Published:Updated:

`தாயை இழந்து தவித்த ஆட்டுக்குட்டிகள்!' -தாயுள்ளத்தோடு பாலூட்டி வளர்க்கும் தூத்துக்குடி நாய்

ஆட்டுக்குட்டிகளுக்குப் பால் தரும் ஜிம்மி
ஆட்டுக்குட்டிகளுக்குப் பால் தரும் ஜிம்மி

தூத்துக்குடியில் நாய் ஒன்று, தாயை இழந்த 5 ஆட்டுக்குட்டிகளுக்குப் பாலூட்டி பாதுகாப்பாக வளர்த்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் காசி. விவசாயியான இவர், தனது வீட்டில் ஆடுகளுடன் சேர்த்து பாதுகாப்புக்காக `ஜிம்மி’ என்ற ஒரு நாயையும் வளர்த்து வருகிறார். மற்ற நாய்களைப் போல் இல்லாமல் இந்த நாய் ஆடுகளுடன் அன்பாய் இருப்பதும் அவற்றைப் பாதுகாப்பாய்ப் பார்த்துக்கொள்வதுமாக இருந்து வருகிறது.

நாய், ஆட்டுக் குட்டிகளுடன் காசி
நாய், ஆட்டுக் குட்டிகளுடன் காசி

இந்நிலையில், காசி வளர்த்துவந்த மூன்று பெண் ஆடுகள், 5 ஆட்டுக்குட்டிகளை ஈன்றுவிட்டு இறந்துவிட்டன. தாய்களை இழந்த ஆட்டுக்குட்டிகள் தாய்ப்பாலுக்கு ஏங்கின. ஆட்டுக்குட்டிகளின் ஏக்கத்தை உணர்ந்த நாய், தனது தாய்ப்பாலை ஆட்டுக்குட்டிகளுக்குக் கொடுத்து வளர்த்து வருகிறது.

விவசாயி காசியிடம் பேசினோம், `பூர்வீகமாவே விவசாயம் செய்துட்டு வர்றோம். விவசாயத்துடன் சேர்த்து ஆடு வளர்ப்பையும் பிரதான தொழிலா செய்துட்டு வர்றேன். வெள்ளாடு, செம்மறி ஆடு என மொத்தம் 20 உருப்படிகள் இருக்குது. நான் வளர்த்து வந்த ஆடுகளில் மூன்று செம்மறி ஆடுகள் ஐந்து குட்டிகளை ஈன்றுவிட்டு ஒருவாரத்துல இறந்துபோய்விட்டன. தாயை இழந்த ஆட்டுக்குட்டிகள் தாய்ப்பாலுக்காக ஏங்கின.

ஜிம்மியிடம் பால் குடிக்கும் ஆட்டுக் குட்டிகள்
ஜிம்மியிடம் பால் குடிக்கும் ஆட்டுக் குட்டிகள்

ராத்திரி முழுக்க ``ம்மே.. ம்மே…” எனத் தாயைத் தேடி கத்திக்கிட்டே இருக்கும். ஆட்டுத் தொழுவத்தையே சுத்திச் சுத்தி வந்துச்சு. பால்புட்டியில் பசுமாட்டுப் பாலை அடைத்து ஒவ்வொரு குட்டிக்கும் கொடுத்தேன். ஆனா, குடிக்கலை. என்னோட நாய் ஜிம்மி 5 குட்டிபோட்டு ரெண்டு மாதம் ஆகப் போகுது. இதுல 4 குட்டிகளை நண்பர்கள் கேட்டாங்கன்னு வளர்ப்புக்காகக் கொடுத்துட்டேன். ஒரு குட்டிக்கு மட்டும் ஜிம்மி பால் கொடுத்துட்டு வருது.

இந்தநிலையிலதான், தன் குட்டிக்குப் பால் கொடுப்பதைப் பார்த்த இந்த 5 ஆட்டுக்குட்டிகளும் ஜிம்மியிடம் பால் குடிப்பதற்காகப் பக்கத்துல போனது. முதலில் குரைத்த ஜிம்மி, பிறகு ஒரு குட்டியை மட்டும் பால் குடிக்க அனுமதித்தது. பிறகு அடுத்தடுத்த குட்டிகள் மெல்ல மெல்ல பக்கத்தில் வந்து பால்குடிக்க ஆரம்பித்தன.

ஜிம்மியிடம் பால் குடிக்கும் ஆட்டுக் குட்டிகள்
ஜிம்மியிடம் பால் குடிக்கும் ஆட்டுக் குட்டிகள்

அன்றிலிருந்து இன்றுவரை தனது மடியில் சுரக்கும் பாலை ஆட்டுக்குட்டிகளுக்கும் அன்போடு தருகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த ஆட்டிக்குட்டிகளுடன் அன்போடு முகர்வது, விளையாடுவது, அவை மேச்சலுக்குச் சென்றால் பாதுகாப்புக்காகப் பின்தொடர்ந்து செல்வது என அவற்றை தனது சொந்தக் குட்டிகள் போலவே வளர்த்து வருகிறது.

Vikatan

`ஆட்டுக்குட்டிகளுக்கு நாய் பால் கொடுத்த அதிசயம்’னு பேப்பர்களிலும் டி.வி-களிலும்தான் பார்த்திருக்கேன். ஆனா, இப்போ என்னோட நாயும் பிற ஆட்டுக்குட்டிகளுக்குக் கருணையோட பால் கொடுக்குறதைப் பார்க்கும் போது கண்களில் கண்ணீர்தான் முட்டுது” என்றார்.

``ம்மே…” என்று அந்தக் குட்டிகள் கத்தினால் அடுத்த சில நிமிடங்களில் பாய்ந்து வந்து நிற்கிறது ஜிம்மி.

ஆட்டுக்குட்டிகள் பால் குடிப்பதைப் பார்க்கும் கிராமத்தினர்
ஆட்டுக்குட்டிகள் பால் குடிப்பதைப் பார்க்கும் கிராமத்தினர்

நாய் என்றால் நன்றி உள்ள செல்லப்பிராணி என்பதையும் தாண்டி, பழகினால் தாயுள்ளம் கொண்டது என்பதற்கு காசியின் வீட்டு நாய் ஓர் உதாரணம். ஆட்டுக்குட்டிக்குப் பால் கொடுத்து வரும் ஜிம்மியை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு