Published:Updated:

அன்றைய டைனோசர்களே இன்றைய பறவைகள்! வியூப்பூட்டும் ஆய்வு முடிவுகள்

கெசோவாரி பறவை
கெசோவாரி பறவை ( Pixabay )

தற்போதுள்ள பறவைகள் Theoropods என்ற மாமிச உண்ணி டைனோசர்களின் வழித்தோன்றல்களாக அறியப்படுகின்றன.

தற்போது இருக்கும் பறவைகள் அனைத்தும் டைனோசர்களா? 'ஆம்' என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

சினிமாக்களில் மட்டுமே கண்டுள்ள டைனோசர்கள்தான் ஆதிகாலத்தில் புவியின் ஆதிக்க உயிரினமாக இருந்தது. அந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டாலும் தற்போது வாழும் பறவையினம் அனைத்துமே ஏதோ ஒரு வழியில் டைனோசர்களின் வழித்தோன்றல்கள் என்று தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பறவைகள், கிரிடாசியஸ் காலகட்டத்தில் (cretaceous era ) 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இரண்டு கால்கள் உடைய சிறிய டைனோசர் இனத்திலிருந்து தோன்றியிருக்க வேண்டுமென்று கருதப்படுகிறது.

டைனோசர்
டைனோசர்

தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பழங்காலப் பறவைகளின் படிமங்களில் ஒன்றுதான் கார்காந்துவா பிலாய்னஸ் (Gargantua philoinos ) என்ற 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிகப் பெரிய பறவை இனம். மற்ற பறவையினங்கள் காக்காவின் அளவை ஒத்தோ அல்லது அதனினும் சிறியதாகவோதான் இருந்துள்ளன. கார்காந்துவா ஒரு பறவை அல்ல என்றும் ஒரு பறக்கும் பல்லி என்றும் கருதுகிறார் தொல்லியல் ஆய்வாளரான ஜூலியா க்ளார்க்.

ஆஸ்டினில் அமைந்துள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் அவரும், அவரது ஆய்வுக்குழுவும் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், இன்றைய பறவைகள் பழங்கால டைனோசர்களில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து வந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பறவைகள் Theoropods என்ற மாமிச உண்ணி டைனோசர்களின் வழித்தோன்றல்களாக அறியப்படுகின்றன. பற்கள் இல்லாத அலகுகள், இறக்கைகளால் ஆன உடல், எலும்புகள் ஒன்று சேராத தோள்பட்டை, பின்பக்க எலும்புகளைவிட (hind limb) முன்பக்க எலும்புகள் (fore limb) நீண்டிருத்தல் என்று இன்றைய பறவைகளில் காணப்படும் தனித்துவங்கள் அன்றே டைனோசரிலும் காணப்பட்டதாக இதுவரையிலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரீங்காரச் சிட்டு
ரீங்காரச் சிட்டு
Pixabay

ஜப்பானில் கண்டெடுக்கப்பட்ட, 120 மில்லியன் ஆண்டுகள் பழைமையான Fukuipteryx என்ற டைனோசர் வகையைச் சேர்ந்த உயிரினத்தின் வால் எலும்புப் பகுதி (pygostyle) கோழிகளின் வால் எலும்புப் பகுதியுடன் ஒத்துப் போகின்றன என்பது பல சாட்சிகளில் ஒன்று.

ஆதிகாலப் பறவைகளின் உடலமைப்பும் டைனோசர்களின் உடலமைப்பும் பெருமளவில் ஒத்துப் போகின்றன. தற்போது ஆஸ்திரேலியாவில் அதிகமாக வாழ்கின்ற பறவை இனமான கெசோவாரி (Cassowary) பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட Theoropod டைனோசர்களைப் போலவே இருக்கும். அதைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

ஆராய்ச்சியாளர்கள், விலங்குகளின் எலும்புகள், தசைகள், திசுக்கள் ஆகியவற்றை நுணுக்கத்துடன் ஆராய்ந்து, அதன் வழித் தோன்றல்களை ஆராய்வார்கள். அவ்வாறு செய்யப்பட்ட ஆய்வுகளின் மூலமே, டைனோசர்களுக்கும் பறவைகளுக்குமான உறவு கண்டறியப்பட்டுள்ளது.

150 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த Archaeopteryx மிகப் பழைமையான பறவையாக அறியப்பட்டுள்ளது. இது theoropod டைனோசர் வகையைச் சேர்ந்தது. 50 சென்டிமீட்டர் நீளம், 2 பவுண்டு எடை மற்றும் உடம்பில் புள்ளிகள் என்று பறக்கும் தன்மை உடையதாக இந்த Archaeopteryx இருந்ததாகப் படிம தடயங்கள் கூறுகின்றன. இதன் தனித்துவம் அதன் இறக்கையின் நுனிப்பகுதியில் இருந்த விரல்கள் இணைக்கப்பட்ட கால் பகுதி ஆகும் (claw like finger). இந்த அமைப்பு இவ்வினத்தை இன்றைய பறவைகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது.

டைனோசர்
டைனோசர்

120 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த cretaceous காலப் பறவை இனத்தின் செரிமானத்தன்மையும் தற்போதைய பறவைகளின் செரிமானத்தன்மையும் ஒரே மாதிரி இருப்பதாக, மீன் படிமத்தில் கண்டெடுக்கப்பட்ட cretaceous பறவையின் எச்சப்படிம ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் டைனோசர்களுக்கும் இன்றைய பறவைகளுக்கும் பறக்கும் தன்மை மட்டுமே மாறுபட்டதாக இருந்துள்ளது.

பறக்கும் தன்மையற்று டைனோசர்களின் கைகளில் இருந்த எலும்பு, பரிணாம வளர்ச்சியின்போது பறப்பதற்கு ஏதுவாக மாறியுள்ளன. நெஞ்சகப் பகுதியில் உள்ள எலும்பு விரிவடைதல், தோள்பட்டைத் தசைகள் வலுவடைதல் (pectoralis) ஆகியவை பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களாக அறியப்படுகின்றன.

கெசோவாரி
கெசோவாரி

சிறிய பறவையான ரீங்காரச் சிட்டு முதல் உருவத்தில் பெரிய நெருப்புக்கோழி (Ostrich) என்ற பறவை வரை, உலகிலுள்ள 10,000 பறவை இனங்களும் டைனோசர்களின் வழித்தோன்றல்களே என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

நம் வீட்டு ஜன்னலுக்கு வந்து செல்லும் குருவி, காக்கா, கிளி அனைத்தும் பெருமையாகக் கூறும் எங்கள் முப்பாட்டன் டைனோசர் என்று.

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் துடைத்து அழிக்கப்பட்ட சோக வரலாற்றுக் கதை!
அடுத்த கட்டுரைக்கு