Published:Updated:

மோப்ப சக்தி மூலம் கொரோனாவை கண்டறியும் நாய்கள்... ராணுவத்தில் கலக்கும் நம்ம ஊர் சிப்பிப்பாறை!

கொரோனாவைக் கண்டறியும் செயல் விளக்கத்தின்போது...
கொரோனாவைக் கண்டறியும் செயல் விளக்கத்தின்போது...

சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் இனத்தைச் சேர்ந்த நாய்களுக்கு கொரோனாவை கண்டறியும் வகையிலான மோப்ப சக்தி பயிற்சியை வழங்கிவருகிறது இந்திய ராணுவம்.

கொரோனாவைக் கண்டறிய மருத்துவ உலகம் சில நடைமுறைகளைப் பின்பற்றுகிறது. அறிகுறிகளைப் பொறுத்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மூலம் ஒருவருக்கு கொரோனாவை கண்டறிகின்றனர். பல்வேறு நாடுகளில் இதுதான் நடைமுறை என்றாலும் பரிசோதனை காலத்திற்கான நேர விரயத்தைத் தவிர்த்து விரைவில் கொரோனாவைக் கண்டறிவதற்கான வழிகள் குறித்து சில நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. அந்த வகையில், மோப்ப நாய்களை வைத்து கொரோனாவை கண்டறியும் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது இந்திய ராணுவம்.

சிப்பிப்பாறை
சிப்பிப்பாறை

ராணுவத்தில் பல்வேறு வகையான மோப்ப நாய்கள் இருக்கின்றன. அதில் சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் இனத்தைச் சேர்ந்த நாய்களுக்கு கொரோனாவை கண்டறியும் வகையிலான மோப்ப சக்தி பயிற்சியை வழங்கிவருகிறது இந்திய ராணுவம். கொரோனா பாதிப்பு ஏற்பட்டோரின் வியர்வை, சிறுநீர் மாதிரிகளை மோப்பம் பிடிக்கச் செய்து கொரோனா தொற்றைக் கண்டறியும் வகையில் இந்த பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது.

பி.பி.இ கிட் அணிந்த ராணுவ வீரர்கள் இதற்கான செயல் விளக்கத்தைக் காண்பித்துள்ளனர். செயல் விளக்கத்தில் ஜெயா, மணி என்ற இரு சிப்பிப்பாறை நாய்களும் காஸ்பர் என்ற பெயர் கொண்ட காக்கர் ஸ்பேனியல் இனத்தைச் சேர்ந்த நாயும் பங்கெடுத்திருக்கின்றன. இந்த நாய்கள் 3,800 மாதிரிகளில் 22 கொரோனா பசிட்டிவ் மாதிரிகளைக் கண்டறிந்துள்ளன. இதையடுத்து, மோப்ப நாய்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக மோப்ப நாய்களுக்கு இந்த பயிற்சியை அளிக்கும் கர்னல் சுரேந்தர் சைனி தெரிவித்துள்ளார்.

கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம்... நாட்டு நாய்களை தேர்வு செய்வது எப்படி?

இதுகுறித்து அவர் கூறும்போது, "லாப்ரடார்கள் மற்றும் உள்நாட்டு இனமான சிப்பிப்பாறை வகை நாய்கள் சிறுநீர் மாதிரிகளிலிருந்து கொரோனாவை கண்டறியும் வகையிலும், காக்கர் ஸ்பேனியல் நாய்களுக்கு வியர்வை மாதிரிகளிலிருந்து கொரோனாவை கண்டறியும் வகையிலும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரையான சோதனையில் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட நாய்களின் உணர்திறன் 95 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது.’ என்றார்.

இங்கிலாந்து, அபுதாபி ஆகிய நாடுகளிலும் மனிதனின் உடல் வாசனையை வைத்தே கொரோனாவை கண்டறியும் வகையில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய ராணுவமும் கொரோனாவைக் கண்டறிவதற்கு மோப்ப நாய்களைப் பயிற்றுவித்து வருகிறது. இதில் சிப்பிப்பாறையும் கலக்கி வருவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு