Published:Updated:

ஆசையாக வளர்க்கும் செல்ல நாய்களின் கனவில் உங்கள் கதாபாத்திரம் என்ன? #PetAnimals

நாய்கள்
நாய்கள் ( Pixabay )

`அட! நாய்களுக்குக்கூட கனவு வருமா...' என்று நீங்கள் வியக்கலாம். ஆம், நம்மைப்போல் அவையும் கனவு காண்கின்றன.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், பிரபல சிறுநீரகவியல் மருத்துவர் தனது செல்ல நாயைப் பார்த்துக்கொள்வதற்காக 6 ஆண்டுகள் எந்த வெளிநாட்டுப் பயணமும் மேற்கொள்ளாமல் இருந்ததாகவும் அதைத் தன் உயிரினும் மேலாகக் கருதி, தன் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் அதற்கான நேரத்தைச் செலவிட்டு வருவதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். மேலும் ஓர் இளம் நடிகர், தன் முதல் சம்பளத்தில் ஒரு செல்ல நாயை வாங்கிய செய்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இவை சில உதாரணங்களே.

வடிவமைப்பில், அலைவரிசையில், மூளையின் மின் அதிர்வில், நாயின் மூளை மனித மூளையைக் கிட்டத்தட்ட ஒத்திருக்கிறது.

வயதான பெற்றவர்களையே ஒதுக்கும் பலர் வாழும் இந்தச் சமூகத்தில், ஐந்து அறிவுள்ள ஜீவனை மதிக்கும் ஆட்கள் உள்ளனர். தான் உண்ட மிச்சத்தை நாய்க்குப் போட்ட காலம் மறைந்து வெகு நாள்களாகிவிட்டன. செல்லப் பிராணியான தன் நாய் உண்டால்தான் அடுத்த வேலை என்ற நிலையில் பலரும் இன்று இருப்பதைப் பார்க்கமுடிகிறது.

செல்லப் பிராணிகளை வளர்ப்பது ஓர் அந்தஸ்து என்று கூறுபவர்கள், நாய்களின் ஆத்மார்த்தமான அன்பை உணராதவர்கள். `உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நம் செல்ல பிராணியாக இருக்கும் நாய்கள் அதன் எஜமானர்களைக் கனவிலும் நினைக்கின்றன என்று ஹார்வர்டு பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர் ஸ்டான்லி குறிப்பிடுகிறார்.

`அட! நாய்களுக்குக்கூட கனவு வருமா?' என்று நீங்கள் வியக்கலாம். ஆம், மனிதர்களைப்போல் அவையும் கனவு காண்கின்றன.

நம் கனவில் நம் ஆசைகள், அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகள் என வருவது போல் நாயின் கனவில் அதன் எஜமானர்களும் அவர்களோடு அன்றைய தினம், அவை செலவழித்த நிமிடங்களும் வருகின்றனவாம்.

நம் தூக்கத்தைப் போல் நாயின் தூக்கமும் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு, REM (Rapid Eye Movement) எனப்படும் இமைகளை வேகமாகச் சிமிட்டிக் கொண்டே இருக்கின்ற தூக்க நிலையில்தான் கனவுகள் ஏற்படும். நாய்களுக்கும் அப்படியே.

செல்லப் பிராணிகளையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்!
கனவுகள்
கனவுகள்
Pixabay

ஒரு நாளில் மனிதர்களைவிட நாய்கள் அதிக நேரம் தூங்குகின்றன. அவை தம் 50 சதவிகித நேரத்தைத் தூக்கத்தில் செலவழிப்பதால், அதில் தங்கள் எஜமானரைப் பற்றியும் தாம் வளரும் வீட்டில் உள்ளவர்கள் பற்றியும் தன்னைப் பற்றியும் கனவு காண்கின்றன. தூக்கத்தின் இடையே நடுங்குவது, கால்களைச் சடக்கென்று இழுப்பது போன்ற செயல்கள் மூலம் நாய்கள் கனவு காண்கின்றன என்பதை நம்மால் உணர முடியும்.

வீட்டில் நான்கு கால்களையும் நீட்டி வைத்துக்கொண்டு ஆயாசமாகத் தூங்கிக் கொண்டிருக்கும் நாய்கள் திடீரென்று, தூக்கத்திலேயே கால்களால் ஓடுவதுபோல் செய்வதையும், மேலும் கீழுமாகக் கால்களையும் தலையையும் அசைப்பதையும் பார்த்திருப்போம்.

வடிவமைப்பில், அலைவரிசையில், மூளையின் மின் அதிர்வில், நாயின் மூளை மனித மூளையைக் கிட்டத்தட்ட ஒத்திருப்பதும், நாய்கள் மனிதர்களைப் போல் கனவு காண்கின்றன என்பதை ஓரளவுக்குப் புரிய வைக்கின்றன. அறிவுத்திறனில் நாய் இனத்தைவிட அறிவு குறைவான பூனை, எலி போன்றவையும் கனவு காண்கின்றன என்பதை அவற்றிடம் எடுக்கப்பட்ட மின் அதிர்வலை சோதனை மூலம் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

கனவு காணும்போது நாய்கள், தாம் கனவில் காண்பதைச் செயலில் காட்டும். பாயின்டர்ஸ் இனம் விளையாடுவது போலவும் ஸ்பிரிங்கர்ஸ் ஸ்பேனியல் பறவைகளைத் துரத்துவது போலவும் டாபர்மேன்ஸ் திருடர்களைத் துரத்துவது போலவும் கனவு காண்கின்றன.

அன்பு
அன்பு
Pixabay

தூக்கத்தினுடைய ஆரம்ப நிலையின்போது மூச்சு விடுதல் சாதாரணமாக இருக்கும். சராசரி உடல் அளவுள்ள நாய்கள் தூங்க ஆரம்பித்த 20 நிமிடங்களில் கனவு உலகத்திற்குச் சென்று விடுகின்றன. அப்போது அதன் சுவாசத்தில் மாறுபாடு தெரியும். மூச்சு சீரற்றதாக இருக்கும். கனவு காணும்போது கண்கள் மூடிய நிலையிலேயே இங்கும் அங்கும் நகர்ந்துகொண்டிருக்கும். கனவில் வருவதை நிஜமாகப் பார்ப்பது போல் அதன் கண் உருட்டல் இருக்கும்.

மனிதர்கள் பெரும்பாலும் கனவு காணும் REM நிலையில் சிறிது நேரத்தில் விழித்து விடுவது உண்டு. தான் கனவு கண்டதாகச் சொல்வார்கள். ஆனால், நாய்கள் அப்படி மிகக் குறைவான நேரங்களிலேயே அப்படி விழித்துக்கொள்கின்றன.

கனவிலும் எஜமானரை நினைக்கும் நாய் இனம் மிகச் சிறப்புடையது. நமக்காகவே வாழும் உறவுகள் கிடைப்பது கடினம். அதிலும் அவர்கள் நம் உணர்வுகளைப் புரிந்து நடப்பது அரிது. ஆனால் நமக்காகவே வாழும் ஜீவனாக நாய்கள் விளங்குகின்றன. நாம் சிறிது சோர்ந்தாலும் இவனுக்கு ஏதோ சரியில்லை ஏதோ பிரச்னை என்று கணிக்கும் தன்மையுடையவை நம் நாய்கள்.

நாய்கள்
நாய்கள்
Pixabay

வீட்டில் அனைவரும் உற்சாகமாக இருக்கையில் ஆனந்தமாகக் குரைத்துக்கொண்டும் ஓடி ஆடி விளையாடிக்கொண்டும் அனைவர் மீதும் தாவிக்கொண்டும் இருக்கும் நாய்கள், ஏதேனும் பிரச்னை நிகழ்ந்திருந்தால், கவலையில் இருந்தால் தானும் அமைதியாக ஓர் ஓரத்தில் சென்று அமர்ந்துவிடுவதைப் பார்த்திருப்போம். நம் உணர்வுகளை அவை எளிமையாகப் புரிந்துகொள்வதே அதற்குக் காரணம்.

இவற்றை ஐந்தறிவு ஜீவன் என்று கூறுவதை விட ஏழாம் அறிவு பெற்றவன் என்று சொல்லத் தோன்றுகிறது. எந்த ஓர் உறவும் நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துப் பழகும். அத்தகைய உலகில் கனவிலும் நம்மையே நினைத்து, தாம் வெளிப்படுத்தும் அன்பின் மூலம் நம்மைக் கண் கலங்கச் செய்யும் செல்லப் பிராணியான நாய்கள் நம் வாழ்வின் அன்புக்கொடை. அதற்கு நாம் செய்யும் கைம்மாறு அவற்றுடன் நேரம் செலவழிப்பது மட்டுமே.

தூக்கம்
தூக்கம்
Pixabay

அறிவு, அன்பு, நன்றி என்றால் அது நாய்தான். இனி, நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது உங்கள் நாய், அன்போடு ஓடி வந்தால் மிரட்டி விரட்டாமல் சில நிமிடங்களை அவற்றோடு செலவழியுங்கள். அவை எதிர்பார்ப்பதெல்லாம் உங்களோடு விளையாடும் அந்தச் சில நிமிடங்களைத்தான். அதற்காகவே ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போது, அவை கனவு காண்கின்றன. உங்களுக்காகவே வாழும் அவற்றின் கனவுகளை நிறைவேற்றி வையுங்கள். அதற்குத் தேவைப்படுவதெல்லாம் தினசரி ஒரு சில நிமிடங்களே.

அடுத்த கட்டுரைக்கு