளியாறு பகுதியில் விடப்பட்டான் சின்னதம்பி. இவ்வளவு சித்ரவதைகள் செய்தும், சின்னதம்பி ஆரவாரம் இல்லாமல் அமைதியாகச் சென்றான். 

வரகளியாறு பகுதியில் விட்ட ஒரே வாரத்தில் தன் வாழ்விடத்தைத் தேடி மீண்டும் வெளியில் வந்தான் சின்னதம்பி. அங்கலக்குறிச்சி பகுதியில் தன் பயணத்தைத் தொடங்கிய சின்னதம்பி, உடுமலைப்பேட்டை கண்ணாடிப்புத்தூர் வரை சென்றான். 100 கி.மீ தூரம் பயணித்தாலும், யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தான் சின்னதம்பி. அவன் நினைத்திருந்தால் அந்த வழியில் பல மனிதர்கள், வீடுகள், வாகனங்களைத் தாக்கியிருக்க முடியும். சின்னதம்பி அப்படியெல்லாம் செய்யவில்லை.

மேலும், தன்னை மீண்டும் பிடிக்க வந்த கும்கி கலீமுடன் விளையாடுவது, உணவு சாப்பிடுவது என்று சமத்துக் குட்டியாக இருந்து தன் குணத்தையும், தன் இனம் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் உலகுக்கு உரக்கச் சொன்னான் சின்னதம்பி. இதைத்தொடர்ந்து, சின்னதம்பியை அதன் வாழ்விடத்திலேயே விட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. அதற்குள், சின்னதம்பியைப் பிடித்து, கும்கியாக மாற்ற வனத்துறை முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்தன.

`132 நாள்கள் கூண்டுவாசம்!' - வெளியேவந்த சின்னத்தம்பி யானை

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ``சின்னதம்பியைப் பிடித்து வனத்துறை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனால், பிப்ரவரி 15-ம் தேதி மயக்க ஊசி செலுத்தப்பட்டு சின்னதம்பி மீண்டும் பிடிக்கப்பட்டான். இந்தமுறை சின்னதம்பி கூண்டில் அடைக்கப்பட்டான். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சுதந்தரமாக சுற்றித் திரிந்த சின்னதம்பி நூறு நாள்களுக்கு மேலாக  கூண்டில் அடைக்கப்பட்டிருந்தான். 

`132 நாள்கள் கூண்டுவாசம்!' - வெளியேவந்த சின்னத்தம்பி யானை

இந்த நிலையில், பயிற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டதால், 132 நாள்களுக்குப் பிறகு சின்னதம்பி யானையை நேற்று வனத்துறையினர் கூண்டிலிருந்து வெளியில் எடுத்துள்ளனர். `பாகன்களின் கட்டளைகளுக்கு, சின்னதம்பி கீழ்படியத் தொடங்கியதால் கூண்டிலிருந்து வெளிக்கொண்டுவந்துவிட்டோம். இனி, சின்னதம்பி பாகன்களின் கண்காணிப்பில் வெளியில்தான் இருக்கும். அதை கும்கியாக மாற்றலாமா? என்பதை இனிதான் முடிவு செய்ய வேண்டும்' என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.