Published:Updated:

தென்காசி வனப்பகுதியில் உயிரிழந்த யானை! - காரணத்தை அறிய மருத்துவக் குழுவினர் ஆய்வு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதுமையின் காரணமாக யானை உயிரிழந்ததா, வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

வனத்துறை மற்றும் காலநடை மருத்துவக் குழுவினர்
வனத்துறை மற்றும் காலநடை மருத்துவக் குழுவினர்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப் பகுதியையொட்டிய குடியிருப்புகளுக்குள் புலி, சிறுத்தை, யானை கரடி ஆகியவை நுழையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் கிராமம் பூலாங்குடியிருப்பு தோணிப்பாறை பகுதியில் நாகூர் கனி என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது. அவரது தோட்டத்துக்கு அருகே யானை ஒன்று இன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

செங்கோட்டை வனத்துறை அதிகாரிகள், நெல்லை கால்நடை மருத்துவக் குழுவினருடன் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தார்கள். அப்போது யானை காட்டுக்குள் இறந்துகிடந்தது. அதனால் மருத்துவக் குழுவினர் யானையின் உடலைப் பரிசோதித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவக் குழுவினர் ஆய்வு
மருத்துவக் குழுவினர் ஆய்வு

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``செங்கோட்டை வனப்பகுதியில் இந்த யானை கடந்த சில தினங்களாகவே சுற்றி வந்துள்ளது. முதுமையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த யானைக்குச் சிறிது நோய் ஏற்பட்டதால் தானாகவே இறந்திருக்கும் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது’’ என்றார்கள்.

யானை உயிரிழந்தது தொடர்பாகச் செங்கோட்டை வனச்சரகர் பாலகிருஷ்ணன் வனவர் பாண்டியராஜன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். வனப்பகுதியில் இறந்துகிடந்த யானையை அப்பகுதி மக்கள் சோகத்துடன் பார்த்துச் சென்றார்கள்.