Published:Updated:

`2 யானைகளுக்குள் நடந்த மோதல்?' -கோவையில் 6 வயது யானைக்கு நேர்ந்த துயரம்

யானை
யானை

கோவையில் இரு யானைகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.

கோவை மாவட்டம், போலுவாம்பட்டி வனச்சரகம், நொய்யல் ஆற்றின் ஓரத்தில் சுமார் 6 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மிகவும் சிரமப்பட்டு தண்ணீர் குடிப்பதாகவும், மேலும் அது அந்த இடத்தை விட்டு நகராமல் இருப்பதாகவும் வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் அந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்தனர்.

யானை உடலில் காயம்
யானை உடலில் காயம்

இதனிடையே, வனத்துறையின் கால்நடை மருத்துவர் திருச்சி யானை முகாமுக்குச் சென்றிருப்பதால், அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான மாற்றுத்திட்டங்கள் குறித்து வனத்துறையினர் யோசித்து வந்தனர்.

அதன்படி, ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் மனோகரனை தொடர்புகொண்டு, யானை இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த யானை சுமார் 1.30 மணி அளவில் கீழே படுத்துத் தூங்க ஆரம்பித்ததாக வனத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் அந்த யானை படுத்த நிலையில் இறந்துவிட்டது.

இறந்த நிலையில் யானை
இறந்த நிலையில் யானை

மருத்துவர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் இறந்த யானையை ஆய்வு செய்தபோது, அதன் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. முக்கியமாக, வாயின் உள்ளே நாக்கு கிழிந்து இருப்பதையும், கீழ்த் தாடையில் குத்தப்பட்ட புண் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை, ``யானையின் உடலில் இருக்கும் காயங்களை வைத்து பார்க்கும்போது, அது வேறு ஒரு ஆண் யானையுடன் சண்டை இட்டதாகத் தெரிய வருகிறது. அதன் உடலில், ஆங்காங்கே தந்தம் குத்திய அடையாளங்கள் தெரிகின்றன. வாயில் வேறொரு யானை குத்தி ஏற்பட்ட காயத்தினால் இந்த யானை உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளது.

யானை உடலில் காயம்
யானை உடலில் காயம்

அதனால்தான் யானை உயிரிழந்திருக்கும்” என்று கூறியுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த யானைக்கு இன்று காலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பகுதியிலேயே அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு