Published:Updated:

`அம்முவை அம்மாவுடன் சேர்க்க முடியல...'- தெப்பக்காடு முகாமுக்கு கொண்டுவரப்பட்ட குட்டியானை!

சத்தியமங்கலம், கடம்பூர் பகுதியில் பிடிபட்ட 3 மாத குட்டி யானை அம்மு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்டது.

elephant calf
elephant calf ( Arun.k )

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் பவளக்குட்டை வனப்பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி குட்டியானை ஒன்று ஊருக்குள் உலவி வந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அந்தக் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், அதே வனப்பகுதியில் இருந்த தாய் யானையிடம் சேர்க்கும் வகையில் வனத்தில் விட்டனர். எட்டு நாள்களுக்குப் பின் கடந்த 3-ம் தேதி, குட்டி யானை ஒன்று யானை கூட்டத்திலிருந்து பிரிந்தது. ஆசனூர் பகுதியில் உள்ள சாலைகளில் குட்டி யானை சுற்றித்திரிவதைக் கண்ட பொதுமக்கள் மீண்டும் வனத்துறையினரிடம் தெரிவித்தனர்.

elephant calf
elephant calf

அங்கு வந்த வனத்துறையினர், வனத்தில் விடப்பட்ட அதே குட்டி யானை மீண்டும் வனத்தை விட்டு வெளியேறியதை உறுதி செய்து பவானிசாகர் வன கால்நடை மருத்துவ மையத்தில் சேர்த்தனர். கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் காயங்களுக்குச் சிகிச்சை அளித்து பராமரித்து வந்தனர். அதற்கு `அம்மு' என்ற பெயரைச் சூட்டினர்.

இந்த நிலையில், குட்டி யானையை மீண்டும் தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி பண்ணாரி அம்மன் கோயில், பேலாரி கோயில் பகுதியில் விடுவித்தனர். ஆனால், அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. காட்டுக்குள் விடப்பட்ட குட்டியானை மீண்டும் வனத்துறையினர் இருந்த இடத்துக்கே வந்தது. இதையடுத்து, குட்டியானையை முதுமலை காப்பகத்தில் உள்ள மற்றொரு குட்டியுடன் சேர்ப்பதற்கு முடிவு செய்தனர்.

`அம்முவை அம்மாவுடன் சேர்க்க  முடியல...'- தெப்பக்காடு முகாமுக்கு கொண்டுவரப்பட்ட குட்டியானை!

குட்டி யானையை பரிசோதனை செய்து நல்லநிலையில் இருப்பதாக சான்றளித்தார் கால்நடை மருத்துவர். இந்த நிலையில், நேற்று இரவு சாம்ராஜ் நகர் மற்றும் குண்டல்பேட் வழியாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு குட்டி யானை கொண்டு வரப்பட்டது. தற்போது அங்கு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பூஜை செய்து மரக்கூண்டில் விட்டனர்.

குட்டி யானை குறித்து முதுமலை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``தெப்பக்காடு முகாமில் ஏற்கெனவே ரகு என்ற குட்டி யானை உள்ளது. தற்போது கொண்டுவரப்பட்ட இந்தக் குட்டி யானை 127 கிலோ எடை உள்ளது. முகாமில் மற்ற யானைகளுடன் பழகும் வாய்ப்பும் உள்ளது" என்றார்.

elephant calf
elephant calf

இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில் ``இந்த யானைக்கு 6 மாதம் வரை 15 லிட்டர் பால் மற்றும் 4 கிலோ லோக்டோஜென் தேவைப்படும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொண்டால் நல்ல முறையில் வளரும்" என்றனர்.