Published:Updated:

`28 ஆயிரம் கிலோ மீட்டர் பைக் பயணம்!’ - புலிகளைக் காக்க மே.வ தம்பதியின் விழிப்புணர்வுப் பிரசாரம்

புலிகள் மற்றும் காடுகளைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, 28 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக்கிலேயே பயணித்து, வேலூர் வந்தனர்.

மேற்கு வங்கத் தம்பதி
மேற்கு வங்கத் தம்பதி

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ரத்தினதாஸ். அஸ்ஸாமில் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி கீதாஞ்சலி. இந்தத் தம்பதியர், வனப்பகுதிகள் மற்றும் புலிகளைப் பாதுகாக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் பைக் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள்.

புலி
புலி

கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி, கொல்கத்தாவிலிருந்து பைக் பயணத்தைத் தொடங்கினர். அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், பீகார், பஞ்சாப், டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு, வேலூருக்கு வந்தனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மக்களைச் சந்தித்து, புலிகள் மற்றும் வனப்பகுதிகளைப் பாதுகாக்க துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிருபர்களிடம் பேசிய அந்தத் தம்பதியர், ‘``இதுவரை, 28 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக்கிலேயே பயணித்து வந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம்.

மேற்கு வங்கத் தம்பதி
மேற்கு வங்கத் தம்பதி

இந்தியா முழுவதும் நாங்கள் 34 புலிகள் காப்பகம் மற்றும் சரணாலயங்களைப் பார்த்திருக்கிறோம். தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம் உள்பட நான்கு புலிகள் காப்பகத்தைப் பார்வையிட்டுள்ளோம். பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களையும் மாணவர்களையும் சந்தித்துள்ளோம்.

அவர்களிடம், ‘‘புலிகளைப் பாதுகாத்தால் மட்டுமே காடுகள் பாதுகாப்பாக இருக்கும். காடு பாதுகாக்கப்பட்டால், மக்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். காடுகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும்’’ என்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். 

பைக்கிலேயே சுற்றுப்பயணம்
பைக்கிலேயே சுற்றுப்பயணம்

அடுத்து, கர்நாடகா மற்றும் ஒடிசா வழியாகச் சென்று, மீண்டும் கொல்கத்தாவிலேயே பயணத்தை நிறைவுசெய்ய உள்ளோம்’’ என்றனர். இவர்களின் பயணத்துக்கு, வேலூர் மக்கள் வாழ்த்துகள் தெரிவித்து வழியனுப்பிவைத்தனர்.