Published:Updated:

நீரிழிவு, மாரடைப்பு நமக்கு மட்டுமல்ல; நாய்களுக்கும் வருமாம்! - சென்னை சம்பவமும் மருத்துவ விளக்கமும்

Dog
Dog ( Pixabay )

நாகரிகம் என்ற பெயரில் நாம் உடல் உழைப்பால் வேலை செய்வதிலிருந்து நீங்கி வாழ்க்கை முறையை மாற்றி பல பாதிப்புகளுக்கு எப்படி உள்ளாகி வருகிறோமோ அதே நிலைதான் செல்லப் பிராணிகளுக்கும் ஏற்பட்டுவருகிறது.

வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் ஹார்ட் அட்டாக், கேன்சர், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகளுக்குமானதும்தான்! இதற்கு செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்க்கு நடந்த சம்பவம் ஓர் உதாரணம்.

Dog death
Dog death
Pixabay

சென்னையில் ஒரு வீட்டில் `கரவன் ஹவுண்ட்' இனத்தைச் சேர்ந்த நாய் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்தது. மதிய உணவை சாப்பிட்டுவிட்டு சோபாவில் உரிமையாளருடன் அமர்ந்திருந்த நாய் திடீரென அலறியபடி கீழே மயங்கி விழுந்திருக்கிறது. உணர்வில்லாமல் கிடந்த நாயைப் பரிசோதித்த மருத்துவர்கள் நாய் ஏற்கெனவே இறந்திவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

தடுப்பூசிகள் இடப்பட்டு நன்றாக உணவளிக்கப்பட்டு போதிய பராமரிப்புகளுடன் செல்லமாக வளர்க்கப்பட்டு வந்த நாய் மாரடைப்பால் இறந்திருப்பதுதான் இதில் அதிர்ச்சி!

இதுகுறித்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஆ.குமாரவேல் அவர்களிடம் பேசியபோது, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பரம்பரை நோய்கள் தொடர்கின்றன என்பது முதல் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

``நாகரிகம் என்ற பெயரில் நாம் உடல் உழைப்பால் வேலை செய்வதிலிருந்து நீங்கி வாழ்க்கை முறையை மாற்றி பல பாதிப்புகளுக்கு எப்படி உள்ளாகி வருகிறோமோ அதே நிலைதான் செல்லப் பிராணிகளுக்கும் ஏற்பட்டுவருகிறது. `ஏற்பட்டுவருகிறது' என்பதை விட நாம் அவற்றுக்கு அப்படி ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம் என்றால் பொருத்தமாக இருக்கும்.

பேராசிரியர் டாக்டர் ஆ.குமரவேல்
பேராசிரியர் டாக்டர் ஆ.குமரவேல்

அலைந்து திரிந்து உணவை வேட்டையாடி எடுத்துக்கொள்வதுதான் விலங்குகளின் பிறவி குணம். அப்படியான விலங்குகளைத்தான் இன்று நாம் அதன் குணாதிசயங்களை மறக்கடிக்கச் செய்யும் அளவுக்கு செல்லப்பிராணிகளாக மாற்றி வைத்திருக்கிறோம்.

பிறவி குணத்தையே உரிமையாளருக்காக அடக்க பழகிக்கொள்ளும் செல்லப்பிராணிகள் மனிதர்களுக்கு போட்டியாக நோய்களையும் விலை கொடுக்காமலேயே வாங்கிக்கொள்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
பேராசிரியர் டாக்டர். ஆ. குமாரவேல்

ஆரோக்கியமாக இருக்க சரியான உணவுமுறை பழக்கங்கள், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலை சரியாகப் பராமரிக்காவிட்டால் மனிதர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் வருமோ அதேதான் விலங்குகளுக்கும் ஏற்படுகிறது.

விலங்குகளை நம் விருப்பத்துக்கும் ஆசைக்கும் தகுந்ததுபோல செல்லப்பிராணிகளாகப் பழக்கப்படுத்துவது தவறென சொல்லிவிட முடியாது. ஆனால், அதற்காக அவற்றின் சுதந்திரத்தில் கை வைத்தால் அதைவிட கொடுமை இருக்கவும் முடியாது. பாசமாக வளர்க்கிறேன் என்ற பெயரில் அதிக அளவில் உணவைக் கொடுக்கும் நேரம், அப்படிச் செய்வது ஆரோக்கியமானதுதானா என யோசிப்பதும் முக்கியம்.

Man walking with dog
Man walking with dog
Pixabay

வாழ்க்கைமுறை மாற்றத்தால் உருவாகும் நோய்களுக்கு மனிதர்கள் பாதிக்கப்படும் அளவுக்கு எண்ணிக்கையில் செல்லப்பிராணிகள் பாதிக்கப்படுவதில்லை. செல்லப் பிராணிகள்தானே எனும் அலட்சிய போக்கில் போதிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்ள செய்யாமல் அவற்றை விட்டுவிடும் பட்சத்தில் 5 முதல் 10 சதவிகித நாய்களுக்கு மாரடைப்பு முதல் பல்வேறு இதய பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

செல்லப்பிராணியான நாய்களுக்கு மனிதர்களைப் போன்றே நீரிழிவு, உடலில் கொழுப்பு அதிகரித்தல், இதய நோய் போன்றவையும் வருகின்றன. அவற்றைச் சரியாகக் கையாள தவறும் பட்சத்தில் சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உள்ளுறுப்புகள் பெரிதாகப் பாதிக்கப்படும் நிலை வரை செல்கிறது. போதிய அளவில் சத்தான உணவு, ஒழுங்கான பராமரிப்புப் போன்றவற்றைச் சரியான கால இடைவேளையில் செல்லப்பிராணிகளுக்குக் கொடுப்பது சிறந்தது.

ஆனால், துரதிர்ஷ்டவிதமாக நம்மைப் போலவே அவற்றின் வாழ்க்கை முறையையும் நாம் மாற்றிவிட்டிருக்கிறோம். எப்படி மனிதர்களுக்கு உடற்பயிற்சி நடைப்பயிற்சி அவசியமோ அது போல்தான் செல்லபிப்பிராணிகளுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்.

dog park | நாய்கள் பூங்கா
dog park | நாய்கள் பூங்கா

செல்லப்பிராணிகளை வாக்கிங் அழைத்துச் செல்வதைப் பழக்கமாகிக் கொள்ளலாம். அப்படி அழைத்துச் செல்வது டூருக்கு அழைத்துச் செல்வதுபோல எப்போவாவது கூட்டிச் செல்வது கிடையாது, தினமும் கூட்டிச் செல்வது அவசியம். அப்படி இல்லையென்றால் உங்கள் செல்லப் பிராணிகளுக்கு ஏற்றது போல தகுந்த கால இடைவெளியிலாவது அழைத்துச் செல்ல வேண்டும்'' என்கிறார் பேராசிரியர் டாக்டர் ஆ.குமாரவேல்.

சக உயிர்களுக்கும் சுதந்திரம் அவசியம் அல்லவா!

அடுத்த கட்டுரைக்கு