Published:Updated:

`தெருவில் நாயுடன் நடைப்பயிற்சி செய்தால் தண்டனை!' - சீனாவில் ஓர் அதிர்ச்சி உத்தரவு

வளர்ப்பு நாய்கள்
வளர்ப்பு நாய்கள் ( Petfinder )

மூன்றாவது முறையும் இதேபோன்ற நிகழ்ந்தால் உரிமையாளரிடமிருந்து நாய் பறிமுதல் செய்யப்பட்டு கொல்லப்படும் என்று யுன்னான் மாகாணம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

மக்கள் செல்லப்பிராணியான நாயை அழைத்துக்கொண்டு தெருவில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை சீனாவின் யுன்னான் மாகாணம் தடை செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தெருவில் மூன்று முறை நாயுடன் அதன் உரிமையாளர் பிடிபட்டுவிட்டால் மூன்றாவது முறைக்குப் பிறகு, அந்த நாய் கொல்லப்படும். இந்த நடைமுறை வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்கிற அரசின் சமீபத்திய அறிவிப்பு யுன்னான் மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் உருவாக்கியிருக்கிறது.

சீனா
சீனா

தங்கள் உரிமையாளருடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நாய்கள் தெருவில் செல்பவர்களைக் கடிப்பதாகப் புகார்கள் எழுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாகாண அரசு தெரிவிக்கிறது.

உரிமையாளர் தன் நாயுடன் முதல் தடவை தெருவில் பிடிபட்டால் எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்படும். இரண்டாவது முறை பிடிபட்டால், அந்த நாட்டுப் பண மதிப்பில் ஐம்பது முதல் இருநூறு யுவான், அதாவது ஏழு முதல் முப்பது டாலர்வரை அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் இதேபோன்ற நிகழ்ந்தால் உரிமையாளரிடமிருந்து நாய் பறிமுதல் செய்யப்பட்டு கொல்லப்படும் என்று யுன்னான் மாகாணம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

'நாய் வளர்ப்போருக்கு எதிராகப் போடப்பட்டிருக்கும் இந்தச் சட்டம் காட்டுமிராண்டித்தனமானது' என்று மக்கள் பொங்கி எழுந்துள்ளனர். சிங்கப்பூரிலுள்ள விலங்குகள் வதைத் தடுப்பு அமைப்பின் தலைவரான ஜெய்ப்பால் சிங் கில், சீனாவின் இந்த அறிவிப்பு குறித்து தனது கவலையைத் தெரிவித்திருக்கிறார். “வளர்ப்பு நாய்களை வெளியே எங்கும் அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே அடைத்து வைப்பது அவற்றின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எதிரானது. இதனால் அவற்றுக்கு தீமை மட்டுமே விளையும்” என்கிற அவர், இப்படி நாய்கள் தெருவில் வருவதற்குத் தடை போடுவதற்குப் பதிலாக, தெருவில் பாதுகாப்பாக செல்லப்பிராணிகளை எவ்வாறு அழைத்து வர வேண்டும் என்பது குறித்து நாய் உரிமையாளர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம் என்றும் கூறுகிறார்.

செல்லப்பிராணிகள்
செல்லப்பிராணிகள்

அரசின் இந்தச் சட்டம் குறித்து சமூக ஊடகங்களில் மக்கள் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கும் நிலையில், தாங்கள் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு குறித்து மறுபரிசீலனை செய்யவிருப்பதாக யுன்னான் மாகாண அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

நாய்களுக்கு எதிராக இப்படிப்பட்ட சட்டம் அரங்கேறுவது சீனாவில் ஒன்றும் புதிதல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்பு சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஹாங்சூ நகரத்தில் தெருவில் நாயை அழைத்துக்கொண்டு பகல் பொழுதில் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 45 செ.மீட்டருக்கு மேல் உயரமுள்ள பெரிய இன நாய்களை வளர்க்கவும் அந்நகரத்தில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா: வீட்டில் திடீர் தீ - உறங்கிக்கொண்டிருந்த உரிமையாளரைக் காப்பாற்றிய கிளி!
அடுத்த கட்டுரைக்கு