Published:Updated:

சதுரங்கப் போர்வையில் ஆனைமலை யானைகள்... குமுறிய விலங்கு ஆர்வலர்கள் - விளக்கமளித்த சுப்ரியா சாஹு!

ஆனைமலை யானைகள்

யானைகள் ஊர்வலத்தின் வீடியோக்களைக் கண்ட விலங்கு ஆர்வலர்கள் பலரும், `இது விலங்குகள் சித்ரவதை' என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சதுரங்கப் போர்வையில் ஆனைமலை யானைகள்... குமுறிய விலங்கு ஆர்வலர்கள் - விளக்கமளித்த சுப்ரியா சாஹு!

யானைகள் ஊர்வலத்தின் வீடியோக்களைக் கண்ட விலங்கு ஆர்வலர்கள் பலரும், `இது விலங்குகள் சித்ரவதை' என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Published:Updated:
ஆனைமலை யானைகள்

கடந்த செவ்வாய்க்கிழமை, தமிழ்நாட்டில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 நிறைவுநாளைக் கொண்டாடும் வகையில், கோவை மாவட்டத்தில் டாப் ஸ்லிப்பிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சதுரங்கத்தைக் கருப்பொருளாகக் கொண்டு பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

கோவை மாவட்ட கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், இந்தக் கொண்டாட்டங்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்றன. மேலும், இந்தக் கொண்டாட்டம் `உலக யானைகள் தினம்’, `உலக பழங்குடியினர் தினம்’, `சர்வதேச செஸ் விளையாட்டுப் போட்டி நிறைவுநாள்’ ஆகியவற்றை ஒத்திசைத்து நடந்தது.

ஆனைமலை புலிகள் காப்பகம்
ஆனைமலை புலிகள் காப்பகம்

டாப் ஸ்லிப் யானை முகாமிலிருந்த 12 யானைகளுக்குச் சதுரங்கப் பலகைப் போர்வைகள் போர்த்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும், யானைப் பாகன்களும் கறுப்பு, வெள்ளைச் சீருடை அணிந்திருந்தனர்.

பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் ராஜா, ராணி, குதிரை உள்ளிட்ட சதுரங்கக் காய்கள்போல கறுப்பு, வெள்ளை ஆடைகள் அணிந்திருந்தனர். இவர்கள் யானை மேல் அமரவைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடிச் சமூகத்தினரும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குநர் எம்.ஜி.கணேசன் தொடங்கிவைத்தார்.

யானைகள்
யானைகள்

இந்தக் கொண்டாட்டத்தில் யானைகள் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பில் யானைகள் சீத்தல் ஓய்வு விடுதியில் தொடங்கி டாப்சிலிப் வரவேற்பு மையம்வரை வந்து சதுரங்கப் பலகையை ஐந்து முறை சுற்றிவந்தன.

இந்த நிலையில், யானைகள் ஊர்வலத்தின் வீடியோக்களைக் கண்ட விலங்கு ஆர்வலர்கள் பலரும், `இது விலங்குகள் சித்ரவதை' என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாகச் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளரும், நிர்வாக இயக்குநருமான சுப்ரியா சாஹு ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார்.

சுப்ரியா சாஹு
சுப்ரியா சாஹு

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. விலங்குகளைக் கண்காட்சிப் பொருளாகப் பயன்படுத்த முடியாது. ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள குழுவினர் தங்கள் உற்சாகத்தால் எல்லைமீறிச் சென்றிருக்கின்றனர். இதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இது போன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.