Published:Updated:

`சிட்டுக்குருவிகளோடு வாழ்வோம்!' #WorldSparrowDay #MyVikatan

சிட்டுக்குருவிகள் ஒரு காட்டுயிரி என்றாலும் அவை பெரும்பாலும் மனித குடியிருப்புகளை ஒட்டியே வாழ்பவை.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்திய முதுகு; சிறிய தோகை, துளிக் கால்கள். இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்துகொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண்.

சிட்டுக்குருவி... சிட்டுக்குருவி... சேதி தெரியுமா!
சிட்டுக்குருவி... சிட்டுக்குருவி... சேதி தெரியுமா!

மற்றொன்று பெண். இவை தம்முள்ளே பேசிக் கொள்கின்றன. குடும்பத்துக்கு வேண்டிய உணவு தேடிக்கொள்கின்றன. கூடுகட்டிக் கொண்டு, கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசியில்லாமல் காப்பாற்றுகின்றன. இவை சிட்டுக்குருவிகளைப் பற்றிய மகாகவி பாரதியின் நுட்பமான பதிவு.

இன்று உலக சிட்டுக்குருவிகள் நாள்(20-03-2020)

'என்றும் தேவை இயற்கை' (Nature Forever Society) எனும் இந்திய அமைப்பும் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த `உயிர்ச்சூழல் நடவடிக்கை அமைப்பும்' (Eco-Sys Action Foundation) இணைந்து எடுத்த நடவடிக்கையின் விளைவாக கடந்த 2010-ம் ஆண்டு முதல் உலக சிட்டுக்குருவிகள் நாள் கொண்டாடப்படுகிறது.

சிட்டுக்குருவிகள் ஒரு காட்டுயிரி என்றாலும் அவை பெரும்பாலும் மனித குடியிருப்புகளை ஒட்டியே வாழ்பவை. அதனால்தான் ஆங்கிலத்தில் ஹவுஸ் ஸ்பேரோ (house sparrow) என்றும் தமிழில் அடைக்கலாங் குருவி என்றும் அழைக்கிறோம். நமது சங்க இலக்கியத்தில் `மனையுறைக் குரீஇ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#WorldSparrowDay
#WorldSparrowDay

சிட்டுக்குருவிகள் கடந்த 10,000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்களோடு இணைந்து வாழ்வதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் காலங்காலமாக வாழ்கின்றன. அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் அவை கொண்டுபோய் விடப்பட்டுள்ளன. இப்போது அங்கும் இவை பெருமளவில் காணப்படுகின்றன. இவற்றில் பல வகைகள் உண்டு.

அழியும் தருவாயில் உள்ள பல பறவைகள் போல் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் குறைந்துவிடவில்லை . ஆனால், குறைந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. காட்டுயிர்களின் நிலை பற்றி ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் `பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் `(IUCN) கடந்த 2002-ம் ஆண்டு அழியும் நிலையில் உள்ள உயிர்களின் பட்டியலில் சிட்டுக்குருவியைச் சேர்த்தது. ஆனால், 2018-ம் ஆண்டு அதிகம் கவனம் தேவைப்படாத உயிர்களின் பட்டியலுக்கு மாற்றியது.

உண்மையில் சிட்டுக்குருவிகளின் நிலைதான் என்ன? உலக அளவில் அதன் எண்ணிக்கை கணிசமான அளவு இருந்தாலும் பல இடங்களில் குறைந்து வருவதையே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெருநகரங்களில் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிட்டுக்குருவிகள் காணாமல் போக காரணம் என்ன?

அலைபேசி கோபுரங்களின் கதிர் வீச்சால் அவை காணாமல் போவதாக பரவலாக ஒரு கூற்று உண்டு. அலைபேசி கோபுரங்கள் பல்வேறு பாதிப்புகளை உண்டு பண்ணுகின்றன என பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால், அவற்றால் மட்டுமே சிட்டுக்குருவிகள் மறைந்து போகவில்லை. உதகையில் அலைபேசி கோபுரங்கள் உள்ள பல இடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதைக் காணலாம். பெங்களூரிலும் செல்போன் டவர் உள்ள இடங்களில் சிட்டுக்குருவிகள் உள்ளன.

சிட்டுக்குருவிகள்!
சிட்டுக்குருவிகள்!

அப்படியானால் சிட்டுக்குருவிகள் குறைந்து போக என்னதான் காரணம் ?

நமது குடியிருப்பு முறை மாறிப்போனதே சிட்டுக்குருவிகள் குறைந்துபோக முதன்மையான காரணமாகும். ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் இருந்தவரை அவைகளுக்கு கூடு கட்ட இடம் கிடைத்தன. ஆனால், நாம் காங்கிரீட் வீடுகளுக்கு மாறியபோது சிட்டுக்குருவிகளுக்கு இடமில்லாமல் போனது.

வீட்டு வாசலில் வைத்து தானியங்களை புடைப்பது, காய வைப்பது போன்ற பழக்கம் நம்மிடம் இருந்தவரை அவைகளுக்கு உணவு கிடைத்தது. ஆனால், எல்லாவற்றையும் பாக்கெட்களில் வாங்கி வீட்டுக்குள்ளேயே பயன்படுத்தி துளியும் வெளியே சிந்தாத தூய்மையாளர்களாக நாம் மாறிய பின் நம்மை நம்பி வாழ்ந்த குருவிகளுக்கு உணவில்லாமல் போனது.

சிட்டுக்குருவிகள் தானிய உண்ணிகள் என்றாலும் அவை தனது குஞ்சுகளுக்கு முதலில் ஊட்டுவது சிறு புழுக்களையும் பூச்சிகளையும்தான். கொஞ்சம் வளர்ந்த பிறகே தானியங்களை உட்கொள்கின்றன. வீட்டைச் சுற்றி மரம், செடி என தாவரங்கள் இருந்தால்தான் பூச்சிகள் இருக்கும். ஆனால், ஒரு செடி கூட வர இயலாமல் சிமென்ட் மயமாக நமது இருப்பிடங்கள் மாறியதால் பூச்சிகள், புழுக்கள் இல்லாமல் போயின.

தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்க முடியாததால் குருவிகளும் இல்லாமல் போயின. ஊர்ப்புறங்களில் விளை நிலங்களில் கிடைக்கும் தானியங்களைச் சார்ந்தே சிட்டுக்குருவிகள் இருந்தன. ஆனால், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளால் அவை அங்கு இல்லாமல் போயின.

சிட்டுக்குருவிகள்
சிட்டுக்குருவிகள்

இவைத் தவிர சில வகை வேட்டையாடும் பறவைகளாலும் சிட்டுக்குருவிகளுக்கு ஆபத்து ஏற்படுவதுண்டு. சிட்டுக்குருவி லேகியம் போன்ற மூடநம்பிக்கைகளும் குருவிகளின் வாழ்வுக்கு எதிரானவை. ஆனால் பல்வேறு அமைப்புகளால் எடுக்கப்படும் சீரிய முயற்சிகள் சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்துகின்றன. கோவையில் உள்ள நெஸ்ட் அமைப்பு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிட்டுக்குருவிகள் பாதுகாப்புக்காக தொடர்ந்து இயங்கி வருகிறது. கோவையின் புகழ்பெற்ற ஊடகவியலாளரும் சுற்றுச்சூழல் செயல்பாட்டடாளருமான ஆனந்த் தலைமையில் அக்குழு செயல்பட்டு வருகிறது . சிட்டுக்குருவிகள் பாதுகாப்புப் பணியில் அவர்களுக்கு கிடைத்த அனுபவத்தைப் பற்றி ஆனந்திடம் பேசியபோது பல வியப்பான செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

`சிட்டுக்குருவிகள் கூடு கட்ட முடியாதவாறு நமது குடியிருப்புகள் மாறியதால் அவை வாழ கூடமைத்துத் தருவதை எமது முதல் பணியாகத் தொடங்கினோம். இதுவரை 5,000-க்கும் அதிகமான கூடுகளை பல்வேறு இடங்களில் அமைத்துள்ளோம்.

கோவையில் தொடங்கிய பணி இப்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிந்துள்ளது. மலேசியா போன்ற நாடுகளுக்கும் நாங்கள் கூடுகளை அனுப்பியுள்ளோம். முதலில் கேட்பவர்களுக்கு எல்லாம் கூடுகளைக் கொடுத்தோம். இப்போது யாருக்கும் நாங்கள் அப்படிக் கொடுப்பதில்லை. தேவைப்படுவோருக்கு நாங்களாகவே நேரில் சென்று கூடுகளைப் பொருத்தித் தருகிறோம். அப்படி கூடுகளைப் பொருத்த சில நெறிமுறைகளை வைத்துள்ளோம்.

எல்லா இடங்களிலும் கூடுகளை அமைப்பதில்லை. முதலில் கூடுகள் அமைய உள்ள இடங்களில் சிட்டுக்குருவிகள் நடமாட்டம் உள்ளதா என்பதை உறுதி செய்கிறோம். கோவை போன்ற இடங்களில் எங்கெல்லாம் சிட்டுக்குருவிகளின் நடமாட்டம் உள்ளது என்பதை ஆய்வு செய்துள்ளோம். அந்த இடங்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. குருவிகள் இல்லாத இடத்தில் கூண்டு வைப்பதால் எவ்விதப் பயனும் இல்லை. குருவிகளின் நடமாட்டம் இருந்தாலும் கூடு வைத்தவுடன் குருவி வந்துவிடாது. அதற்காக முன்கூட்டியே சில வேலைகளைச் செய்ய வேண்டும்.

முதலில் வீட்டின் மதில் சுவரில் அவற்றுக்கு உணவு வைக்க வேண்டும். சிறந்த உணவு தினைதான். அரிசி வைக்க விரும்புவர்கள் அதை முழுமையாக வைக்கக் கூடாது. சின்னஞ்சிறு குருவிகளால் அவற்றை உட்கொள்ள முடிவதில்லை. மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு இரண்டு மூன்றாக உடைந்த குருனையை வைத்தால்தான் குருவிகளால் சாப்பிட முடியும். எங்கள் அனுபவத்தில் ராகியை சிட்டுக்குருவிகள் விரும்புவதில்லை. தானியங்கள் மட்டுமின்றி குறைவான ஆழம் கொண்ட ஒரு மண் குடுவையில் தண்ணீர் வைக்க வேண்டும். தண்ணீரை வெட்டவெளியில் தான் வைக்க வேண்டும். வெயிலில் சூடாகும் என்பதற்காக தண்ணீர் குடுவையை நிழல் சூழ்ந்த மறைவான இடத்தில் வைக்கக் கூடாது. ஏனெனில் திறந்தவெளியில் வைப்பதன் மூலமாகவே தண்ணீரில் பட்டு எதிரொலிக்கும் சூரிய ஒளியைக் கொண்டு தண்ணீர் இருப்பதை குருவிகளால் அறிய முடியும். தண்ணீர் சூடானால் தேவையானபோது அவற்றை மாற்றி வைக்க வேண்டும். தண்ணீரையும் உணவையும் தேடி குருவிகள் வரும். முதலில் தயங்கித் தயங்கியே வரும். நம்மைக் கண்டால் பயப்படும். ஆனால், சில நாள்களில் நம் மீது அவை நம்பிக்கை கொள்ளும். நமது நடமாட்டத்தைக் கண்டுகொள்ளாது. அதன்பின் மதிலில் இருந்து உணவை நம் வீட்டு வளாகத்தில் தரையில் வைக்க வேண்டும். அதைத் தேடி வந்து உண்ணும். சிறிது சிறிதாக இடத்தை நகர்த்தி நாம் கூடு வைக்க திட்டமிட்டுள்ள சுவருக்குக் கீழே உணவை வைக்க வேண்டும். தொடர்ந்து குருவிகள் அங்கு வந்து போக பழகிய பின்னர் கூடு அமைக்கப்பட்டால் அவை உடனே குடியேறும்.

சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி

கூட்டின் அளவு சரியாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது 7 அங்குலம் உயரம் உள்ளதாக கூடு இருக்க வேண்டும். கூண்டின் அடித்தளத்திலிருந்து 6 அங்குலம் உயரத்துக்கு மேல்தான் துளை இருக்க வேண்டும். ஏனெனில் குருவிகள் இரண்டு மூன்று அங்குலம் வரை இலை தழைகளைக் கொண்டு மெத்தை அமைக்கும். எனவே உயரம் குறைவாக துளை இருந்தால் குஞ்சுகள் வெளியே விழுந்துவிடும் ஆபத்து நேரிடும்.

சில இடங்களில் கூட அமைத்த உடனே குருவி கூடுகட்டத் தொடங்கிவிடும். வால்பாறையில் நாங்கள் கூடு பொருத்தி ஏணியில் இருந்து இறங்கிய 20 நொடிகளுக்குள் தேடி வந்து கூடு கட்ட ஆரம்பித்தது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால், எல்லா இடங்களிலும் அப்படி வரும் என்று நினைக்கக் கூடாது.

முதலில் ஆண் குருவி கூண்டுக்குள் சென்று பார்வையிடும். ஆண் குருவி ஒரு புல்லையாவது கொண்டுவந்து கூடுகட்டும் பணியைத் தொடங்கிய பின் தான் பெண் குருவி உள்ளே போகும்.

குருவிகள் தாங்கள் தங்குவதற்காக கூடு கட்டுவதில்லை. அவை பெரும்பாலும் சிறு மரங்கள் , முற்புதர்கள் ஆகியவற்றிலேயே தங்குகின்றன. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கத்தான் கூடு கட்டுகின்றன.

சிட்டுக்குருவிகளின் பேறுகாலம் 18 முதல் 21 நாள்கள் ஆகும். குஞ்சு பொரித்தவுடன் வெட்டுக்கிளி, புழு போன்றவற்றை தேடிப் பிடித்து வந்து குஞ்சுகளுக்குத் தருகின்றன. வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளையெல்லாம் அகற்றிவிட்டு சதைப்பகுதியை மட்டுமே கொடுப்பதை நாங்கள் கவனித்து இருக்கிறோம். சில நாள்கள் கழித்தே தானியங்களைத் தருகின்றன. அவற்றையும் நேரடியாகத் தருவதில்லை. முதலில் தானியங்களை தாய் குருவி உட்கொள்கிறது. அவற்றை வயிற்றில் ஊற வைக்கின்றன. அப்படி நொதித்த உணவை மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன.

 சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி

வருடத்தில் ஏழு, எட்டு முறை குஞ்சு பொரிக்கின்றன. முன்பெல்லாம் ஒரு முறைக்கு நாலு குஞ்சுகள் வரை பொரிக்கும். இப்போது மூன்று குஞ்சுகளுக்கு மேல் பெரும்பாலும் பொரிக்கப் படுவதில்லை.

கூண்டுகளை வீட்டின் சன் சேடை ஒட்டி அமைக்கக் கூடாது. ஏனெனில் பெண் பறவை அடைகாக்கும்போது ஆண் பறவை கூண்டில் மீது அமர்ந்து காவல் காக்கும். உணவு கொண்டு வந்து தரும்.

முன்பு நாங்கள் கூண்டின் அடிப்பாகத்தில் சிறு குச்சி போன்ற மரத் துண்டை இணைத்திருந்தோம். குருவி நேரடியாக கூண்டுக்குள் போகாமல் குச்சியில் அமர்ந்து பின் போக வசதியாக இருக்கும் என்று நினைத்து அவ்வாறு அமைத்தோம். ஆனால் அந்த முறை தோல்வியில் முடிந்தது. ஏனெனில் மைனா போன்ற குருவிகள் அந்தக் குச்சியில் வந்து அமர்கின்றன. தாய்ப்பறவை வந்துவிட்டது என்று எட்டிப்பார்க்கும் சிட்டுக்குருவி குஞ்சுகளை மைனாக்கள் கவ்விச் சென்றுவிடுகின்றன.

பலகையால் செய்யப்பட்ட கூண்டுகள் அதிக சூட்டை உண்டாக்காது என்பதால் அவற்றை அமைக்கிறோம். ஆனாலும் பிப்ரவரியில் இருந்து மே மாதம் வரை கூடு அமைப்பதைத் தவிர்க்கிறோம். அந்தக் காலத்தில் நாங்கள் குருவிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து ஜூன் மாதத்தில் கூடு அமைக்கிறோம்.

ஒருமுறை கூடுகட்டி குஞ்சு பொரித்த பறவை மீண்டும் அங்கேயே முட்டையிட வருகின்றன. சில நேரங்களில் அவை வராமலும் போகலாம். அப்போது அந்தக் கூண்டை கழட்டி உள்ளே இருக்கும் பறவை கட்டிய கூட்டின் பொருள்களை கம்பி மூலமாக வெளியே எடுத்து தூய்மை செய்து எறும்பு போன்றவை இல்லாமல் காய வைத்து மீண்டும் பொருத்த வேண்டும். ஏனெனில் ஏற்கெனவே கட்டியுள்ள கூட்டுக்குள் புதிய பறவை வருவதில்லை. தமக்கான கூட்டை புதிதாக அமைத்துக்கொள்கின்றன.

கூண்டின் துளை 1 1/2 அங்குலத்துக்கு மேல் இருக்கக் கூடாது. துளை பெரிதானால் மைனா போன்ற பறவைகள் புகுந்துவிடும்.

நகரங்களில் வசதிபடைத்தவர்கள் வாழும் இடங்களைவிட ஏழைகளின் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் சிட்டுக் குருவிகள் அதிகமாக காணப்படுகின்றன. அங்குதான் இன்னும் வெளியே தானியங்கள் காய வைக்கப்படுகின்றன. உணவு வெளியே சிந்தப்படுகிறது. கூடு கட்ட ஓட்டு வீடுகள் மிச்சமிருக்கின்றன.

நாங்கள் அமைத்த 99 சதவிகித கூடுகளில் சிட்டுக்குருவிகள் குடி புகுந்துள்ளன" என்று பெருமிதத்துடன் கூறினார் ஆனந்த். அவரின் சிறப்பான பணி பெரிதும் பாராட்டுக்குரியது.

இதுபோன்று பல்வேறு அமைப்புகள் சிட்டுக்குருவி பாதுகாப்புக்காக இயங்கி வருகின்றன. கோவையில் மட்டும் 5-க்கும் மேலான அமைப்புகள் இத்தகு சிறப்பான பணியைச் செய்து வருகின்றன.

உதகை அரசினர் கலைக்கல்லூரியில் வன உயிரின துறை இணைப்பேராசிரியர் முனைவர் இராமகிருஷ்ணன் நடத்திய சில ஆய்வு முடிவுகளும் இங்கு கவனிக்கத்தக்கது. அவரின் ஆய்வின்படி சிட்டுக்குருவிகள் இயற்கையான கூண்டுகளையே பெரிதும் விரும்புகின்றன. பலகையால் செய்யப்பட்ட கூண்டுகளைக் காட்டிலும் அதிக அளவில் மண்சட்டி, மூங்கில் ஆகியவற்றிலே கூடு அமைக்கவே அவை விரும்புகின்றன என ஆய்வுகள் அறிந்துகொண்டோம். ஆனாலும் கடைவீதி, சந்தை போன்ற இடங்களில் அவற்றின் எண்ணிக்கை கூடுதலாக உள்ள போது எல்லா வகை கூண்டுகளிலும் அவை குடிபோவதைக் கண்டுகொண்டோம் என்கிறார் இராமகிருஷ்ணன். அவரின் ஆய்வில் கிடைத்த மற்றுமொரு முக்கிய செய்தி தன் குஞ்சுகளுக்கு பூச்சிகள் கிடைக்காதபோது கறிக்கடைகளில் சிந்தும் இறைச்சித் துகளை எடுத்துச் சென்று குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன.

சிட்டுக்குருவிகள் இல்லாமல் போனால் என்ன ஆகும்?

இங்கு பரிணமித்த எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமையுண்டு. இந்த உயிர்ச்சூழல் சங்கிலியில் எல்லா உயிர்களுக்கும் பங்கு உண்டு. எந்த உயிரினம் அழிந்து போனாலும் அதிகமானாலும் உயிர்ச்சூழல் பாதிப்பு ஏற்படும்.

 சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி

அப்படி ஒரு சோக வரலாறு செஞ்சீனத்தில் நிகழ்ந்துள்ளது. 1958-ம் ஆண்டு மாவோ தலைமையிலான சீன அரசு அபாயகரமானவை என 4 உயிரினங்களை அழித்தொழிக்கும் செயல்பாடுகளை அறிவித்தது. மலேரியாவை பரப்பும் கொசுக்கள், பிளேக் நோயை பரப்பும் எலிகள், நோய் பரப்பும் ஈக்கள் இவற்றோடு சிட்டுக் குருவிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. விளை நிலங்களிலும் சேமிப்புக் கிடங்குகளிலும் தானியங்களைச் சிட்டுக்குருவிகள் பெருமளவில் உட்கொள்வதால் மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதே அரசு சொன்ன காரணம். எனவே, நாடெங்கும் உள்ள சிட்டுக் குருவி கூடுகள் அழிக்கப்பட்டன. முட்டைகள் உடைக்கப்பட்டன. குருவிகள் கொல்லப்பட்டன. விளைவு சிட்டுக்குருவி பேரழிவைச் சந்தித்தது. அச்செயல் எத்தகைய தவறானது என்பதை சில ஆண்டுகளில் அரசு உணர்ந்துகொண்டது. குருவிகள் அழிந்தபின் பூச்சிகள் பெருகிப் போயின. அதனால் உணவு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டது. குருவிகள் அழிந்து போனால் எத்தகைய ஆபத்துகள் ஏற்படும் என்பதை சோ - சின்- செங் போன்ற பறவையியல் நிபுணர்கள் அரசிடம் எடுத்துரைத்தனர். உணர்ந்துகொண்ட அரசு . 1960-ல் சிட்டுக்குருவிகளுக்குப் பதிலாக மூட்டைப் பூச்சிகள் அழிக்கப்பட வேண்டிய உயிரியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிட்டுக்குருவிகள் அழிந்து போனதன் தாக்கம் தொடர்ந்தது. உணவு உற்பத்தி குறைந்தது. 1959 - 61 ஆம் ஆண்டுகளில் ஏறக்குறைய 40 லட்சம் பேருக்கு மேல் உணவு கிடைக்காமல் இறந்து போன சீனத்தின் பெரும் பஞ்சம் ஏற்பட சிட்டுக்குருவிகள் குறைந்து போனதும் ஒரு காரணமாக உணரப்பட்டது. எனவே, ரஷ்யாவிலிருந்து இரண்டரை இலட்சம் சிட்டுக்குருவிகளைக் கொண்டுவந்து சீனத்தில் பறக்கவிட அரசு முயற்சி எடுத்தது.

நம்மோடு காலங்காலமாய் வாழ்ந்த பறவை இல்லாமல் போகும் வலியை நாமும் உணர்வோம். மீண்டும் நமது வாழ்விடத்தில் சிட்டுக்குருவிகளின் கீச்சொலியை கேட்க முயல்வோம்.

- ஓசை காளிதாசன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு