Published:Updated:

சீறிப்பாய்ந்த 64 காளைகள், 32 குதிரைகள்... தூத்துக்குடியில் களைகட்டிய முத்தாரம்மன் கோயில் திருவிழா!

தூத்துக்குடியில் ’உலக முத்தாரம்மன் கோயில் திருவிழா’வை முன்னிட்டு நடத்தப்பட்ட மாட்டு வண்டிப் பந்தயத்தில் இரண்டு பிரிவுகளில் 32 மாட்டுவண்டிகளில் 64 காளைகளும், குதிரை வண்டிப் பந்தயத்தில் 32 குதிரை வண்டிகளில் 32 குதிரைகளும் சீறிப்பாய்ந்தன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ’பொங்கல் பண்டிகை’க்கு அடுத்தபடியாக, கோயில் திருவிழாக்களை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டிப் பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம். கருங்குளம் அருகில் உள்ள கால்வாய் கிராமத்தில் ’உலக முத்தாரம்மன் கோயில் திருவிழா’வை முன்னிட்டு மாட்டுவண்டிப் பந்தயம் மற்றும் குதிரை வண்டிப் பந்தயம் நடந்தன. பெரிய மாட்டுவண்டி மற்றும் சின்ன மாட்டுவண்டி என இரண்டு பிரிவுகளில் மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

மாட்டுவண்டிப் பந்தயம்
மாட்டுவண்டிப் பந்தயம்

இதில், தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டி பிரிவில் 9 மாட்டுவண்டிகளும், சிறிய மாட்டுவண்டி பிரிவில் 23 மாட்டு வண்டிகளும் என 32 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டுவண்டிகளுக்கு 16 கி.மீ தூரமும், சிறிய மாட்டுவண்டிகளுக்கு 11 கி.மீ தூரமும், குதிரை வண்டிகளுக்கு 16 கி.மீ தூரமும் பந்தயங்களுக்கான தொடு எல்லைகளாக அறிவிக்கப்பட்டன.

பந்தயம் தொடங்குவதற்கு முன்னதாக மாட்டுவண்டி, குதிரை வண்டிக்காரர்கள், சாமி கும்பிட்டுவிட்டு காளைகள், குதிரைகளின் நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டனர். அனைத்து மாட்டுவண்டிகளின் காளைகளுக்கும், குதிரைவண்டிகளின் குதிரைகளுக்கும் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. முதலில், பெரிய மாட்டுவண்டிப் பந்தயமும், இரண்டாவதாக சின்ன மாட்டுவண்டிப் பந்தயமும் மூன்றாவதாக குதிரைவண்டிப் பந்தயமும் நடைபெற்றது. காளைகள், குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தன. சாலைகளின் இருபுறமும் ஊர்மக்கள் கூடிநின்று பந்தயத்தைக் கண்டு ரசித்தனர். சிறுவர்கள், இளைஞர்களின் கைத்தட்டல், விசில் சத்தத்தின் உற்சாகத்தில் மாட்டுவண்டிகள், குதிரைவண்டிகள் ஒன்றையொன்று முந்திச் சென்றன.

குதிரை வண்டிப் பந்தயம்
குதிரை வண்டிப் பந்தயம்

3 பிரிவு பந்தயங்களில் முதல் 5 இடங்களைப் பிடித்த மாட்டுவண்டி, குதிரை வண்டிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. பெரிய மாட்டுவண்டிப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த சேரன் செங்குட்டுவனின் மாட்டு வண்டி முதல் பரிசையும், சிறிய மாட்டுவண்டிப் போட்டியில் தூத்துக்குடி, வல்லநாடுவைச் சேர்ந்த சிவபார்வை பங்களாவின் மாட்டுவண்டி முதல் பரிசையும், நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த மடத்தானின் குதிரைவண்டி முதல் பரிசையும் பெற்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நரசிம்மர் தரிசனம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?|சுமதி ஶ்ரீ | Thinamthorum thiruvarul

கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த சிவாவிடம் பேசினோம்,

“எங்க ஊரு கோயில் திருவிழா ஒவ்வொரு ஆடி மாசமும் நடக்கும். நாலு தலைமுறையா கோயில் திருவிழா தொடர்ந்து நடந்துட்டு வந்தாலும், மூணு வருசமாத்தான் மாட்டுவண்டி, குதிரை வண்டிப் பந்தயம் நடத்திட்டு வர்றோம். வழக்கமா தூத்துக்குடி மாவட்டத்துல கோயில் திருவிழாக்களை முன்னிட்டு மாட்டுவண்டிப் பந்தயங்களே பெரும்பாலும் நடத்தப்படும். ஆனா, எங்க ஊரு திருவிழாவுல குதிரைவண்டிப் பந்தயத்தையும் சேர்த்து நடத்திட்டு வர்றோம். கொரோனா ஊரடங்குனால இந்த வருஷம் மாட்டுவண்டிகள், குதிரை வண்டிகளின் எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு” என்றார்.

தேனியைச் சேர்ந்த மாட்டுவண்டி உரிமையாளரான ராசா, ”ஜல்லிக்கட்டு மாடுகளை தயார்படுத்துறதைப் போலத்தான் மாட்டுவண்டிப் பந்தயத்துக்காகவும் காளைகளைத் தயார்படுத்துறோம்.

மாட்டுவண்டிப் பந்தயம்
மாட்டுவண்டிப் பந்தயம்

தினமும் காலையிலயும் மாலையிலயும் காளைகளைக் குளிப்பாட்டிட்டு கண்மாயில நீச்சல் பயிற்சி கொடுப்போம். பிண்ணாக்கு மட்டுமில்லாம உளுந்துக் கரைசல், பேரீச்சம்பழம், நாட்டுக்கோழி முட்டை ஆகிய சத்தான உணவுகளைச் சாப்பிடக் கொடுப்போம். காளைகள் ஓடும்போது, கால் வலிமையா இருக்குறதுக்காக ஆட்டுக்கால் சூப் கொடுக்கிறோம். தினமும் வண்டியில பூட்டி காளைகளுக்கு தீவிர ஓட்டப்பயிற்சியும் கொடுக்கிறோம். ஜல்லிக்கட்டுக் காளைக்கு இணையாக இதுங்களையும் பக்குவமான உணவு முறையிலயும் கண்காணிப்புலயும் பார்த்துக்கிட்டதாலதான், காளைகளும் பந்தயக் குதிரைகளைப்போல சீறிப் பாயுதுங்க” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு