புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உலக பிரசித்திபெற்ற சனிபகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அருகில் நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா ஆலயம் உள்ளது. இவற்றை தரிசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாவாசிகளும் வந்து செல்கின்றனர். அவர்கள் வழித்தடத்தில் இளைப்பாறும் இடமாகவும், முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குவது காரைக்கால் கடற்கரைதான்.

இந்தக் கடற்கரையில் சுமார் 100 ஏக்கர் அளவில் இயற்கையாக அலையாத்திக்காடுகள் அமைந்துள்ளது. இந்த வகைகாடுகள் சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தின்போது, மக்களைக் காப்பாற்றும் திறன் படைத்தவை. தற்போது கலெக்டராக உள்ள முகமது மன்சூர் இங்கு சப் - கலெக்டராக பணிபுரிந்தபோது அவரின் தொலைநோக்குப் பார்வையினால் பல லட்ச ரூபாய் செலவில் ஏராளமான அலையாத்தி செடிகளை நட்டு வளர்க்க நடவடிக்கை மேற்கொண்டார் அதன் விளைவாக அந்தச் செடிகள் பெரிய அளவில் காடுகளாக வளர்ந்து நிற்கிறது. ஆனால் தற்போது சமூக விரோதிகளின் கூடாமாக திகழ்வதுதான் வேதனை.
இதுபற்றி 'சிறகுகள்' சமூகநல அமைப்பின் தலைவர் வெங்கடேஷிடம் பேசினோம்.
"சைபீரியா, அமெரிக்க ஈரான், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து, இலங்கை வழியாக தமிழகப் பகுதிகளான கோடியக்கரை, பிச்சாவரம், வேடந்தாங்கல் போன்ற பறவைகள் சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் வந்துச் செல்லும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள், வழியில் காரைக்கால் அலையாத்திக் காடுகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவை வந்துச் செல்லும். இரைத் தேடியும், இளைப்பாறியும், இனப்பெருக்கம் ஏற்படுத்தியும் சென்றன. இதனால் இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வெளிநாட்டுப் பறவைகளைக் கண்டு ரசித்தனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இதில் போதிய அக்கறை காட்டாததால், அலையாத்திக் காடுகளில் பறவைகள் வேட்டையாடுவோர் அதிகரித்தனர். இக்காட்டினுள் ஏகப்பட்ட முள் செடிகள் வளர்ந்திருப்பதால் பறவைகள் இறக்கை அடிபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை இல்லை. இதனால் ஆண்டுதோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்த இடத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக பறவைகள் வரத்து குறைந்து வெறும் நூறு பறவைகள் எண்ணிக்கையில் வருவது வேதனையளிக்கிறது. மேலும் மது அருந்துவோர் காட்டில் பாட்டில்களை வீசுகின்றனர். விபச்சாரமும் இதனுள் நடைபெறுகிறது. மொத்தத்தில் சமூக விரோதக் கூடாராமாக மாறிவிட்டது.
எனவே மாவட்ட நிர்வாகம் அலையாத்திகாடுகளைப் முழுமையாக பராமரித்து, வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவு வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இதனைச் சீர்செய்து சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்யவும், பறவைகள் சரணாலயம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.

இதுபற்றி காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூரிடம் விளக்கம் கேட்டோம். "காரைக்கால் நகரின் சாக்கடை நீரெல்லாம் சேர்ந்து, கடலில் கலக்கும் இடமாக அது இருந்தது. அலையாத்திக்காடுகள் காற்றின் வேகத்தை குறைத்து மக்களுக்கு பாதுகாப்பை தரும் என்பதால், அதற்காக முயற்சி எடுத்தோம். அலையாத்திச் செடிகளை பயிரிட்டோம். அவை தற்போது காடுகளாகியுள்ளது. அதில் படகு சவாரி போன்ற மக்கள் நடமாட்டத்துக்கு வழி வகுத்தால் பறவைகள் வருவது அரிதாகும். பிச்சாவரம், முத்துப்பேட்டை போன்ற பகுதிகளில் மக்கள் தினந்தோறும் நெருங்கிச் செல்ல முடியாத அளவில் அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. ஆனால் இங்கு நகர்புறத்தில் அமைந்திருக்கிறது. எனவே மக்கள் அதன் அழகை ரசித்து செல்லும் வகையில் அதனுள் நடைபாதை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.