சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

நிற்பதுவே... நடப்பதுவே... பறப்பதுவே!

யானை
பிரீமியம் ஸ்டோரி
News
யானை

பசி எவரையும் மிருகமாக்கிவிடும். மிருகங்களை என்னவாக்கும்? குளிர் நாள்களில் பனிப் பாலைவனத்தில் உணவு தேடுவதே பெரும் போராட்டமாகிவிடும்.

உற்சாகம், சோகம், துக்கம், கருணை, பிரமிப்பு என்று உயிரினங்களின் புகைப்படங்கள் நமக்கும் விதவிதமான உணர்வுகளைக் கடத்தும். நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த வனவிலங்கு புகைப்படக்காரர்களைத் தேர்வு செய்து விருது கொடுக்கும். பல்வேறு பிரிவுகளில் இந்த ஆண்டு விருது பெறும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உணர்வோவியம்.
மழைக்குளியல் தவம்
மழைக்குளியல் தவம்

40 வயதைத் தொட்டிருக்கும் மலைக் கொரில்லாவான கிபாண்டேவைப் படமெடுக்க நான்கு மணி நேரம் கிடுகிடு மலையில் நடந்து போனார் புகைப்படக்கலைஞர் மஜீத் அலி. திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த மழையை ரசித்து, அதில் நனைந்து குளித்தபடி வெட்டவெளியில் கண்மூடி நின்றிருந்தது கிபாண்டே. குழந்தைகள் மழையை ரசித்து நனைவது போல ஆனந்த பாவனை காட்டிய மலைக்கொரில்லாவைப் பார்த்துச் சிலிர்த்துவிட்டார் மஜீத் அலி. ஆப்பிரிக்காவின் ருவாண்டா, காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளை ஒட்டிய மலைக்காடுகளில் இவை வாழ்கின்றன. காடுகள் அழிவதாலும், நோய்களாலும், வேட்டையாலும் அழிந்துவரும் அரிய உயிரினம் மலைக்கொரில்லா.

நீளும் ஆறுதல் கரம்
நீளும் ஆறுதல் கரம்

புரதச்சத்து நிறைந்த உணவுத் தேவைக்காக சிம்பன்ஸி குரங்குகள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் இப்படிக் கொல்லப்படும் சிம்பன்ஸிகளின் குட்டிகள் அநாதரவாக விடப்படுகின்றன. இப்படி அநாதையாகும் குட்டிகளில் பத்தில் ஒன்று மட்டுமே மீட்கப்படுகிறது. நாம் குழந்தைகளுக்குத் தருவது போன்ற அதே அரவணைப்பும் அன்பும் தந்தால் மட்டுமே அவை நல்ல மனநிலையுடன் வளரும். காங்கோ தலைநகர் கின்ஷாசாவில் இப்படி மீட்கப்பட்ட சிம்பன்ஸி குட்டிகளுக்கான மறுவாழ்வு முகாம் இருக்கிறது. அங்கு இரண்டு குட்டிகளுக்கு தாய்போல அரவணைப்பு தருகிறார் இந்தப் பெண். பிரென்ட் ஸ்டிர்டன் எடுத்த இந்தப் புகைப்படம், தாயன்பை உணர்த்தும் இயற்கையின் அதிசயம்.

கண்ணாடிச் சிறை
கண்ணாடிச் சிறை

பிரமாண்ட உயிரினத்தை, வீதிகளில் யாசகம் கேட்கும் விலங்காக மாற்றிய சிறுமை நமக்கு மட்டுமே சொந்தமில்லை. தாய்லாந்தில் வனங்களில் வசிப்பதைவிட அதிக யானைகள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வசம் இருக்கின்றன. இந்தக் கொரோனா காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை தடைபட்டதால், வருமானம் குறைந்து இவற்றைப் பராமரிக்க முடியாமல் தடுமாறுகின்றன இந்த நிறுவனங்கள். அதனால் இயற்கைக்கு முரணான பல விஷயங்களைச் செய்வதற்கு இந்த யானைகள் வற்புறுத்தப்படுகின்றன. ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் தண்ணீருக்கு அடியில் நீந்தும் இந்த யானைக்குட்டியின் துயரமும் அப்படிப்பட்டதுதான். தாய்லாந்தில் ஒரு தனியார் உயிரியல் பூங்காவில் இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் ஆடம் ஆஸ்வெல்.

வாழ்நாள் துணை
வாழ்நாள் துணை

மனிதர்கள் போலவே காலம் முழுக்கத் தம்பதியாக இணைந்து வாழும் இயல்பு சில பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உண்டு. நம் ஊர் காகம் போல அமெரிக்கா மற்றும் கனடாவில் அதிகம் வாழும் ரேவன் அப்படி ஒரு பறவை. அன்பான அழைப்புகளால் அவை உரையாடும். உணவு முதல் கூழாங்கல் வரை ஒன்றுக்கொன்று பரிசளிக்கும். அப்படி ஒரு ரேவன் தம்பதி உணவு ஊட்டிக்கொள்ளும் காட்சியைப் படம் பிடித்திருக்கிறார் ஷேன் காலின்.

முட்டைக்கூடு
முட்டைக்கூடு

மனிதர்கள் கைகளால் நூலைப் பிரித்துக் கோத்து ஆடை நெய்வதுபோல, சிலந்திகள் தங்கள் இழையிலிருந்து கூடுகளை உருவாக்குகின்றன. இந்தக் கூட்டுக்குள் தங்கள் முட்டைகளை வைக்கின்றன. இவை பொரித்து புதிய சிலந்திக் குஞ்சுகள் வரும் வரை பத்திரமாகப் பாதுகாக்கின்றன. ஜில் வைஸன் எடுத்த இந்தப் படம், ஒரு சிலந்தி இழையை உருவாக்கி தன் முன்னங்கால்களால் கூடு செய்வதைக் காட்சிப்படுத்துகிறது.

முட்டைக்கூடு
முட்டைக்கூடு

நார்வே பனிப்பிரதேசத்தில் வசிப்பவை ஸ்வால்பர்டு கலைமான்கள். வருடத்தின் சில நாள்களில் மட்டுமே பனி விலகித் தரை தெரியும். அப்போது விளையும் புற்களை மட்டுமே மேய்ந்து, வருடம் முழுக்க ஜீவித்திருக்கும் அபூர்வ விலங்கு இது. ஒரு கூட்டத்தில் இருக்கும் அத்தனை கலைமான்களையும் ஒற்றை ஆண் மான் கட்டுப்படுத்தும். இந்த உரிமைக்காக ஆண் மான்களுக்கு இடையே ஆக்ரோஷமாகப் போர் நடக்கும். கொம்புகள் மோதி உடையும் அளவுக்குப் போர் உக்கிரமாக இருக்கும். போரில் ஜெயிக்கும் கலைமான், தோற்ற ஆண் மானைக் கூட்டத்திலிருந்து துரத்திவிடும். ஸ்டெஃபானோ அண்டர்தின்னர் எடுத்த இந்தப் படம், அந்தக் கோபமான போரை நமக்கு உணர்த்துகிறது.

முட்டைக்கூடு
முட்டைக்கூடு

பசி எவரையும் மிருகமாக்கிவிடும். மிருகங்களை என்னவாக்கும்? குளிர் நாள்களில் பனிப் பாலைவனத்தில் உணவு தேடுவதே பெரும் போராட்டமாகிவிடும். அதனால் துருவக்கரடிகள் அந்த நாள்களில் கொடூரமான மனநிலையில் இருக்கும். கோடை வந்ததும் பனி உருகி நதிகள் தென்பட்டதும், சாப்பிட ஏராளமான மீன்கள் கிடைக்கும். எனவே இயல்பான உணர்வுகள் அவற்றின் மனதில் கிளர்ந்தெழும். கனடாவின் ஹட்சன் வளைகுடாப் பகுதியில் இரண்டு துருவக்கரடி சகோதரிகளின் அன்பு விளையாட்டைக் காட்சிப்படுத்தியவர் மார்டின் க்ரேகஸ்.