Published:Updated:

மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல்: 100 குழுக்கள் அமைப்பு... 9 லட்சம் கோழிகளை அழிக்கும் பணி தீவிரம்!

கோழி வெட்டுமிடம்
கோழி வெட்டுமிடம்

முதல் நாளில் மாவட்ட நிர்வாகம் 32,000 கோழிகளை அழித்தது. இரண்டாவது நாளான நேற்று 1.05 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன. இந்தப் பணிகள் மேலும் சில நாள்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. இதனால் கோழிக்கறி மற்றும் முட்டை விலை வெகுவாகச் சரிந்திருக்கிறது. நந்துர்பார் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை சுற்றி 26 கோழிப்பண்ணைகள் இருக்கின்றன. இந்தப் பண்ணைகளிலுள்ள கோழிகளை அழிக்கும் பணி கடந்த 7-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மாவட்ட நிர்வாகம் 32,000 கோழிகளை அழித்தது. இரண்டாவது நாளான நேற்று 1.05 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன. இந்தப் பணிகள் மேலும் சில நாள்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்தப் பகுதியில் 5,000 கோழிகள் மர்மமான முறையில் இறந்தன.

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்

அவற்றிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டதில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. எனவே, அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணையில் கோழிகளை அழிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியிருக்கிறது. இதற்காக 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் நான்கு பேர் இடம்பெற்றிருப்பார்கள். இது குறித்து நந்துர்பர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திரா கூறுகையில், ``பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நான்கு பண்ணைகளிலுள்ள கோழிகளை அழிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. மேலும் 22 கோழிப்பண்ணைகளில் கோழிகளின் இறப்பு அதிகமாக இருக்கிறது. அதன் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்தவுடன் மற்றா கோழிகளும் உடனே அழிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு பிரபலமாக இருப்பதுபோல், மகாராஷ்டிராவில் நந்துர்பர் மாவட்டத்தில் அதிகப்படியான கோழிப்பண்ணைகள் இருக்கின்றன. இந்தக் கோழிப்பண்ணைகளிலிருந்து அண்டை மாவட்டங்கள் மற்றும் குஜராத்துக்கு கோழி மற்றும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றன.

இறந்த கோழிகள் சோதனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன
இறந்த கோழிகள் சோதனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன

2006-ம் ஆண்டு பறவை க்காய்ச்சல் பரவுவதற்கு நந்துர்பர் மாவட்டம்தான் முக்கியக் காரணமாக இருந்தது. அது போன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் முழுவேகத்தில் செயல்பட்டுவருகிறது. பறவைக் காய்ச்சல் ஏற்பட்ட பகுதியிலிருந்து பெறப்பட்ட 44,000 முட்டைகளும் அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு 34 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு