கடையம் காட்டுக்குள் கொல்லப்பட்ட சிறுத்தை! - விஷம் வைத்த வேட்டைக்காரர்கள்?

மூன்று வயது மதிக்கத்தக்க சிறுத்தை உயிரிழந்த நிலையில் கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுத்தையை உடற்கூறாய்வு செய்துள்ளதால் உண்மை தெரியவரும் என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.
நெல்லை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கடையம், தோரணமலை. புகழ்பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ள இப்பகுதி முண்டந்துறை புலிகள் காப்பகம் என்பதால் சிறுத்தை, மான், மிளா, கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது வாடிக்கை. இது தொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததும் அவர்கள் வன விலங்குகளைக் காட்டுக்குள் அனுப்பி, மக்களின் அச்சத்தைப் போக்குவது வழக்கம்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களின் உள்ளே சிறுத்தைகள் நுழைந்து ஆடு, நாய்களைத் தூக்கிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.பொதுமக்கள்
கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்புப் பகுதிக்குள் சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று புகுந்து ஆடு, நாய் போன்றவற்றை இழுத்துச் சென்றது. அதனால் அந்தச் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்ததால் அந்தப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் குறைந்துவிட்டது.
தோரணமலைப் பகுதியில் பால் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை ஒன்று படுத்துக்கிடந்ததால் பதற்றமடைந்த அவர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அங்கு வந்து பார்த்தபோது சிறுத்தை அசையாமல் கிடந்துள்ளது. இதையடுத்து, அதன் அருகில் சென்று பார்த்தனர். அங்கு இறந்த நிலையில் சிறுத்தை கிடந்துள்ளது. அதன் கால் பகுதியில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருப்பதாக வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு, வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வளர்க்கப்பட்ட வேட்டை நாய்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில், அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை அறிந்த யாராவது விஷம் வைத்திருக்கக் கூடுமோ என்கிற சந்தேகமும் வனத்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது. கால்நடை மருத்துவர்கள் மூலம் சிறுத்தை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பின்னரே முழுத்தகவலும் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.