Published:Updated:

செல்லப்பிராணிகளுக்கு வீட்டு உணவுகளைக் கொடுக்கலாமா? மருத்துவ விளக்கம்

நாய்

இந்த வகை நாய்கள் காய்கறி சாப்பிடுகின்றன என்பது ஆச்சர்யமான ஒன்று. கேரட், வேக வைத்த உருளைக்கிழங்கு, கீரை உள்ளிட்டவற்றையும் இந்த வகை நாய்கள் உட்கொள்கின்றன.

செல்லப்பிராணிகளுக்கு வீட்டு உணவுகளைக் கொடுக்கலாமா? மருத்துவ விளக்கம்

இந்த வகை நாய்கள் காய்கறி சாப்பிடுகின்றன என்பது ஆச்சர்யமான ஒன்று. கேரட், வேக வைத்த உருளைக்கிழங்கு, கீரை உள்ளிட்டவற்றையும் இந்த வகை நாய்கள் உட்கொள்கின்றன.

Published:Updated:
நாய்

இன்றைய காலகட்டத்தில் வீடுகளில் குழந்தைகளோடு ஒரு கடைக்குட்டியாக செல்லப் பிராணிகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக நாய்கள் வளர்ப்பது என்பது பரவலாக அதிகரித்துள்ளது. அதே நேரம், செல்லப்பிராணிகளை வளர்ப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அவற்றுக்கு முறையாக தடுப்பூசி போட வேண்டும், தொற்று பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, வளர்ப்பு நாய்களுக்கு உணவு கொடுப்பதில் அதிக கவனம் தேவைப்படுகிறது.

உணவு விஷயத்தில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் வீட்டில் தாங்கள் சாப்பிடும் உணவுகளையே, தங்களின் செல்லப்பிராணிக்கும் கொடுக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. நாம் உட்கொள்ளும் உணவுகளை நாய்களுக்கு வழங்கும்போது அவை விரும்பிச் சாப்பிடுவது போல் நமக்குத் தெரியும். ஆனால், அத்தகைய உணவுகள் வளர்ப்பு நாய்களின் உடல்நலத்தைக் கெடுக்கும். நாய்களுக்கு சுவை தெரிவதில்லை, மாறாக அவை வாசனையை வைத்துதான் உணவை சாப்பிடுகின்றன.

எல்லா நாய்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொரு ரக நாயும் ஒவ்வொன்றை விரும்பிச் சாப்பிடுவதுண்டு. அவற்றுக்கு பழகிய வாசனையுடைய உணவாக இருக்கவேண்டும், நாய் எப்படி ஒருமுறை தனது கழிவை வெளியேற்றிய இடத்திலேயே மீண்டும் மோப்பம் பிடித்து அப்பணியைச் செய்கிறதோ, அதுபோலதான்.

செல்லப்பிராணிகளுக்கு வீட்டு உணவுகளைக் கொடுக்கலாமா? மருத்துவ விளக்கம்

நாய் ரகங்களும் உணவும்

நாய்களின் ரகங்கள் பற்றியும் அவை சாப்பிடக்கூடிய உணவு வகைகள் குறித்தும் பார்ப்போம்...

பொமரேனியன் நாய்: இந்த வகை நாய்க்கு தினசரி உணவாக பச்சை தக்காளியைப் பிசைந்து வைத்த தயிர் சாதம் கொடுக்கப்படுகிறது. அட, இதை எப்படி நாய் சாப்பிடும் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இவ்வகை நாய்கள் அந்த உணவையே அதிகம் விரும்புகின்றன.

லேபரடார் நாய்: இந்த நாய்களுக்கு வெள்ளை சாதத்தில் முட்டை, எண்ணெய் கலந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நாயின் தோல் பொலிவு பெறும்; ஆரோக்கியமாக இருக்கும்.

பக் நாய்: இந்த வகை நாய்கள் காய்கறி சாப்பிடுகின்றன என்பது ஆச்சர்யமான ஒன்று. கேரட், வேக வைத்த உருளைக்கிழங்கு, கீரை உள்ளிட்டவற்றையும் உட்கொள்கின்றன.

தெரு நாய்: நாம் சாப்பிட்டு போட்ட மிச்ச எச்சங்களை தெரு நாய்கள் சாப்பிடுகின்றன. மாமிசக் கழிவு உள்பட தெருவில் கிடைப்பதை இவை உண்பதால், சீக்கிரமே பல நோய்களுக்கு ஆளாகின்றன. தெரு நாய்கள் சொறிப் பிடித்துத் திரிவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.

பொதுவாக நாய்களுக்கு நாம் சாப்பிடக்கூடிய உணவு வகைகளைக் கொடுக்கக்கூடாது. இதையறியாமல் பலரும் வீட்டு உணவுகளைக் கொடுத்து அதன் உடல் நலத்தைக் கெடுக்கின்றனர். நம் வீட்டு செல்லப் பிராணிகளுக்கு எந்தெந்த உணவுகளைக் கொடுக்கக்கூடாது... அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? இது குறித்து சென்னையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் தனபாலிடம் கேட்டோம்.

``பொதுவாக நாய்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம் என்று நாம் நினைக்கிறோம். அப்படிக் கொடுப்பதால் நாய்களின் உடல் நிலைதான் கெட்டுப் போகும். நாய்களுக்கு கொடுக்கக்கூடாதவை என்று சில முக்கிய உணவுகள் உள்ளன.

கால்நடை மருத்துவர் தனபால்
கால்நடை மருத்துவர் தனபால்

ஒருபோதும் நாய்களுக்கு சாக்லேட் கொடுக்கவே கூடாது. அதில் உள்ள தியோப்ரோமின் என்ற அமிலத்தை நாய்களால் ஜீரணம் செய்ய முடிவதில்லை. இதனால், அதன் உடலிலேயே அந்த அமிலம் தங்கி வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் அதன் இறப்புக்குக்கூட வழிவகுக்கும்.

அடுத்ததாக வெங்காயம் மற்றும் பூண்டு, நாய்களுக்கு ஆகாதவை. அவற்றை நாய்களுக்குக் கொடுப்பதால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாகவே எந்தவகை திராட்சைகளையும் நாய்களுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். திராட்சையை நாய்கள் சாப்பிடுவதால் அக்யூட் ரீனல் ஃபெயிலியர் எனப்படும் தீவிர சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

நாய்களுக்கு வேக வைக்காத முட்டையைக் கொடுக்கக்கூடாது. முட்டையில் உள்ள அவிடின் என்ற மூலக்கூறு அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும். வேக வைக்காத இறைச்சியை நாய் சாப்பிடும்போது, அதில் உள்ள நாடாப்புழு போன்ற ஒட்டுண்ணிகள் நாய்களின் வயிற்றில் சென்று உபாதைகளை ஏற்படுத்தும். வேக வைக்காத இறைச்சி அல்லது முட்டைகளை நாய்கள் சாப்பிடும் போது, சால்மோனியா அண்ட் ஈகோலை செல்களால் வயிறு தொடர்பான பிரச்னைகள், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

நாய்களுக்கு எலும்புத்துண்டு மிகவும் பிடிக்கும் என்று நாம் நினைத்து அவற்றுக்குத் தருகிறோம். எலும்புத்துண்டு தருவது தவறில்லை, ஆனால் மிகச்சிறிய துண்டுகளாகத் தரக்கூடாது. சில நாய்கள் சிறிய எலும்புகளைக் கடிக்காமல் அப்படியே விழுங்கி விடும். அது ஜீரணமாகாமல் நாயின் குடலைக் கிழித்துவிடக்கூடும்.

நாய்
நாய்

நாம் அன்றாடம் பருகும் டீ,காபியை சிலர் நாய்களுக்கும் தருகின்றனர். டீ, காபியில் உள்ள கஃபைன், நாய்களின் நரம்புமண்டலத்தை நேரடியாகத் தாக்கக்கூடும். பால், பொதுவாக சிலவகை நாய்களுக்கு ஏற்றுக் கொள்ளும்; வேறுசில நாய்களுக்கு ஒத்துக்கொள்ளாது. பாலில் இருக்கும் லேக்டோஸ், நாய்களின் குடலை பாதிக்கக்கலாம் என்பதால் பாலைத் தவிர்ப்பதும் நல்லதே.

அடுத்ததாக, நாய்களுக்கு பழங்கள், நட்ஸ் தரலாமா என்ற கேள்வி எழலாம். ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை நாய்களுக்குத் தரும்போது அவற்றின் விதைகளை நீக்கிவிட்டுத் தரலாம். இல்லாவிட்டால் அவற்றின் ஜீரண மண்டலத்தை இது பாதிக்கலாம். நாய்களுக்கு நட்ஸ் கொடுக்கக்கூடாது. நட்ஸில் உள்ள ஒமேகா3 என்ற கொழுப்பு அமிலம், நாயின் எடையைக் கூட்டும். இதனால் நாய் நடக்கவே சிரமப்படும் வாய்ப்புள்ளது” என்றார்.

- நவீன் குமரன்