Published:Updated:

கொத்து கொத்தாக செத்து மடியும் விலையில்லா ஆடு, மாடுகள்!

மாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
மாடுகள்

கமிஷனுக்காக இயங்குகிறதா நீலகிரி கால்நடைத்துறை?

கொத்து கொத்தாக செத்து மடியும் விலையில்லா ஆடு, மாடுகள்!

கமிஷனுக்காக இயங்குகிறதா நீலகிரி கால்நடைத்துறை?

Published:Updated:
மாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
மாடுகள்

தீவன அபிவிருத்தி திட்டம், விலையில்லா ஆடு, கோழி வழங்கும் திட்டம், 20,000 நாட்டு மாடுகளை உருவாக்கும் மத்திய அரசின் கே.கே.ஏ திட்டம் (க்ரிஷ் கல்யாண் அபியான்) என நீலகிரி மாவட்டத்தில் கால்நடைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் கடும் குளறுபடியில் இருக்கின்றன. ‘கமிஷனையே பிரதான நோக்கமாக் கொண்டு அவை செயல்படுத்தப்படுகின்றன’ என்று குமுறுகிறார்கள் நீலகிரி மக்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளும் வகையில் கடந்த ஆறு ஆண்டுகளாக விலையில்லா ஆடு, மாடு, வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. கடந்தாண்டு முதல் விலையில்லா நாட்டுக்கோழியும் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்ட மக்களுக்கு இந்தத் திட்டங்கள் பயனளித்தாலும், நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் கால்நடைத்துறையின் முறைகேடுகளால் தோல்வி அடைந்திருக்கிறது.

ஆடுகள்
ஆடுகள்

மலைப்பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கு, சமவெளிப் பகுதிகளிலிருந்து கால்நடைகள் வாங்கி வரப்படுவதுதான் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம். சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைப்பிரதேசத்துக்கு வருகிற கால்நடைகள் கடுங்குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிடுகின்றன. இதனால் மக்களின் உழைப்பு வீணாவதுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். அக்டோபர் மாதம் 2-ம் தேதி, நீலகிரி மாவட்டம், பழத்தோட்டம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், ‘எங்களுக்கு விலையில்லா ஆடுகள் வேண்டாம்.’ என்று இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு இந்தப் பகுதியில் ஒருவருக்கு தலா நான்கு ஆடுகள் வீதம் 400 பயனாளிகளுக்கு 1,600 ஆடுகளும், ஒருவருக்கு 50 கோழிகள் வீதம் 800 பயனாளிகளுக்கு 40,000 கோழிகளும் வழங்கப் பட்டன. சில நாள்களிலேயே இவற்றில் பாதிக்குமேல் கொத்து கொத்தாக இறந்துபோயின. இதேபோல் பழங்குடியினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 70 பேருக்குக் கறவை மாடுகள் வழங்கப்பட்டன. அவற்றிலும் கணிசமான மாடுகள் நுரையீரல் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தன.

இந்தப் பிரச்னை குறித்து கால்நடை மருத்துவர் ஒருவரிடம் பேசினோம். “சமவெளிப் பகுதிகளிலிருந்து கால்நடைகள் நீலகிரிக்குக் கொண்டுவரப்படும்போது 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை இருப்பதால் அவற்றுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்குச் சிகிச்சை அளிக்க முடியாது. குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரித்தால் மட்டுமே இறப்பைத் தடுக்க முடியும். அல்லது இந்தச் சூழலைத் தாங்கி வாழும் வகையில் மலைப்பிரதேசங்களில் வளர்க்கப்பட்ட கால்நடைகளை வாங்கி வழங்கவேண்டும்’’ என்றார்.

தி.மு.க-வைச் சேர்ந்த கூடலூர் எம்.எல்.ஏ-வான திராவிடமணியிடம் பேசினோம். “மலைப் பிரதேசங்களில் வழங்குவதற்கு, மலைப்பிரதேசங் களில் வளர்க்கப்பட்ட கால்நடைகளைத்தான் வாங்க வேண்டும். அப்படிச் செய்யாமல் ஏன் சமவெளிப்பகுதிகளிலிருந்து வாங்குகிறார்கள்? அதுவும் தங்களுக்கு வேண்டப்பட்ட பண்ணைகளில் மட்டுமே கால்நடைகளை வாங்குகின்றனர். ஆடு, கோழி வளர்ப்புக்குப் பயனாளிகளுக்குப் பயிற்சி வழங்குவதற்கு ஒதுக்கப்படும் நிதியையும் முறையாக விநியோகிப் பதில்லை. அதிலும் பொய்க்கணக்கு சமர்ப்பித்துக் கொள்ளையடிக்கின்றனர். இதில் பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது. இதுபற்றி புகார் கொடுத்தும் ஊழல் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார் கோபத்துடன்.

கொத்து கொத்தாக செத்து மடியும் விலையில்லா ஆடு, மாடுகள்!

ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘தீவன அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கால்நடை வளர்ப்பவர்களுக்கு விதை உள்ளிட்ட பொருள்களை வழங்க வேண்டும். அந்தத் திட்டத்திலும் ஏகப்பட்ட முறைகேடுகள். ஏற்கெனவே கொடுக்கப்பட்ட விலையில்லா கால்நடைகள் தொடர்ந்து இறக்கும் நிலையில், அதைப்பற்றிக் கவலைப்படாமல், இந்த ஆண்டும் 3,000 பயனாளிகளுக்கு விலையில்லா கால்நடைகள் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. வனப்பகுதி யும், வன விலங்குகளும் மிகுந்த நீலகிரி மாவட்டத் தில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பது சூழலுக்கு உகந்தது அல்ல. இதனால், சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டைக்காக ஊருக்குள் நுழையும். மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் நுழையும் ஆடு, மாடுகளால் வனவிலங்குகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும். எனவே மாற்றுத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு களை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். “கால்நடை பல்கலைக்கழக உதவியுடன் கால்நடைகளின் இறப்பைத் தடுக்க முயற்சி செய்துவருகிறோம். தற்போது, உறை பனிக்காலம் முடிந்த பிறகே நீலகிரிக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம். நீங்கள் சொல்வதுபோல இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருந்தால் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.