Published:Updated:

`வயலில் வைக்கப்பட்ட தீ..!' - ராமநாதபுரத்தில் 25 ஆட்டுக் குட்டிகளுக்கு நேர்ந்த கொடூரம்

தீயில் சிக்கி பலியான ஆட்டுக் குட்டிகள்
தீயில் சிக்கி பலியான ஆட்டுக் குட்டிகள்

ஆட்டுக் குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த குடுவையின் அருகில் உள்ள வயல்களில் மிஞ்சியிருந்த கழிவுகளைச் சுத்தம் செய்வதற்காக தீ வைத்துள்ளனர்.

அறுவடை செய்யப்பட்ட வயலைச் சுத்தப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட தீயில் சிக்கி பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 25 ஆட்டுக்குட்டிகள் கருகி பலியான சம்பவம் ராமநாதபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்தில் பலியான ஆட்டுக்குட்டிகள்
தீ விபத்தில் பலியான ஆட்டுக்குட்டிகள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ளது அடுத்தகுடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் நாகூரான், முருகேசன் என்பவருடன் சேர்ந்து செம்மறி ஆடுகள் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம்போல் 200-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

ஆட்டுக் குட்டிகளை பார்வையிடும் அதிகாரிகள்
ஆட்டுக் குட்டிகளை பார்வையிடும் அதிகாரிகள்

இரவில் மயிலாடுவயல் கிராமத்தில் ஓய்வெடுத்த இவர்கள் காலையில் ஓலைகளால் வேயப்பட்ட இரண்டு குடுவைகளில் 25 செம்மறி ஆட்டுக் குட்டிகளை அடைத்துவிட்டு மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், ஆட்டுக் குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த குடுவைகள் இருந்த நிலத்தின் அருகில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் மிஞ்சியிருந்த கழிவுகளைச் சுத்தம் செய்வதற்காக தீ வைத்துள்ளனர். காற்றின் வேகத்தினால் மளமளவென வயல் வெளியில் தீ பரவியது. இதனால், ஆட்டுக் குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த குடுவைகளிலும் தீ பற்றியது.

தீயில் சிக்கில் பலியான ஆட்டு குட்டிகள்
தீயில் சிக்கில் பலியான ஆட்டு குட்டிகள்

இதன் காரணமாக, முழுவதும் ஓலையினால் அமைக்கப்பட்ட குடுவையில் இருந்து தப்ப முடியாத நிலையில் 25 ஆட்டுக்குட்டிகளும் தீயில் சிக்கி பலியாகின. ஆட்டுக் குட்டிகளின் குரலைக் கேட்டு ஓடி வந்தவர்கள், அங்கு வந்து பார்த்தபோது குட்டிகள் அனைத்தும் கருகிக் கிடந்தன.

இதைக் கண்ட ஆட்டின் சொந்தக்காரர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த திருவாடானை வட்டாட்சியர் சேகர் உயிரிழந்த ஆடுகளைப் பார்வையிட்டார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்த நிலையில் உயிரிழந்த ஆட்டுக் குட்டிகளின் உடல் கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் புதைக்கப்பட்டது

அடுத்த கட்டுரைக்கு