கோவை போளுவாம்பட்டி வனச்சரகம் வெள்ளைபதி பிரிவு அருகே சுமார் 8 வயது மதிக்கத்தக்க பெண் யானை வாயில் காயங்களுடன் கடந்த சில நாள்களாக வலம் வந்தது. வனத்துறையினர் கடந்த 2 நாள்களாக அதற்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், வாய் பகுதியில் காயம் காரணமாக அந்த யானை எதுவும் சாப்பிடவில்லை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக உயிரிழந்தது. முதல்கட்ட விசாரணையில், அந்த யானை அவுட்டுக்காய் வெடி சாப்பிட்டதில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை வனச்சரகம் தடாகம் அருகே கடந்த 17-ம் தேதி ஓர் ஆண் யானை இறந்த நிலையில் கண்டறியப்பட்டது. சக காட்டு யானையுடன் சண்டையிட்டதில், காயம் ஏற்பட்டு அந்த யானை இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். போளுவாம்பட்டி வனச்சரகம் நரசிபுரம் அருகே 7 வயது மதிக்கத்தக்க பெண் யானையின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
யானை உயிரிழந்த சுமார் 4 மாதங்கள் ஆகியிருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். டாப்ஸ்லிப் பகுதியில் கால் பகுதியில் காயத்துடன் சுற்றிய 5 வயது மதிக்கத்தக்க பெண் யானையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கோவை வனச்சரகம் வரப்பாளையம் அருகே, பிப்ரவரி மாதம் 12-ம் தேதி மனோகரன் என்பவர் தோட்டத்து மின்வேலியில் சிக்கி 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. பிப்ரவரி 7-ம் தேதி பெரியதடாகம் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நலக்குறைபாடு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
பிப்ரவரி 5-ம் தேதி காரமடை வனச்சரக மானார் பிரிவு அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது. ``தொடர்ந்து யானைகள் உயிரிழப்பதால், வனத்துறை யானைகளை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.