Published:Updated:

`80 லட்சம் ரூபாய் டு 7 கோடி ரூபாய்!' - ஒரே சூட்கேஸில் கோடீஸ்வரராக்கும் ஈல் மீன் கடத்தல்

ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்குக் கடத்தப்படும் இந்த ஈல்களின் மதிப்பு நம்பவே முடியாத அளவுக்கு இருக்கிறது.

வழக்கமாக விலங்குக் கடத்தல் என்றாலே கென்யா, ஜிம்பாப்வே போன்ற ஆப்பிரிக்க நாடுகள்தான் நினைவுக்கு வந்துபோகும். காரணம் உலகில் வாழும் தனிச் சிறப்பு வாய்ந்த விலங்குகள் அந்தப் பகுதியில் அதிகம். அவற்றுக்கான தேவையும் அதிகமாக இருப்பதால் வேட்டையாடப்பட்டு வருகிறது. மேலும், அங்கே வறுமை, எழுத்தறிவின்மை அதிகமாக இருப்பது போன்ற விஷயங்களும் அந்தப் பகுதியில் இருப்பவர்களை விலங்குக் கடத்தலை நோக்கித் தள்ளுகிறது.

ஈல் மீன்
ஈல் மீன்

மேலை நாடுகளின் பெயர் இந்த விஷயத்தில் அடிபடுவது என்பது மிகக் குறைவு. வளர்ச்சியடைந்த நாடுகள் அந்தப் பகுதியில் இருப்பதும், அவர்கள் செல்வச் செழிப்புடன் இருப்பதும் அதற்குக் காரணம். ஆனால், குறிப்பிட்ட ஓர் உயிரினத்தைக் கடத்துவதில் ஐரோப்பாவின் பெயர் சமீப காலமாக அடிபடத் தொடங்கியிருக்கிறது.

கடத்தல்காரர்களின் இலக்கு என்பது பெரும்பாலும் கடத்தலுக்கு எளிதாக இருக்கும். அதே சமயம் சந்தையில் மதிப்பு கூடுதலாகக் கிடைக்கும் விலங்குகள்தான். அந்த விதிக்கு அப்படியே பொருந்திப் போகின்றன ஈல் வகை மீன்கள். உருவமும் சிறியது; மதிப்பும் அதிகம்.

கண்ணாடி ஈல்
கண்ணாடி ஈல்

ஈல்களின் வாழ்க்கை சுழற்சி என்பது மற்ற கடல் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. ஐரோப்பாவில் இருக்கும் இந்த ஈல் மீன் முட்டையிடுவதற்காக மெக்ஸிகோ வளைகுடாவில் இருக்கும் சர்காசோ கடல் பகுதிக்குச் செல்கின்றன. இந்த இரண்டு பகுதிக்கும் இடைப்பட்ட தூரம் 2,000 கிலோ மீட்டருக்கும் அதிகம். முட்டை பொறித்து அதிலிருந்து வெளிவரும் ஈல்கள் சில காலத்துக்கு நிறமில்லாமல் கண்ணாடிபோல இருக்கும். அதனால் கடத்தல்காரர்களுக்கும் வசதியானதாக மாறிவிடுகிறது. அளவில் சிறியதாக இருக்கும் கண்ணாடி ஈல்கள்தான் கடத்தல்காரர்களின் குறி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த சில வருடங்களில் ஐரோப்பாவில் இந்த மீன் கடத்தல் என்பது அதிகமாகியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் 300 முதல் 350 மில்லியன் வரை ஈல்கள் கடத்தப்படுகின்றன. ஒட்டு மொத்தக் கடத்தலின் மதிப்பு என்பது வருடத்துக்கு 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த ஈல்கள் அளவில் மிகவும் சிறியவை என்பதால் கடத்தலுக்கும் எளிதானதாக மாறிவிடுகிறது. ஒரு நபரால் ஒரு சூட்கேஸில் 1,00,000 சிறிய கண்ணாடி ஈல்களை அடக்கிவிட முடியும். அதில் இருக்கும் ஒற்றை ஈலின் மதிப்பு ஒரு பவுண்டு. அதன்படி பார்த்தால் ஒரு சூட்கேஸில் ஒரு லட்சம் பவுண்டுகள் இருக்கும். இந்திய மதிப்பில் சுமார் 86 லட்சம் ரூபாய். அதைக் கடத்தல்காரர்கள் ஜப்பானுக்கோ, சீனாவுக்கோ வெற்றிகரமாகக் கொண்டு சென்றுவிட்டால் போதும்.

ஈல் மீன் கடத்தல்
ஈல் மீன் கடத்தல்

அதன் பின்னர் இப்படிக் கொண்டு செல்லப்படும் மீன்கள் தனியாகக் குட்டைகளில் அல்லது அதற்கென தயார் செய்யப்பட்ட தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. ஒரு வருடத்தில் ஈல்கள் ஓரளவுக்கு வளர்ந்துவிடும். அதன் பிறகு அதன் மதிப்பு நம்பவே முடியாத அளவுக்கு உயரும். எப்படியென்றால் வெறும் 80 லட்ச ரூபாய்க்கு ஐரோப்பாவிலிருந்து கிளம்பிய இந்த மீன்களின் மதிப்பு ஒரு வருட முடிவில் 7 கோடி ரூபாயைத் தொட்டுவிடும். இது போல லாபம் கொடுக்கும் கடத்தல் வேறு எதுவுமே இல்லையென்பதால்தான் நாளுக்கு நாள் கடத்தல் என்பது அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

கடந்த வருடத்தில் ஐரோப்பாவில் மட்டும் 15 மில்லியன் ஈல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 153 பேர் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முந்தைய வருடத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 98 பேர். இப்படி வருடத்துக்கு வருடம் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. அனைத்து ஈல் மீன்களுமே ஆசியக் கண்டத்தை நோக்கித்தான் பயணிக்கின்றன. காரணம் சீனா மற்றும் ஜப்பானில் இந்த ஈல் மீன்களுக்கான தேவை என்பது அதிகம். பெரும்பாலும் உணவுச் சந்தையைக் குறி வைத்தே இவை கடத்தப்படுகின்றன. உலகில் பிடிக்கப்படும் ஈல் மீன்களில் 70 சதவிகிதம் ஜப்பானுக்குத்தான் செல்கிறது.

ஈல்
ஈல்

அதிகமாகப் பிடிக்கப்படுவது, சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகியவை ஒருபக்கம் இருக்க சுற்றுச்சூழல் மாசுபாடு என மறுபக்கம் ஈல் மீன்களை மிரட்டுகின்றன. அப்படியிருந்தும் கடத்தல்காரர்கள் விடுவதாக இல்லை. எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் இன்று உலகின் மிகப் பெரிய விலங்கு கடத்தல் இதுவாகத்தான் இருக்கும். ஈல் மீன்கள் மூலமாக லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு