சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய ஒரு தகவல் பலரின் கவனத்தை பெற்றது. அதில், ``ரோமம் உதிர்ந்த நிலையில் தெருவில் திரியும் நாய்களுக்கு, 15 ரூபாய்க்கு கிடைக்கும் Ivermectin மாத்திரைகளை வாங்கி கொடுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது உண்மையா? இதுகுறித்து சென்னை கால்நடை மருத்துவர் தனபாலிடம் பேசினோம்...
``தெரு நாய்கள் மட்டுமன்றி நாம் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் இத்தகைய தோல் நோய் இருக்கும். இந்த தோல் நோய் ஏற்பட காரணம், ரோமத்தில் இருக்கும் பூச்சிகள் (mites) மற்றும் உண்ணிகள் (ticks). அதுமட்டுமல்லாமல் இது மரபு ரீதியாகவும் நாய்க்குட்டிகளுக்கு பரவுகிறது. இரண்டு மாதத்தில் இருந்து, ஒரு வயதை எட்டும்போது அதன் தோலில் மாற்றத்தை கண்டறியலாம்.

தெரு நாய்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் அவற்றுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதில்லை. அதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாகவே காணப்படும். இதனால் பூச்சிகள் மற்றும் உண்ணிகளின் தாக்கம் தீவிரமாக இருக்கும்பட்சத்தில், ரோமம் முற்றிலும் உதிர்ந்த நிலையில் காட்சியளிக்கும். இந்த நோயை குணமாக்க Ivermectin மருந்து கொடுக்கலாம். இது மருந்தகங்களில் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் பெரும்பாலும் விலங்கு நல ஆர்வலர்கள் இதை நாய்க்குட்டிகளுக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த Ivermectin மருந்தைப் பொறுத்தமட்டில் அந்த நாயின் உடல் எடைக்கு ஏற்றார் போல, அதற்கான டோஸின் அளவில் மாறுபாடு இருக்கலாம். உதாரணமாக, நாய்க்குட்டியின் எடை 10 கிலோ என்றால், ஒரு Ivermectin மாத்திரையில் பாதியளவு கொடுக்கலாம். அந்தப் பூச்சிகளின் தாக்கத்துக்கு ஏற்றார் போல தொடர்ந்து சில நாட்களோ, இரண்டு வாரங்கள் வரையோ கொடுக்கலாம்.
பூச்சிகள் மற்றும் உண்ணிகள் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு ரோமம் உதிர்ந்து காணப்படும் நாய்குட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க, அவற்றின் உடலில் இருக்கும் இந்த பூச்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் தான் Ivermectin அளவையும் பயன்படுத்த வேண்டும். மேலும் இதை தொடர்ந்து பயன்படுத்த கூடாது. நாய்க்குட்டிகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்தினாலும் ஆறு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் பாதிப்பு வரும் நிலை உள்ளது. தற்போது இந்த தோல் வியாதியை குணப்படுத்த, மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அதன் மூலம் இந்த தோல் நோயை நிரந்தரமாக குணப்படுத்த இயலும்.
மனிதர்களை பொறுத்தவரை, தலையில் இருக்கும் பேன் மற்றும் ஒட்டுண்ணிகளால் (parasitic worms) ஏற்படும் தோல் வியாதிகளை குணப்படுத்த இந்த Ivermectin மாத்திரைகளை உட்கொள்கின்றனர். ஆனால் டோஸ் அதிகமாக எடுக்கும்பட்சத்தில் வாந்தி, மயக்கம் என உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.

இந்த Ivermectin மருந்தை மனிதர்கள் பயன்படுத்தும்போது பின் விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து உள்மருந்து நிபுணர் (Internal Medicine) ஸ்பூர்த்தி அருணிடம் பேசினோம். ``கொக்கிப் புழுக்கள், ஒட்டுண்ணிப் புழுக்கள் (parasitic worms), ஃபைலேரியேசிஸ் (filariasis) போன்ற ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த Ivermectin மருந்துகளை பயன்படுத்தலாம். மேலும் தலையிலுள்ள பேன், scabies எனப்படும் தோல் நோயை குணப்படுத்தவும் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என FDA அனுமதியளித்துள்ளது.
ஒட்டுண்ணிகளின் தொற்றுக்கு பெரும்பாலும் ஒரு டோஸ் போதுமானது. ஆனால் அந்த தொற்றின் தாக்கத்துக்கு ஏற்ப மருந்தின் அளவும் மாறுபடும். எல்லா மருந்துகளுக்கும் பின் விளைவுகள் கட்டாயம் இருக்கும். ஒட்டுண்ணி தொற்றுகளுக்கு Ivermectin பயன்படுத்துவது சிறந்த பலனை அளிக்கும். ஆனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். டோஸ் அதிகமாக எடுக்கும் பட்சத்தில், வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஆகியவை ஏற்படலாம். ஒருவேளை இதை உட்கொள்ளும் போது ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டு வீக்கம் (swelling), தடிப்புகள் (rashes) ஏற்படுமாயின் இதை தவிர்க்க வேண்டும்.

அதிகமான Ivermectin டோஸ் எடுத்துக்கொண்டால், அது கல்லீரல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தமாக ஏதேனும் நோய் இருப்பவர்கள், இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு முன்பாக கண்டிப்பாக மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
Ivermectin மருந்துகள் ஒட்டுண்ணி நோய்களைக் குணப்படுத்தும். ஆனால் இந்த ஒட்டுண்ணிகளைப் பொறுத்தவரை அவை மனிதனின் உடம்புக்குள் நுழையும்போதே, அதிகப்படியான முட்டைகளிட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது. இதனால் அந்த முட்டைகள் விரியும் போது, மீண்டும் தோலில் இத்தகைய தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 45 ஆய்வறிக்கைகள், கொரோனா தொற்றுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என பரிந்துரைத்தன. ஆனால் அதற்கு FDA அனுமதியளிக்கவில்லை" என்றும் கூறினார்.