Published:Updated:

மூன்று கால்களில் நடக்கும் குட்டி யானை! - வால்பாறையில் தாய் யானையின் பாசப் போராட்டம்

கோவை, வால்பாறை அருகே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க முடியாமல் இருக்கும் குட்டி யானையைப் பிரிந்துசெல்லாமல் தாய் யானை முகாமிட்டுள்ளது.

யானை
யானை

கோவை மாவட்டம், வால்பாறை அருகே `நல்லமுடி டீ எஸ்டேட்' உள்ளது. இங்கு, கடந்த ஒரு வாரமாக 16 யானைகளைக் கொண்ட யானைக் கூட்டம் ஒன்று முகாமிட்டிருந்தது. நேற்று முன்தினம் யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. ஆனால், தாய் யானை ஒன்றும் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குட்டியானை ஒன்றும் அங்கிருந்து செல்லாமல் நின்று கொண்டிருந்தன.

வால்பாறை
வால்பாறை

தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் சென்று பார்த்தபோது, அந்தக் குட்டியானைக்குக் காலில் பெரிய கட்டி ஏற்பட்டிருந்ததால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருவது தெரியவந்தது.

இதனால், குட்டியானையைப் பிரிந்துசெல்ல மனமில்லாமல் தாய் யானையும் அதனுடன் சுற்றி வருவதும் தெரியவந்தது. இது குறித்து, வனத்துறையினருக்குத் தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

வால்பாறை
வால்பாறை

வனத்துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ஆனால், குட்டி யானையை விட்டு, தாய் யானை நகராததால், வனத்துறையினரால் சிகிச்சை அளிக்க முடியவில்லை.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “யானையின் வலது பின்னங்காலில் பெரிய கட்டி ஒன்று இருக்கிறது. அதனால், அந்தக் காலை கீழே வைத்து நடக்க முடியவில்லை. மூன்று கால்களில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

கையைக் கடித்த குட்டியானை; வாசனை `கில்லி’ சத்தியன் யானை – 25 ஆண்டுகால அனுபவம் பகிரும் டாக்டர் அசோகன்!

நாங்கள் எவ்வளவு முயற்சிசெய்தும் தாய் யானையைப் பிரிக்க முடியவில்லை. குட்டி யானையின் நிலைமை சற்று கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. அதற்கு டாப்ஸ்லிப் முகாமில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். ஆனால், தாய் யானையிடமிருந்து, குட்டி யானையைப் பிரிப்பது அவ்வளவு எளிதல்ல” என்கின்றனர்.