Published:Updated:

முகாமில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை; தொற்றுப்பரவலைத் தடுக்க நடவடிக்கை!

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கு முதல் முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாதிரிகளை உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலின் இரண்டாம் அலையில் மக்கள் தவித்து வரக்கூடிய நிலையில், மனிதர்களால் பராமரிக்கப்படும் விலங்குகளுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவருவது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் `நீலா' என்ற பெண் சிங்கம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது. மேலும் 8 சிங்கங்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் இரண்டு சிங்கங்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்படும் விலங்குகள் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்திருந்தார். இதன்படி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யானைகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உத்தரப்பிரதேச மாநிலம் இடாக்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

வளர்ப்பு யானைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை குறித்து தெரிவித்த முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கௌசல், ``கடந்த வாரத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இதன் அடிப்படையில் தெப்பக்காடு முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதேபோல் முன்னுரிமை அடிப்படையில் யானை பாகன்கள், காவடிகள் 52 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு