Published:Updated:

`மின்சாரம் தாக்கி உயிரிழந்த குட்டி.. குவிந்த காட்டு யானைகள்'- கோவை அதிர்ச்சி!

கோயம்புத்தூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானை
யானை

கோயம்புத்தூரில் யானை – மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட தலைப்பு என்ற வனப்பகுதி அருகே இன்று காலை ஆண் குட்டி யானை ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது.

யானை
யானை

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். தங்கவேல் என்பவர் தோட்டத்தில் போடப்பட்ட மின்வேலி தாக்கிதான் குட்டி யானை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், யானை இறந்து நீண்ட நேரமாகியும் விவசாய நிலத்தின் உரிமையாளர் தங்கவேல் சம்பவ இடத்துக்கு வரவில்லை. ஆளும்கட்சியின் ஆதரவு இருப்பதால், அவரைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

யானை உயிரிழந்த விவசாய நிலம்
யானை உயிரிழந்த விவசாய நிலம்

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இதே மதுக்கரை வனச்சரகத்தில், ஓர் ஆண் யானையின் உடல் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டது. அதே பகுதியில் மீண்டும் ஓர் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவை மாவட்டத்தில் இரண்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. அடிக்கடி யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. ``பெரும்பாலான இடங்களில் விதிமுறைகளை மீறி மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. யானைகள் உயிரிழப்புக்கு இதுவே முக்கியக் காரணம்.

யானை
யானை

ஆனால், அரசியல் பின்புலம் இருப்பதால், இவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. யானை உயிரிழக்கக் காரணமான, மின்வேலி அமைத்தவரைச் சிறையில் அடைக்க வேண்டும்” என்கின்றனர் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

இந்த நிலையில், ``நிலத்தின் உரிமையாளர் பெயர் பட்டிலிங்கம், குத்தகைக்காரர்தான் தங்கவேல். விவசாய தோட்டத்தில் அரசு மின் இணைப்பு இல்லை. தனியாக சோலார் மின் வேலி அமைக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குட்டி யானை இறந்து கிடந்த இடத்துக்கு மற்ற காட்டு யானைகள் வருகின்றன. அவற்றை விரட்டிய பிறகு பிரேதப் பரிசோதனை நடைபெறும்'' என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.