Published:Updated:

‘முதலையின் தோல்…2.6 கோடி ருபாய்’-நீதா அம்பானியின் ஹேண்ட் பேக்குக்கு பின்னால் இருக்கும் கதை

முதலையின் தோலுக்கு சந்தையில் மதிப்பு அதிகமாகவே இருக்கிறது. அதைப் பயன்படுத்தி விலை உயர்ந்த பல பொருள்கள் உருவாக்கப்படுகின்றன

நீதா அம்பானி
நீதா அம்பானி

கடந்த சில நாள்களுக்கு முன்னால் இணையத்தில் வைரலானது நீதா அம்பானி மற்றும் பாலிவுட் பிரபலங்களான கரீனா கபூர், கரிஷ்மா கபூர் ஆகியோர் இடம்பெற்றிருந்த ஒரு போட்டோ.

ஹேண்ட் பேக்
ஹேண்ட் பேக்

கரிஷ்மா கபூர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த போட்டோவைப் பதிவிட்டு ஒரு வாரத்தைக் கடந்த பின்னரும் அவர்களது போட்டோ பிரபலமானதோ இல்லையோ, நீதா அம்பானியின் கையிலிருந்த ஹேண்ட் பேக் பற்றிய பேச்சு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. காரணம் அதன் விலை. Hermès என்ற நிறுவனம் தயாரித்த அந்த ஹேண்ட் பேக்கின் விலை சுமார் 2.6 கோடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது

முதலைப் பண்ணை டூ ஹேண்ட் பேக்

ஹேண்ட் பேக்
ஹேண்ட் பேக்

பிரபலங்களைப் பொறுத்தவரையில் ஹேண்ட் பேக் என்பது வெறுமனே தேவையான பொருள்களை உடன் எடுத்துச் செல்வதற்கானது மட்டுமல்ல. சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் அந்தஸ்தை வெளிப்படுத்தும் ஒரு பொருள். அதன் காரணமாகவே பிரபலங்கள் பலரும் விலை உயர்ந்த ஹேண்ட் பேக்கை வெளியே செல்லும் போது கையில் எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவ்வளவு மதிப்பு கொண்டதாக இருப்பதற்கு அதில் பதிக்கப்பட்டிருக்கும் வைரமும் ஒரு காரணம். நீதா அம்பானி கையில் இருக்கும் அந்த ஹேண்ட் பேக்கின் பெயர் ஹிமாலயா பிர்கின் (Himalaya Birkin). அதில் 200-க்கும் மேற்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர 18 கேரட் தங்கமும் அதன் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது விஷயம் அதுவல்ல அந்த ஹேண்ட் பேக் செய்யப் பயன்படுத்தப்பட்ட தோல்தான். வரி வரியாகச் சிறிய கட்டங்களுடன் இருக்கும் அந்த தோலுக்குச் சொந்தக்காரர் ஒரு முதலை.

ஹாலிவுட், பாலிவுட், கோடீஸ்வரர்கள் எனப் பல தரப்பு பிரபலங்களிடையே Hermes என்ற பெயர் பரிச்சயமான ஒன்று. விலை உயர்ந்த ஹேண்ட் பேக்குகளுக்கு பெயர் பெற்ற பிரபலமான நிறுவனங்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் சில ஹேண்ட் பேக்குகளின் விலை கோடிகளை நெருங்கும். நெருப்புக்கோழி, மாட்டுத் தோல் என பல்வேறு விலங்குகளில் தோலில் இந்த பேக்குகள் உருவாக்கப்பட்டாலும் முதலைத் தோலே விலை உயர்வானதாக இருக்கிறது. மற்ற தோல்களுடன் ஒப்பிடுகையில் முதலையின் தோலில் வடிவங்கள் இயற்கையாகவே இருப்பதும், மிகக் கடினமானதாக இருப்பதும் அதைப் பலரும் விரும்பக் காரணமாகிறது. மேலும் முதலைத் தோலுக்கான தேவை மிக அதிகமாக இருப்பதும் அதன் மதிப்பு உயரக் காரணமாகிறது

முதலைப் பண்ணை
முதலைப் பண்ணை

தோலுக்காக முதலைகள் தனியாகப் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. பண்ணைகளுக்குத் தேவைப்படும் முட்டைகள் வெளியிலிருந்து சேகரித்து வரப்படும். பின்னர் அவற்றைப் பொரிக்க வைத்து குட்டைகளில் வளர்ப்பார்கள். எல்லாம் அவர்களுக்குத் தேவையான தோல் கிடைக்கும் வரைக்கும்தான். பெரும்பாலும் முதலையின் இடுப்புப் பகுதியில் இருக்கும் தோல்தான் ஹேண்ட் பேக்குகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

. ஒரு சிறிய ஹேண்ட் பேக் செய்வதற்கு 30 முதல் 34 செ.மீ அகலம் கொண்ட தோல் தேவைப்படும். பெரிய அளவு ஹேண்ட் பேக் செய்வதற்கு 40 முதல் 50 செ.மீ வரை அகலம் கொண்ட தோல் தேவைப்படும். ஒரு வயது முதலையில் இருந்து 20-24 செ.மீ.அளவுக்கான தோல் கிடைக்கும். நாளாக நாளாக அதன் அளவு அதிகரிக்கும். 45 செ.மீ. அளவு தோல் வேண்டும் என்றால் அதற்குக் குறைந்தது மூன்று வயது கொண்ட முதலையாவது தேவைப்படும். அடுத்ததாக வளரும் தோல் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியமாகிறது. தோலில் காணப்படும் ஒவ்வொரு விதமான பாதிப்பும் அதற்கான மதிப்பைக் குறைக்கும். எனவே முதலைகள் மிகக் கவனமாகக் கையாளப்படுகின்றன. அவை சண்டை போடுவதைத் தடுக்கும் விதத்தில் சிறிய குட்டைகளில் தனித் தனியே வளர்க்கப்படுகின்றன. தேவையான அளவு வளர்ந்த பின்னர் முதலை குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டுக் கொல்லப்படுகிறது.

முதலைத் தோல்
முதலைத் தோல்

அதன் உறுப்புகள் எதுவுமே வீணாவதில்லை. அதன் பற்களுக்குக் கூட சந்தையில் ஒரு மதிப்பு இருக்கிறது. முதலை மாமிசமும் சில நாடுகளுக்குத் தேவையானதாக இருப்பதால் அவை தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இருப்பதிலேயே மதிப்பு வாய்ந்த பொருளான தோல் மிகக் கவனமாகப் பிரித்தெடுக்கப்பட்டு, நன்றாகப் பதனிடப்பட்டு பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சட்டப்பூர்வமாகவே முதலைப் பண்ணைகளை நடத்த அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆனால் பண்ணைகளைத் தொடங்கவும் அதைப் பராமரிக்கவும் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

45 சென்டி மீட்டருக்கு மேல் இருக்கும் முதலைத் தோலின் விலை சராசரியாக 50000 ரூபாயைத் தொடுகிறது. தோலின் தரத்தைப் பொறுத்து அதன் விலை அதிகரிக்கும். நீதா அம்பானியின் கையிலிருந்த ஹிமாலயா பிர்கின் ஹேண்ட் பேக் நைல் முதலை எனப்படும் நன்னீர் முதலையின் தோலிலிருந்து செய்யப்பட்டது. இந்த வகை முதலைகளின் இனம் 1940-களில் அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. காரணம் அவை மிக அதிகமாக வேட்டையாடப்பட்டதுதான். நெடுங்காலத்துக்கு முன்னரே அவை உணவுக்காகவும், தோலுக்காகவும் வேட்டையாடப்பட்டு வந்தாலும் 1950- களுக்குப் பிறகு அது அதிகரித்தது. 1950 முதல் 1980 வரையிலான கால கட்டத்தில் சுமார் 3 மில்லியன் நைல் முதலைகள் வேட்டையாடப்பட்டன. அதன் பின்னர் கடுமையான சட்டங்களால் அழிவை நோக்கிச் சென்ற நைல் முதலைகள் இப்போது ஓரளவுக்குப் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றன.

நைல் முதலை
நைல் முதலை

மனிதனின் ஆடம்பரத் தேவைக்காக விலங்குகளைப் பலி கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கை பல வருடங்களாக வைக்கப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக சில நிறுவனங்கள் விலங்குகளின் தோலைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றன. பல நாடுகள் முதலைத் தோலை இறக்குமதி/ ஏற்றுமதி செய்யவும் தடை விதித்திருக்கின்றன. சில நாடுகள் கடுமையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னரே இறக்குமதிக்கு அனுமதியளிக்கின்றன. இந்தியா கடந்த 2017-ம் ஆண்டில் முதலைத் தோல் இறக்குமதிக்கு முழுத் தடை விதித்திருக்கிறது. பண்ணைகளை நடத்த ஆகும் செலவாகும் என்பதாலும், தோலுக்குச் சந்தையில் இருக்கும் மதிப்பாலும் முதலைகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டே வருகின்றன. விலங்கு கடத்தலைப் பொறுத்தவரையில் பணம்தான் முக்கியமான விஷயம் சட்டங்கள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். பணம் மட்டும் இருந்தால் நைல் நதியில் நீந்திக் கொண்டிருக்கும் முதலை இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் முழுக்க கூட பயணம் செய்யும்.