Published:Updated:

`உணவின்றித் தவித்த பூனைகள்; உதவிய மீன் தீவனம்!' - தி.மு.க எம்.எல்.ஏ செயலால் களமிறங்கிய அதிகாரிகள்

பூனைகள்
பூனைகள்

வீட்டுப் பிராணிகளுக்கும் உயிர் வாழும் உரிமை உள்ளது. அதற்காக உணவு கொள்முதல் செய்ய அனுமதிக்கலாம் என்று கேரளா உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் வெளியில் சென்று தீவனம் கொள்முதல் செய்ய முடியாத நிலையில் காப்பகத்தில் வளர்க்கப்பட்ட பூனைகள் உணவில்லாமல் மரணமடைய இருந்த நிலையில் அவற்றின் உயிரைக் காப்பாற்ற மீன் தீவனங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

பூனைகள் காப்பகம்
பூனைகள் காப்பகம்

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் செயல்பட்டு வரும் பரஸ்பரம் என்ற குழந்தைகள் காப்பகத்தில், கைவிடப்பட்ட பூனைகளையும் வளர்த்து வருகிறார்கள். அவற்றுக்குத் தேவையான உணவு, மருந்துகளைக் கொடுத்து பூனைகள் இயல்பாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார், எம்.எல்.ஏ தியாகராஜன்.

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் பூனைகளுக்கு பிடித்தமான மீன் உணவுகள் கிடைப்பதில் காப்பகத்தினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தால்தான் வெளியில் சென்று உணவுகளை வாங்கி வர முடியும். அதற்கு முயன்றும் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. பூனைகளைப் பொறுத்தவரையில் உணவு முறையை மாற்றிக் கொள்ளும் பழக்கம் இல்லாதவை. தனக்குப் பிடித்த உணவு கிடைக்கவில்லை என்றால் சாப்பிடாமலேயே பட்டினி கிடந்து உயிர் விட்டுவிடும். இந்த நிலையில் நான்கு பூனைகள் சரியான உணவில்லாமல் மரணமடைந்துவிட, காப்பகத்தினர் கவலை அடைந்தார்கள். இந்த நிலையைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்குத் தெரிவித்தார்கள்.

பூனைகள்
பூனைகள்

அதன் பின் நடந்ததைப் பற்றி நம்மிடம் பேசிய மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ''ஊரடங்கை முன்னிட்டு வீட்டில் தனித்திருக்கும் நிலையில் என் மனைவியின் கவனத்துக்கு இத்தகவல் வந்ததும் என்னிடம் தெரிவித்தார். நான் உடனே திண்டுக்கல்லில் உள்ள என் நண்பர் மூலமும் தி.மு.க ஐ.டி விங் நிர்வாகிகள் மூலமும் உதவச் சொன்னேன். அவர்கள் மூலம் 10 கிலோ மீன் உணவுகள் பூனைகளுக்கு வழங்கப்பட்டன. இது மட்டும் போதாது என்பதால் மதுரை வட்டாரத்தில் விசாரித்து 15 கிலோ தீவனங்களைக் கொள்முதல் செய்து அங்கு அனுப்பி வைத்தேன்.

இதுபோன்று வீட்டுப் பிராணிகளுக்கும் உயிர் வாழும் உரிமை உள்ளது. அதற்காக உணவு கொள்முதல் செய்ய அனுமதிக்கலாம் என்று கேரளா உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பை அளித்த நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் என்னுடைய வகுப்புத் தோழர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். அதையெல்லாம் இணைத்து வீட்டுப் பிராணிகளின் உணவுத்தேவைக்கு வெளியில் சென்று தீவனங்கள் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை.

பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்

இந்த நிலையில் பூனைகளுக்குத் தீவனங்கள் அனுப்பியதற்கு நன்றி தெரிவித்து சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டிருந்தார்கள். இதைப் பார்த்தவுடன் இப்போது சம்பந்தப்பட்ட துறையின் செயலாளரே அந்தக் காப்பகத்துக்கு வெளியில் சென்று தீவனம் வாங்கி வர அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு நேரத்தில் மற்ற உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. அலட்சியமாக உள்ள அதிகாரிகளை உத்தரவிட வைக்க இவ்வளவு முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது'' என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு